ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம். தெய்வ வழிபாட்டிற்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஆடி18 போன்ற நாட்கள் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததோ அந்த அளவிற்கு ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரமும் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு முறை கிருத்திகை நட்சத்திரம் என்பது வருகிறது.
ஜூலை மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்றும் கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியே ஆடி கிருத்திகை என்றும் அந்த நாளில் தான் பல ஆலயங்களில் சிறப்பு மிகுந்த வழிபாடு நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ஆலயங்களில் ஜூலை மாதம் 20ஆம் தேதி ஆடி கிருத்திகையாக கொண்டாடப்படுகிறது என்பதால் அந்த நாளிலும் நாம் முருகப் பெருமானை வீட்டில் எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி கிருத்திகை வழிபாடு
முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களின் நினைவாக கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்கிறோம். அவ்வாறு வழிபாடு செய்பவர்கள் பரணி நட்சத்திர நாளிலேயே விரதம் இருக்க ஆரம்பித்து கிருத்திகை நட்சத்திரம் முழுவதும் விரதம் இருப்பார்கள். மாலை நேரத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு மிகுந்த அபிஷேகங்களை செய்து நெய்வேத்தியங்களை வைத்து அவருக்கு முன்பாக 6 அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமானின் கவசங்களையும் மந்திரங்களையும் கூறி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது பலருக்கும் இருக்கிறது.
ஒரு சிலர் விரதம் இருக்காமல் வழிபாட்டை மட்டும் செய்வார்கள். ஒரு சிலர் ஆலயத்திற்கு சென்று முருக தரிசனத்தில் ஈடுபடுவார்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் முருக வழிபாட்டை நாம் செய்யும் பொழுது முருகனின் அருளை பரிபூரணமாக கிருத்திகை நட்சத்திர நாளில் பெற முடியும். இந்த முறை ஜூலை மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கிருத்திகை நட்சத்திரம் என்பது வருகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதமிக்கக்கூடிய நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ முருக வழிபாட்டை நம்முடைய வீட்டில் நம் மேற்கொள்ளலாம்.
வீட்டில் முருகப் பெருமானின் சிலை, வேல், ஓம் இருக்கும் பட்சத்தில் அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பல வகையான அபிஷேகங்களை செய்வதை விட ஒரே ஒரு அபிஷேகத்தை நாம் செய்தோம் என்றால் முருகப்பெருமானின் மனம் குளிர்ந்து நமக்கு வேண்டிய வரம் கிடைக்கும். அதுதான் மோர் அபிஷேகம். ஒருவேளை வீட்டில் சிலை, வேல், ஓம் இல்லை என்பவர்கள் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக மோர் சாதத்தை வைத்து வழிபாடு செய்யலாம். இதோடு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்கவேண்டும்.
பிறகு ஒரு தட்டில் ஆறு வெற்றிலைகளை வைத்து அதில் அகல் விளக்கை வைத்து வடக்கு திசை பார்த்து நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு முருகப்பெருமானின் “ஓம் சுப்பிரமண்யாய நமஹ” என்னும் மந்திரத்தை 111 முறை கூறி முருகப்பெருமானுக்கு வாசனை மிகுந்த மலர்களாலோ அல்லது செவ்வரளி மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: எளிமையான வேல் வழிபாடு
எந்த மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும் கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது முருகனின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் இந்த முறை கிருத்திகை நட்சத்திர நாளில் இப்படி அபிஷேகம் செய்து வழிபடுபவர்களுக்கு முருகனின் அருளால் அனைத்தும் நன்மையாகவே நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.