அரிசி மாவில் செய்யும் இடியாப்பத்தை விட இப்படி கோதுமை மாவில் செய்யும் இடியாப்பம் மிகவும் சாஃப்டாகவும், சுவையாகவும் இருக்கும்

idiyappam
- Advertisement -

எப்படி இட்லி, தோசை என்பது நமது பாரம்பரிய உணவாகுமோ, அதுபோல தான் இடியாப்பம், புட்டு என்பதும் பாரம்பரிய உணவாகும். இவ்வாறு இடியாப்பம், புட்டு இவற்றை விசேஷ நாட்களில் தான் பலரது வீடுகளிலும் செய்வதுண்டு. அப்படி இதனை விசேஷ நாட்களில் செய்வதற்கு மிகவும் முக்கியமான காரணம் இவற்றை செய்வதற்கு செய்யப்படும் முன் ஏற்பாடுகள் தான். அரிசி ஊற வைத்து, மாவு அரைத்து அதன் பிறகு தான் இடியாப்பம் சுட வேண்டும். ஆனால் இப்பொழுது நாம் செய்யப்போகும் இந்த கோதுமை மாவு இடியாப்பத்திற்கு இது போன்ற வேலைகள் எதுவும் தேவை இல்லை. வீட்டில் சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் கோதுமை மாவை ஆவி கட்டி சுலபமாக இடியாப்பம் செய்து விடலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த கோதுமை மாவு இடியாப்பத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், உப்பு – அரை ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, சர்க்கரை – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை கப் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவேண்டும் பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பின் மீது வைத்து விடவேண்டும் பிறகு இட்லி தட்டில் ஒரு சுத்தமான துணியை விரித்து கொள்ள வேண்டும் பிறகு அதன் மீது கோதுமை மாவில் சேர்க்க வேண்டும்.

பின்னர் அந்தத் துணியில் 4 ஓரங்களையும் சேர்த்து ஒன்றாக மூடி, இந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்து நிமிடத்திற்கு கோதுமை மாவை வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தின் மூடியை திறந்து, கோதுமை மாவை வெளியே எடுத்து, அதனை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் கோதுமை மாவில் கட்டிகள் இல்லாமல் அதனை நன்றாக உடைத்து விடவேண்டும். பிறகு கோதுமை மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து விடவேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு இட்லி தட்டுகளில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முழுவதுமாக தடவிக் கொள்ள வேண்டும்.

முறுக்கு குழாயில் ஓமப்பொடி செய்வதற்கேற்ற ஜல்லடை இருக்கும் அதனை முறுக்கு குழாயில் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து, அதனை முறுக்கு பிழியும் முறுக்கு குழாயில் சேர்க்க வேண்டும். பிறகு முறுக்கு குழாயை மூடி, இட்லி தட்டின் மீது இடியாப்பம் போன்று பிழிந்துவிட வேண்டும். பின்னர் இடியாப்பம் பிழிந்துவிட்ட இட்லி தட்டுகளை மறுபடியும் இட்லி பாத்திரத்தில் வைத்து, அடுப்பை பற்ற வைத்து, பதினைந்திலிருந்து இருபது நிமிடம் வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோதுமை மாவு இடியாப்பம் தயாராகிவிடும். இதன் மீது தேங்காயைத் துருவி சேர்க்கவேண்டும். பிறகு அதனுடன் சர்க்கரையை தூவி விட்டு சாப்பிட கொடுத்தால் போதும். இதன் சுவை மிகவும் அசத்தலாக இருக்கும்.

- Advertisement -