மனிதனாக பிறந்த நீங்கள் இவ்வுலகில் செய்ய மறக்கவே கூடாத ஒரு தானம் என்ன? எந்த தானம் செய்யாவிட்டாலும் இந்த தானத்தை செய்ய மறந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

dhanam-karnan
- Advertisement -

தானத்தின் தலைவனாக போற்றப்படும் கொடை வள்ளல் கர்ணன். இந்தக் கர்ணன் தன் வாழ்நாளில் செய்யாத தானமே கிடையாது. யார் எதை கேட்டாலும் கொடுத்துவிடும் இவர், தன் வாழ்நாளில் செய்யாத ஒரு தானம் உண்டு! இந்த தானத்தை அவர் செய்யாததனால் அவருக்கு ஏற்பட்ட கதி என்ன? மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் செய்ய மறக்க கூடாத தானம் என்ன? ஏன் அந்த தானத்திற்கு அவ்வளவு சிறப்புகள் கூறப்படுகிறது? என்கிற சுவாரசிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தானத்தில் சிறந்த தானம் என்று கேட்டால் அவரவருக்கு ரத்ததானம், கண் தானம், அன்னதானம் என்று தங்களுக்கு தோன்றியதை கூறி விடுவார்கள். எந்த நேரத்தில் எந்த தானம் செய்ய வேண்டுமோ, அந்த தானத்தை செய்யும் பொழுது அது சிறந்த தானமாக மாறுகிறது எனவே இது தான் சிறந்த தானம் என்று எதையும் அவ்வளவு சுலபமாக கூறிவிட முடியாது. அப்படி இருக்க இந்த தானத்தை சிறந்த தானம் என்று அங்கீகரிப்பதன் காரணம் என்ன? அது என்ன தானம்?

- Advertisement -

தானத்தில் உயர்ந்த தானம் அன்னதானம் ஆகும். ஏன் அன்னதானத்தை உயர்வாக கருதுகிறோம் என்றால், எந்த ஒரு தானம் நாம் செய்தாலும் அதைப் பெற்றுக் கொள்பவர்கள் திருப்தி கொள்வது இல்லை. ஆனால் அன்னதானம் செய்து பாருங்கள், போதும் போதும் என்று மனதார, வயிறார கூறுவது உண்டு. எனவே தான் மற்ற தானங்களை காட்டிலும், அன்னதானம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

மகாபாரத போரில் மடிந்த கர்ணன் சுவர்க்க லோகத்திற்கு சென்றார். பொதுவாக சொர்க்கம் சென்றவர்களுக்கு பசிக்கவே செய்யாதாம். இது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்க நமக்கு மட்டும் ஏன் இப்படி பசி எடுக்கிறது? பசியின் இந்த கொடுமையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! இதற்கு காரணம் என்ன? என்று யோசித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நாரதர் அங்கு வரவே, நாரதரை அழைத்து எனக்கு இப்படி ஏன் அகோர பசி எடுத்துக் கொண்டிருக்கிறது? என்னால் பசியை தாங்க முடியவில்லை! சுவர்கத்தில் பசிக்காது என்பது தானே நியதி! அப்படி இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நாரதரே என்று கேட்டார்.

- Advertisement -

அதற்கு நாரதர், நீ பூலோகத்தில் இருக்கும் பொழுது செய்யாத தானம் இல்லை ஆனால் அன்னதானத்தை செய்ய மறந்து விட்டாயே! நீ ஒருவருக்கும் அன்னத்தை தானமாக கொடுத்தது இல்லை, அதனால் தான் சுவர்க்க லோகத்தில் உனக்கு பசி எடுக்கிறது. அன்னதானம் செய்யாததன் பலனை தான் இப்போது நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறினார். சரி அதற்கு இப்போது நான் என்ன பரிகாரம் செய்வது? என்று கேட்டார்.

நாரதர் உன் வலக்கை ஆள்காட்டி விரலை எடுத்து வாயில் வைத்துக் கொள் பசிக்காது என்று கூறிவிட்டார். அதேபோல கர்ணர் வாயில் ஆள்காட்டி விரலை வைத்ததும் பசி தீர்ந்தது ஆனால் ஆள்காட்டி விரலை வாயில் இருந்து எடுத்ததும் மீண்டும் பசித்தது. இதன் காரணத்தை நாரதரிடமே கேட்டார், நீ தெரிந்தோ தெரியாமலோ அன்னதான கூடம் எங்கே இருக்கிறது? என்று ஒருவர் கேட்டதற்கு, உன் ஆள்காட்டி விரலை நீட்டி வழியை காண்பித்தாய். அதனால் தான் உன்னுடைய ஆள்காட்டி விரல் மட்டும் அன்னதான பலனை பெற்றது. எனவே அதை நீ வாயில் வைக்கும் பொழுது பசிக்காமல் இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்.

உண்மையிலேயே ஒரு மனிதன் செய்ய வேண்டிய முக்கியமான தானம் அன்னதானம். அன்னத்திலிருந்து தான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை உயிர்களும் சக்தியுற்று கிடக்கின்றன எனவே இயன்றவரை ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அதிக அளவு அன்னதானத்தை செய்ய வேண்டும். அப்போதுதான் சொர்க்க லோகத்தில் அவனுக்கு பசி எடுக்காமல் இருக்கும். நம்மிடம் தானம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை என்றாலும், கண்டிப்பாக அன்னம் இருக்கும் எனவே அன்னத்தை எல்லா மனிதனாலும் தானம் செய்யக்கூடிய ஒரு சிறப்பம்சமும் உண்டு.

- Advertisement -