கமகம வாதத்துடன் மிகவும் ருசியான அரைத்து வைத்த சாம்பாரை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். தட்டு நிறைய சாதம் கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

sambar
- Advertisement -

ஒவ்வொருவர் வீட்டிலும் காலை இட்லி, தோசை, மதியம் சாதம், இரவு மீண்டும் இட்லி, தோசை அல்லது பூரி, சப்பாத்தி என விதவிதமாக செய்யப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு உணவிற்கும் ஏற்ற சைட் டிஷ்களும் செய்யப்படுகிறது. இதில் அனேகமாக அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் அதிகமாக செய்யப்படுவது சாம்பாராக தான் இருக்கும். இந்த சாம்பாரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சமைக்கின்றனர். சாம்பாரை காலையில் செய்துவிட்டால் போதும். அதனை மூன்று வேளைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவும் சாம்பார் சுவையாக இருக்கும். அவ்வாறு தேங்காய் அரைத்து விட்டு செய்யக்கூடிய இந்த சாம்பாரை ஒருமுறை செய்து வைத்தால் போதும். மீண்டும் இதனை எப்போது செய்வீர்கள் என்று உங்கள் வீட்டிலுள்ளவர்கள் உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான சாம்பாரை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 150 கிராம், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, வெங்காயம் – 2, தக்காளி – 4, தேங்காய் – 3 சில்லு, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், வர மிளகாய் – 4, சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு குக்கரில் துவரம்பருப்பை சேர்த்து, அதனை சுத்தமாக கழுவிக் கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு, குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து, தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பிறகு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதனை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், 3 தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை பொன்னிறமாக வதங்கியதும் இவற்றுடன் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இதனுடன் உப்பு சேர்த்துக் கொண்டு, கரைத்து வைத்துள்ள புளி கரைசலையும் சேர்த்து, தட்டு போட்டு மூடி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 3 சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து, அதனுடன் ஒரு தக்காளியையும் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். சாம்பார் நன்றாக கொதித்ததும் தட்டை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் கமகம சாம்பார் தயாராகிவிடும்.

- Advertisement -