இப்போது பலாப்பழம் சீசன். பலாக்கொட்டைகள் கடைகளில் நமக்கு சுலபமாக கிடைக்கும். இந்த பலாக்கொட்டையை வைத்து எளிமையான முறையில் அசைவ சுவையில் ஒரு வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இப்படி ஒரு வறுவல் செய்தால், சிக்கன் வறுவல் கேட்கவே மாட்டாங்க. அந்த அளவுக்கு இந்த வறுவலின் ருசி இருக்கும். சுட சுட சாதத்தில் இதை போட்டு பிசைந்து சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே கிடையாது. அவ்வளவு ருசி நிறைந்த ரெசிபியை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா. வாங்க பார்க்கலாம்.
செய்முறை
1/4 கிலோ அளவு பலாக்கொட்டைகளை எடுத்துக் கொண்டால், பின் சொல்ல கூடிய அளவுகள் எல்லாம் சரியாக இருக்கும். கால் கிலோ அளவு பலாக்கொட்டையை கழுவி விட்டு குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து தோல் உரித்து, இரண்டாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு – 1/2 ஸ்பூன், பட்டை – 2 சின்ன துண்டுகள், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, சேர்த்து நன்றாக வதங்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் அளவு வதங்கி வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், போட்டு வதக்குங்கள். இஞ்சி பூண்டு பச்சை வாடை நீங்கியதும் நறுக்கிய தக்காளிப் பழம் – 2 போட்டு நன்றாக வதக்கி விடவும்.
அடுத்தபடியாக வேகவைத்து வெட்டி வைத்திருக்கும் பலாக்கொட்டைகளை இதில் போட்டு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், தனியா தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 3/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, போட்டு எண்ணெயிலேயே இந்த மசாலா பொருட்களை 2 முறை வதக்கி விட்டு, 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி வேக வையுங்கள். வெங்காயம் தக்காளி மற்றும் மசாலா பொருட்கள் எல்லாம் வெந்து சுண்டி, எண்ணெய் பிரிந்து வரும்.
அதுவரைக்கும் ஒரு மூடியை போட்டு வையுங்க. இதற்குள் 3 டேபிள்ஸ்பூன் தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 1/2 டம்ளர் – திக்கான தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் மூடி வைத்திருக்கும் வறுவல் தயாராகி வந்ததும், இந்த தேங்காய் பாலை அதில் ஊற்றி, இரண்டு நிமிடம் நன்றாக கலந்து விடுங்கள்.
இறுதியாக இதில் மிளகுத்தூள் – 1 ஸ்பூன் தூவி, ஒரு நிமிடம் வரை கலந்து விட்டு அடுப்பை அணைத்தால் சூப்பரான பலாக்கொட்டை வறுவல் தயார். சுட சுட இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். இது கறி வருவலா என்று எல்லோரும் கேட்பார்கள். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.
தேங்காய் பால் உங்களுடைய விருப்பம் தான். சேர்த்தாலும் சேர்க்கலாம். சேர்க்காமல் சாப்பிட்டாலும் நல்லாதான் இருக்கும். ஆனால் தேங்காய் பால் சேர்ப்பது கூடுதல் சுவை கொடுக்கும். இது பார்க்கும்போது அப்படியே செமி கிரேவி போல இருக்க வேண்டும். கறி தொக்கு செய்வோம் அல்லவா, அதே போல தான் இந்த பலாக்கொட்டை தொக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா இந்த சீசன்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.