தோஷங்கள் தீர்ந்து சந்தோஷம் பெருக 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய விநாயகர்கள் யார்? சங்கடங்கள் தீர்க்கும் விநாயகரின் ரகசியங்கள்!

vinayagar-astro
- Advertisement -

விநாயகரை வழிபட்டாலே தோஷங்கள் யாவும் மாயமாய் மறைய கூடிய அற்புதங்கள் நிகழும். ஒவ்வொருவரின் ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய துன்பங்கள் ஏராளம்! அவற்றிலிருந்து எளிமையாக விடுபட்டு விரைவான வெற்றியையும், புகழையும் அடைய 12 ராசிக்காரர்களும் தத்தம் ராசியின் படி வணங்க வேண்டிய விநாயகர் யார்? அவரை எப்படி வழிபட வேண்டும்? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் அதிபதியாகக் கொண்டிருக்கிறீர்கள். மிகுந்த மனோ தைரியம் கொண்ட நீங்கள் உங்களுக்கு சரியென பட்டதை ஒளிவு மறைவின்றி அப்படியே கூறி விடுவீர்கள். இதனால் வரக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டது கிடையாது. உங்கள் ராசியின்படி நீங்கள் வெற்றிகளை குவிக்க ஒன்பது வாரங்கள் சித்தி விநாயகரை வழிபடுவது நலமாகும். சித்தி விநாயகர் எடுக்கும் காரியங்களை, சித்தி செய்பவர் ஆவார்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்த நீங்கள் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டு இருக்கிறீர்கள். சுகபோக வாழ்வு கொடுக்கக்கூடிய சுக்கிர பகவான் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அத்துடன் அன்னையின் அருளும், ஆசீர்வாதமும் கொண்டவர்கள். உங்கள் ராசியில் சந்திரன் உச்சம் பெறுகிறார். ஒவ்வொரு சதுர்த்தி தினத்திலும் மஞ்சள் நிற வஸ்திரம் அணிந்து விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு வாருங்கள். சகல கலைகளிலும் வல்லவராக விளங்க, கல்வியில் சிறந்து விளங்க உங்கள் ராசியின்படி ஸ்ரீ வித்யா கணபதியை வணங்கி வருவது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்த நீங்கள் புதன் பகவானை அதிபதியாகக் கொண்டு இருக்கிறீர்கள். எதிலும் போர்குணம் கொண்ட உங்களுக்கு இருக்கும் திறமைக்கு பல வாய்ப்புகள் அவ்வப்பொழுது வந்து சென்று கொண்டிருக்கும். அதை பயன்படுத்திக் கொள்வதற்கான தடைகள் ஜாதகப்படி வரலாம் என்பதால், நீங்கள் உங்களுடைய ராசியின்படி வெற்றிகள் பல குவிக்க, சகல விதமான செல்வங்களும் அடைய லட்சுமி கணபதியை வழிபடுவது நலம் தரும்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்த நீங்கள் சந்திரனை அதிபதியாகக் கொண்டிருக்கிறீர்கள். பல துறைகளில் கால் பதிக்கக்கூடிய திறமை உங்களுக்கு இருக்கும். கலைகளிலும், கற்பனை வளங்களிலும் வல்லவர்களாக இருப்பீர்கள். உங்களுடைய ராசியின்படி நீங்கள் வெற்றிகள் குவிக்க ஏரம்ப கணபதியை வழிபடுங்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்த நீங்கள் சூரியனை அதிபதியாகக் கொண்டவர்கள். எப்பொழுதும் மற்றவர்களை தலைமை ஏற்று நடத்தும் பண்பு உங்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை, திறமை அதிகம் கொண்ட நீங்கள் மென்மேலும் வெற்றிகள் பல தடை இல்லாமல் குவிக்க ஸ்ரீ விஜய கணபதி வழிபட்டு வாருங்கள். 9 ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஹோரையின் பொழுது விநாயகர் சன்னதிக்கு சென்று சிதறு தேங்காய் உடையுங்கள்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதன் பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். எல்லா காரியங்களிலும் முன் நின்று நடத்திக் கொடுக்கக்கூடிய திறமை உங்களுக்கு இருக்கும். புத்திசாலித்தனம் உங்கள் ரத்தத்திலேயே ஊறியதாக இருக்கிறது. நீங்கள் தடைகளை தாண்டிய பல வெற்றிகளை அடைய மோகன கணபதியை வழிபட்டு வருவது நல்லது. குடும்ப ஒற்றுமைக்கு பிரச்சனைகள் இல்லாத இல் வாழ்க்கைக்கு வளர்பிறை சதுர்த்தியில் தம்பதியராக கணபதியை வழிபடுங்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டவர்கள். எப்பொழுதும் நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டும், நீதி நிலை நாட்ட வேண்டும் என்கிற கொள்கை உடையவராக இருக்கும் லட்சியவாதிகள் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் தடையில்லாத வெற்றிகள் பல குவிய பஞ்சமுக விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கணபதி மந்திரங்களை உச்சரித்து விநாயகர் வழிபாடு மேற்கொள்ளுங்கள். சகல ஐஸ்வர்யங்களும், லட்சுமி கடாட்சமும் பெருகும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் செவ்வாயை அதிபதியாகக் கொண்டு இருக்கிறீர்கள். எப்பொழுதும் உற்சாகத்திற்கு குறைவில்லாமல் இருக்கக்கூடிய உங்களுடைய ராசிக்கு பல தடைகள் அவ்வப்பொழுது வந்து செல்லும். உங்களுடைய தடைகள் யாவும் நீங்கி, நீங்கள் வெற்றியாளராக இருக்க சக்தி கணபதியை வழிபடுங்கள். உடலிலும், உள்ளத்திலும் சக்திகளும் நிறைவான செல்வமும் கிடைக்க கணபதி வழிபாடை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்த நீங்கள் குரு பகவானை அதிபதியாகக் கொண்டு விளங்குகிறீர்கள். குருவின் பார்வை உங்களுக்கு பல தடைகளை தாண்டிய முன்னேற்றத்தை கொடுக்கும். ஜாதக ரீதியான தோஷங்கள் நீங்கவும், வெற்றிகள் பல குவியவும் உங்களுடைய நேர்மைக்கு உரிய பாராட்டுக்கள் கிடைக்கவும், சங்கடஹர கணபதியை வழிபடுவது சிறப்பு. சங்கடங்களை தீர்க்க விநாயகர் வழிபாடு உங்களுக்கு எப்பொழுதுமே துணையாக நிற்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிபகவானை அதிபதியாகக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த அளவிற்கு துன்பங்கள் வருகிறதோ, அந்த அளவிற்கு இன்பங்களும் ஒரு சேர வந்து சேரும். மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறவும், யோகங்கள் பல கிடைக்கவும் யோக கணபதியை வழிபடுங்கள். பிள்ளையார்பட்டியில் இருக்கக்கூடிய கற்பக விநாயகரை வாழ்வில் ஒரு முறையேனும் சென்று தரிசித்து வாருங்கள், நன்மைகள் பல பெருகும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனிபகவானை அதிபதியாக கொண்டு விளங்குகிறீர்கள். நீங்களும் உங்களுடைய காரியங்களில் வெற்றி பெற சித்தி கணபதியை வழிபட்டு வரலாம். புதிய புதிய விஷயங்களில் ஆர்வத்தை செலுத்தும் உங்களுக்கு பல கலைகளில் வெற்றிக் காணக்கூடிய யோகமும் உண்டாகும். தினந்தோறும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்கள் குரு பகவானை அதிபதியாக கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கால் பதித்த இடமெல்லாம் வெற்றியை காணவே விரும்புவீர்கள். அதற்கான போராட்ட குணமும், விடாப்பிடியான முயற்சியும் உங்களிடம் எப்பொழுதும் காணப்படுகிறது. எதிலும் தோல்வி தழுவாத வெற்றி காண அரசமரத்தடி விநாயகரை சதுர்த்தி நாட்களில் வணங்கி வாருங்கள். மேலும் சகல செல்வங்களும் கிடைக்க பால கணபதியை நீங்கள் வழிபட்டு வருவது நலம் தரும்.

- Advertisement -