பாவம் செஞ்சா சொர்க்கம் போக முடியாது என்பவரா நீங்கள்?

வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கும் மக்களில் சிலர் வெறும் வாயால் தான் வடை சுடுகின்றனர். செயல் என்று வரும் பொழுது அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுகிறது. யாரும் யாரையும் ஏமாற்றலாம் ஆனால் இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் கண்களிலிருந்து எவராலும் தப்பமுடியாது அல்லவா? பாவம் செஞ்சா நரகத்திற்கு தான் போவோம் என்பது எவ்வளவு உண்மையோ? அவ்வளவு உண்மை பாவம் செஞ்சாலும் சொர்க்கம் போக முடியும் என்பதும். அது எப்படி சாத்தியம்? என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

heaven

ஒரு முறை சிவனுக்கு உகந்த சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் ஈசனுடன் பார்வதிதேவியும் சேர்ந்து பூலோகம் வந்தனர். அங்கு வாரணாசி என்ற ஊரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சிவன் கோவிலை சுற்றிலும் அலைகடலென திரண்டு இருந்தனர். கோவில் முழுவதும் கோலாகலமான அலங்காரங்களுடன் ஜெகத்ஜோதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி பக்தர்களின் அலைமோதல் அதிகமாக இருந்தது. அப்போது திருடன் ஒருவன் திருடிய காசில் பயணம் செய்து வாரணாசி வந்தடைந்தான்.

அந்நேரத்தில் பார்வதி தேவி குவிந்திருக்கும் இத்தனை பக்தர்களையும் பார்க்கும் பொழுது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது? இவர்கள் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். ஆனால் சொர்க்கத்தில் இடம் இருக்குமா? என்று தான் தெரியவில்லை. இவ்வளவு பேரன்பு கொண்ட பக்தர்களை காணும் போது உள்ளம் மகிழ்கிறது என்று ஈசனிடம் கூறிக் கொண்டிருந்தார். பார்வதி தேவியின் இச்செயலை கண்டு ஈசனுக்கு சிரிப்பு வந்து விட்டது. அவரின் அறியாமையை நினைத்து செய்வதறியாது நின்றார். ஈசன் பார்வதி தேவியிடம் இங்கே அலைமோதிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் பல விதமான எண்ணங்களையும், ஆசைகளையும் கொண்டவர்கள். இவர்களுக்கு கூட சொர்க்கம் போக வேண்டும் என்ற ஆசை இருக்காது என்று கூறி சிரித்தார்.

sivan-parvathi

சொர்க்கம் போவதற்கு மனதில் தூய்மையான அன்பும், நேர்மையான குணமும் நிறைந்திருக்க வேண்டும். இவர்களில் வெகு சிலரே சுவர்க்கம் போக முடியும். என்னுடன் வா! நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என்று கூறி பார்வதி தேவியை ஈசன் கோவிலுக்குள் அழைத்து சென்றார். அங்கு சென்றவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தம்பதிகளை போல உங்களை உருமாற்றிக் கொண்டு அமர்ந்து கொண்டனர். தாகம் கொண்ட கணவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில் மனைவியானவர் முடியாத நிலையில் நீருக்காக கையேந்தி கொண்டிருப்பது போல் காட்சிப்படுத்தினர்.

- Advertisement -

கோவிலுக்குள் புனித கங்கை நீருடன் லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்வதற்கு அவ்வளவு பேரும் கங்கை நீரை எடுத்து சென்று கொண்டிருந்தனர். தங்களை கடப்பவர்களிடம் மன்றாடி, என் கணவரை காப்பாற்ற சிறிது தண்ணீர் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டு இருந்தார் அந்த மனைவி. அத்தனை பேரிடமும் புனித நீர் இருந்தும் ஒருவரும் உதவி செய்ய முன்வரவில்லை.

kasi

சிலர் அவர்களின் கோலத்தைக் கண்டு அவளை திட்டிவிட்டு சென்றனர், சிலர் இங்கெல்லாம் உட்காரக் கூடாது வெளியே போங்கள் என்று அதட்டிவிட்டு சென்றனர், இன்னும் சிலர் பூஜைக்காக இந்த நீரை கொண்டு செல்கிறோம். பூஜை முடிந்தபின் பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்றனர், மேலும் ஒரு சிலர் இது போன்றவர்களை அனுமதிக்கக் கூடாது. பக்தர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறிக் கூச்சலிட்டனர்.

அவர்களின் பரிதாப நிலையை கண்டு ஒருவருக்கும் மனம் இறங்கவில்லை. பல பேரிடம் திருடி பிழைக்கும் திருடனாக இருந்து கொண்டும் அவர்களைப் பார்த்து அந்த திருடன் ஓடிச் சென்று, ஐயா! எனக்கு திருடி தான் பழக்கம். நன்மை செய்து பழக்கமே கிடையாது. ஒருவரை பார்த்து நான் மனம் இறங்குவது இது தான் முதல் முறையாகும். உங்களை பார்க்க மிகவும் பாவமாக இருக்கிறது என்று கூறி தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்தான்.

siva-parvathi

உடனே அந்த திருடனுக்கு அம்மையும், ஈசனும் தங்கள் சுயரூபத்தில் காட்சியளித்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் நிறைந்த அக்கோவிலில் ஒருவருக்கும் உண்மையான அன்பும், இரக்கமும் இல்லை என்பது விளங்குகிறது. திருடனாக இருந்தும், பாவம் செய்தவனாக இருந்தும் உனக்கு நல்ல மனம் இருந்தது. எனவே நீயே சொர்க்கம் போவதற்கு தகுதியானவன் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினர்.

இதிலிருந்து புரிகிறதா? பாவம் செய்து விட்டு என்ன தான் நீங்கள் கோவில், குளம் என்று சுற்றினாலும், தானம், தர்மம் செய்து புண்ணியம் தேடி கொண்டாலும் மனதளவில் தூய்மையாக இருப்பவர்களே சொர்க்கம் போக முடியும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்பதை விட நம் மனதால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? நல்ல எண்ணங்களை விதைத்து கொண்டிருக்கிறோமா? என்பதில் தான் சொர்க்கம் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சுலபமான பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Way of heaven. Who will go to heaven. Pavam in tamil. Swargam narakam. Sorgam endral enna. Sorgam eppadi irukkum.