நீங்கள் சமையலில் இதுவரை அறியாத ரகசியமான 6 விஷயங்கள் உங்களுக்காக இதோ!

cooking-secret

சமையல் கலை என்பது மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது. உழைத்து சம்பாதிப்பது எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்கு தான். இப்போது இருக்கும் கலப்பட உலகில் கண்டதையும் சாப்பிட்டு ஆயுளை குறைத்து கொள்வதை விட ஆரோக்கியமான நல்ல உணவு வகைகளை சமைத்து சாப்பிட்டால் உடல் பலம் மற்றும் மனோ பலம் இரண்டுமே கூடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இத்தகைய சமையல் கலையில் சில நுண்ணிய விஷயங்கள் இதுநாள் வரை நமக்குத் தெரியாமல் கூட இருந்திருக்கலாம். அவைகள் தெரிந்து கொள்வதன் மூலம் நம்மை நாமே மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும்.

Cook Apprentice

விதவிதமான உணவு வகைகளை சமைத்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருப்பவர்கள், தினமும் ஒரே வகையான உணவு வகைகளை சுவைப்பவர்கள் சற்று வித்தியாசமாக இந்த 6 குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகமாக உங்களுக்கு நிச்சயம் இருக்கும். அது என்னென்ன? என்பதை பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

1. பொதுவாக சப்பாத்தி அடிக்கடி இரவு உணவில் சேர்ப்பது வாடிக்கையாக இருக்கும். பகலை விட இரவில் தான் சப்பாத்தி அதிகமாக சாப்பிடுகிறார்கள். இவ்வகையான சப்பாத்தியில் சத்துக்கள் கிடைக்க சப்பாத்தி மாவுடன் பேரிச்சம் பழத்தை பால் விட்டு அரைத்து சேர்த்து சுட்டால் எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக் கொள்ள சப்பாத்திக்கு ஒன்றுமே தேவைப்படாது இனிப்பாக சுவையாக இருக்கும்.

stuffed-chappathi1

2. மிளகாய் வற்றலை நீங்கள் வறுக்கும் பொழுது ஒருவிதமான நெடி அறை முழுவதும் பரவி இருக்கும். இதனால் இருமல், எரிச்சல் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதற்கு மிளகாய் வற்றலில் இருக்கும் காம்புகளை நீக்கி விட்டு பின்பு வறுத்தால் நெடி அடிக்காமல் கமறாமல் இருக்கும்.

- Advertisement -

3. நீங்கள் அடைக்கு மாவு தயாரித்து வைத்திருந்தால்! அந்த மாவு அதிகம் புளித்து விட்டால் என்ன செய்வது? என்று கவலைப்படத் தேவையில்லை. இட்லி சட்டியில் இட்லி போல் ஊற்றி அவித்து எடுத்து பின்பு உதிர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள், வெங்காயம் ஆகியவற்றை தாளித்தம் செய்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரட்டி விட்டால் போதும். அட்டகாசமான சுவையில் அடை காரப்புட்டு தயாராகிவிடும்.

adai

4. எப்போதும் வெரைட்டி ரைஸ் எனப்படும் கலந்த சாதம் தயாரிக்கும் பொழுது அதில் சேர்க்கப்படும் இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றை யாரும் சாப்பிட மாட்டார்கள். வீணாக தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால் இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி பாருங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை மட்டும் சின்ன ஜாரில் திருகி தாளிக்கும் பொழுது வதக்கி விட்டு செய்தால் சுவை அதிகமாவதுடன் வீணாகவும் செய்யாது.

lemon-sadam

5. வாழைத்தண்டு எப்படி செய்து கொடுத்தாலும் ஒரு சிலர் தொட்டு பார்க்க கூட மாட்டார்கள். நிறைய பேருக்கு வாழைத் தண்டு நார் நாராக வருவதால் அதனை பிடிக்காமலேயே போய்விட்டது. ஆனால் வாழைத் தண்டில் இருக்கும் நார்சத்து வயிற்றில் இருக்கும் கல்லை கூட சுலபமாக வெளியேற்ற கூடியவை. பக்கோடா செய்ய கலந்து வைத்த மாவில் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து வெங்காய பக்கோடா போல செய்தால் வித்தியாசம் தெரியாமல் எல்லோருமே சாப்பிட்டு விடுவார்கள். வாழைதண்டு பக்கோடா என்று யாரிடமும் கூறி விடாதீர்கள்.

vazhai thandu

6. மணத்தக்காளி கீரை வயிற்றுப் புண்ணை ஆற்றும். இதன் கசப்புத் தன்மை காரணமாக தவிர்த்து விடுகிறார்கள். மணத்தக்காளிக் கீரையுடன் பருப்பு சேர்த்து, உப்பு, புளி, மிளகாய் தேவையான அளவுக்கு வைத்து துவையலாக அரைத்து கொடுத்தால் சூப்பர் சுவையுடன் வித்தியாசமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த 6 குறிப்புகளும் நிச்சயம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
இப்படி ஒரு கத்தரிக்காய் குருமாவை இதுக்கு முன்னாடி நீங்க சாப்பிட்டு இருக்கவே முடியாது. புதுவிதமான இந்த ரெசிபிய மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.