10 நிமிடத்தில் வர மிளகாயை கிள்ளி போட்டு தாளித்து இப்படி ஒரு சாம்பார் வச்சு பாருங்க, செம டேஸ்டா இருக்கும்!

killi-sambar2
- Advertisement -

விதவிதமான சாம்பார் வகைகளில் காய்கறிகள் இல்லாத நேரத்தில் சட்டென பத்து நிமிடத்தில் செய்து அசத்த கூடிய இந்த மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் ரொம்ப அருமையாக இருக்கும். சூடான சாதத்துடன் அப்பளம், ஊறுகாய் வைத்து சாப்பிட்டாலே அவ்வளவு ருசியை கொடுக்கக் கூடிய இந்த மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் நாமும் வீட்டில் எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம், பெரிய தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 2 அல்லது சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 6, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, சீரகம் – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 7, மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்.

- Advertisement -

மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் 100 கிராம் துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து 20 நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்து வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அலசி ஊற வைத்துள்ள துவரம் பருப்பை அப்படியே தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சின்ன வெங்காயம் சேர்த்தால் ரொம்பவே சுவையாக இருக்கும். சின்ன வெங்காயம் இல்லாதவர்கள், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம். நறுக்கிய வெங்காயத்தை ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பச்சை மிளகாயை மட்டும் கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். மூன்று பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் பூண்டை நசுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள், தாளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது சாம்பாருக்கு தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது குக்கரை மூடி மூன்று, நான்கு விசில் விட்டு உங்கள் குக்கருக்கு ஏற்ப குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மத்து போட்டு நன்கு கடைந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். ஒரு சிறு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்ததும் சீரகம், கருவேப்பிலை இடித்து வைத்துள்ள பூண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை லேசாக வதக்கிய பின்பு பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக கருக விடுங்கள். பின்னர் நீட்டு காய்ந்த மிளகாயை காம்புகள் நீக்கி அப்படியே கிள்ளி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். மிளகாய் கருகி விடாமல் இருக்க வேண்டும். அதனுடன் மிளகுத்தூள் சேர்த்து ஒருமுறை லேசாகக் வதக்கி அடுப்பை அணைத்து சாம்பாருடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த கிள்ளி போட்ட சாம்பார் அருமையாக இருக்கும். இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -