புரட்டாசி மாசத்துல கறி செய்யறாங்கன்னு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் வந்து கேக்குற அளவுக்கு காலிபிளவர் வறுவல் செய்து அசத்துங்க.

cauliflower fry
- Advertisement -

புரட்டாசி மாசம் பிறந்திருச்சு இனிமேல் அசைவத்திற்கு இடமே இல்லை. அப்படின்னு வருத்தப்படுறவங்களுக்கு அசைவ சுவையில் சைவத்தை செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் மனம் திருப்தி அடையும். அசைவம் சாப்பிடுவது போலே நினைத்துக் கொண்டு சைவத்தை மனதார சாப்பிட்டு ருசிப்பார்கள். அந்த வகையில் இன்று நாம் அசைவ சுவையில் அருமையான ஒரு காலிஃப்ளவர் வறுவல் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

காலிஃப்ளவரை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் இதய நோய் வருவது தடுக்கப்படுகிறதாம். மேலும் முடி வளர்ச்சிக்கு நன்றாக உதவும் செய்யுமாம். அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகவும் சிறப்பாக செயல்படுமாம். மன அழுத்தத்தையும் குறைக்க உதவுமாம். இப்படிப்பட்ட காலிஃப்ளவரை நாம் வெரைட்டியாக செய்து நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்தால் இந்த அனைத்து நன்மைகளும் அவர்கள் பெறுவார்கள் அல்லவா? வாங்க இப்போ காலிஃப்ளவர் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

செய்முறை

ஒரு முழு காலிஃப்ளவரை எடுத்துக் கொள்ளுங்கள். ஓரளவுக்கு நடுத்தரமாக பூக்களை நறுக்கிக் கொள்ளுங்கள். இந்த பூக்களில் பூச்சிகள் இருக்கும் என்பதால் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிவர ஆரம்பித்ததும் அதில் 1/2 ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளும், சிறிதளவு கல் உப்பும் போட வேண்டும். அவை நன்றாக கரைந்த பிறகு அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து ஒரு கிண்டு கிண்டி இறக்கி விட வேண்டும். பிறகு இதை ஒரு தட்டை வைத்து மூடி வைத்துவிட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து காலிஃபிளவரை எடுத்து வேறு ஒரு சாதாரண தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வருவல் கறி சுவையுடன் இருப்பதற்காக ஒரு மசாலாவை தயார் செய்ய வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1/2 இன்ச் அளவிற்கு இஞ்சி, 10 பல் பூண்டு, 2 பட்டை, 3 கிராம்பு, ஒரு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் மிளகு சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு 1/2 ஸ்பூன் அளவிற்கு கடுகு, 1/4 ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை சேர்க்க வேண்டும். கடுகும் சீரகமும் நன்றாக பொரிந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.

பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு காலிஃப்ளவரில் இந்த மசாலா படும் அளவிற்கு நன்றாக பிரட்டி விட வேண்டும். பிறகு ஒரு தட்டை வைத்து மூடி 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து 1 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கிளறி மறுபடியும் மூடி வைத்து விட வேண்டும்.

- Advertisement -

காலிஃப்ளவரில் மசாலாக்கள் அனைத்தும் நன்றாக சேர்ந்து மசாலா வாடை போன பிறகு அதில் 2 ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை தூவி விட்டு தோசையை பிரட்டி போடுவது போல் பிரட்டிப்போட்டு ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை சுற்றி ஊற்ற வேண்டும். மறுபடியும் மேலே இருக்கும் காலிஃப்ளவரில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை தூவி விட்டு அதன் மேல் மறுபடியும் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி திருப்பிப்போட்டு ஒரு நிமிடம் அப்படியே விட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் காலிபிளவர் மிகவும் மொறு மொறுப்பாகவும் அதே சமயம் சுவையாகவும் இருக்கும். கடலை மாவு காலிஃப்ளவரில் நன்றாக சேர்ந்து மொறு மொறுவென்று ஆன பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை அதில் தூவி இறக்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் நல்லா கிரிஸ்பியான சூப்பரான வாழைக்காய் வறுவல் சீக்ரெட் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? இது தெரிஞ்சிக்கிட்டு நீங்களும் உங்க வீட்ல இந்த வாழைக்காய் வறுவலை செஞ்சி அசத்துங்க.

மிகவும் சுவையான காலிஃப்ளவர் வறுவல் தயாராகிவிட்டது. கறி வறுவலுக்கு இணையான சுவையில் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -