நீங்கள் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இங்கு வழிபாடு செய்ய முடியும். ஏன் தெரியுமா?

தமிழ்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வருடங்கள் வரை என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு 100 ஆண்டுகள் வரை வாழும் பாக்கியமும் இறைவனின் அருளால் கிடைக்கிறது. நூறாண்டு கால வாழ்க்கையில் உலகில் எத்தனையோ வகையான அதிசயங்கள் நடந்து முடிந்துவிடுகின்றன. அதில் ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக அதிசயமாகவும், நம் நாட்டில் வாழ்கின்ற மனிதர் ஒருவர் அதிகபட்சமாக தன் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே காணக்கூடிய ஒரு தெய்வீக வைபவமாக “காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளல் விழா இருக்கிறது. இந்த அத்திவரதர் குறித்து மேலும் பல விடயங்களை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

vishnu perumal

ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில் இருக்கின்ற புகழ் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று தான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். புராணங்களின் படி பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர். அவர்தான்திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறார். தற்போதைய காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் அத்திவனத்தில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.

இந்நிலையில், யாகத்தை காப்பதற்காக யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் பூண்டார். இதனால் வெட்கிய சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிறகு காயத்ரி, சாவித்ரி துணையுடன் பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம். யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பால்படுத்தபட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் கூறியருளினார்.

தன் யாகத்தை காத்தருளிய பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக் கொண்டு அத்திமரத்தில் வடிவமைத்தார் பிரம்ம தேவர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஐதீகம் பின்பற்றப்படுகிறது.

- Advertisement -

மேலும் தென்னகத்தின் மீது இஸ்லாமிய படையெடுப்பு நடைபெற்ற காலத்தில் அத்தி வரதர் சிலை குளத்தில் போட்டு மறைக்கப்பட்டதாகவும், 40 ஆண்டு கால இடைவெளி காலத்தில் குளத்திலிருந்து அத்திவரதர் சிலை கிடைத்ததால் அத்தி வரதருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து மீண்டும் குளத்தில் போட்டு ஒவ்வொரு 40 வருடம் கழித்தும் குளத்திலிருந்து வெளியே எடுத்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யும் வைபவத்தை பின்பற்றத் தொடங்கினர். கடந்த நூற்றாண்டில் 1939 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் அத்திவரதர் சிலை குளத்திலிருந்து வெளியில் எடுத்து பூஜைகள் செய்யப்பட்டன.

அந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு கடந்த ஜூன் 28-ஆம் தேதி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியே எடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஜூலை மாதம் 1 தேதி முதல் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருமேனிக்கு தினமும் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளது. 48 நாட்களுக்கு பிறகு விடையார்த்தி பூஜைகள் செய்யப்பட்டு அத்தி வரதர் மீண்டும் கோயில் குளத்தில் இறக்கப்படுவார். இதன் பிறகு 2059 மற்றும் 2099 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இந்த நூற்றாண்டில் காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். எனவே இப்போது நடைபெறும் அத்தி வரதர் விழா மட்டுமே அனேகமாக நம் அனைவருக்கும் அத்தி வரதரை தரிசித்து வழிபட கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கவும் கூடும்.

காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரின் தரிசனத்திற்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 முதல் 500 வரை தரிசனம் மற்றும் அர்ச்சனைகான டிக்கெட்டுகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் பக்தர் தங்கள் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வருமாறு கோவில் நிர்வாகம் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அத்திவரதர் வைபவத்திற்காக காஞ்சிபுரம் நகரத்திற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரங்களை அருளும் வரதராஜனாக இருக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீ அத்திவரதரை வழிபட்டு வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிக்கலாமே:
உங்கள் குழந்தைக்கு சூட்டக்கூடிய சிவனின் 1000 பெயர்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadar darshan 2019 in Tamil. It is also called as Kanchipuram varadaraja perumal temple in Tamil or Athi varadar darshan dates in Tamil or Kanchi varadaraja perumal in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.