கற்றாழை சட்னி செய்முறை

aloe vera chutney
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு தேவையான நன்மை தரக்கூடிய பொருட்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அப்படி உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் பச்சையாக அதைப் போகும் வழியில் எடுத்து மென்று தின்று முழுங்கி ஆரோக்கியமாக இருந்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலத்தில் பார்த்து செய்கிறோம் என்ற பெயரில் சத்துக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு வெறும் சக்கையை மட்டுமே உணவாக கொடுக்கிறோம். இதனால் பல உபாதைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அந்த வகையில் இன்றைய சமையல் குறிப்பு குறித்த பகுதியில் உடல் ஆரோக்கியத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய கற்றாழையை வைத்து சத்துக்கள் குறையாமல் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய சட்னியை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

உடல் உஷ்ணத்தை குறைக்க கூடிய அற்புத ஆற்றல் மிக்கதாக திகழ்வதுதான் கற்றாழை. கற்றாழையை அடிக்கடி நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிறு மற்றும் வாய் சம்பந்தப்பட்ட புண்கள் ஆறும். அல்சர் நீங்கும். உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் கரையும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் நீங்குவதற்கும் இது உதவி புரிகிறது. இதை அப்படியே ஜூஸாக சாப்பிடுவது மிகவும் நல்லது என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுத்துக் கொண்டால் நஞ்சாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கற்றாழை நறுக்கியது – ஒரு கப்
  • வெங்காயம் – 2
  • கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
  • வர மிளகாய் – 7
  • பூண்டு – 10 பல்
  • புளி – எலுமிச்சை அளவு
  • கருவேப்பிலை – 2 இனுக்கு
  • மிளகு – 12
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  • நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

கற்றாழையை முதல் நாளே செடியிலிருந்து நறுக்கி தனியாக வைத்து விட வேண்டும். மறுநாள் அதில் இருக்கக்கூடிய மஞ்சள் திரவம் அனைத்தும் போயிருக்கும். இப்பொழுது கற்றாழையின் முட்களையும் தோல் பகுதி அனைத்தையும் நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து அதை 10 முறை தண்ணீரை ஊற்றி அலச வேண்டும்.

கற்றாழியில் இருக்கக்கூடிய வளவளப்புத் தன்மை நீங்கும் படி கழுவ வேண்டும். பிறகு இதை ஒன்றிரண்டாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு இவை மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, புளி இவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

இதனுடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம், பூண்டு அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு கற்றாழையை சேர்த்து ஒரு நிமிடம் மட்டுமே அடுப்பில் வைத்து வதக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். வதங்கிய இந்த பொருட்கள் அனைத்தும் ஆரிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய கற்றாழையை பயன்படுத்தி அருமையான கற்றாழை சட்னி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: பாகற்காய் கிரேவி செய்முறை

இதை கற்றாழை சட்னி என்று நாம் சொன்னால் கூட நம்பாத அளவிற்கு மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -