நாளை சித்ரா பௌர்ணமி! பாவத்தைப் போக்கி, செல்வ வளத்தை அள்ளித் தரும் இந்த சித்ரா பௌர்ணமி வழிபாட்டை வீட்டில் எளிமையான முறையில் எப்படி செய்வது?

chithra-pournami
- Advertisement -

சித்ரா பௌர்ணமி என்று சொன்னாலே நம்முடைய நினைவுக்கு வருவது அழகான பெரிய நிலவு. சொன்னதுமே மனதில் அமைதி ஏற்படுகிறது அல்லவா. அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய சித்ரா பௌர்ணமி இந்த வருடம், வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கின்றது. 5-5-2023 ஆம் தேதி வரவிருக்கும் இந்த சித்ரா பௌர்ணமி நன்னாளின் ஆன்மீகம் சிறப்புகளைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சித்ரா பௌர்ணமி வந்துவிட்டது என்றாலே அன்றைய தினம் சிவபெருமானுக்கு கிரிவலம் செல்வது, பெருமாளுக்கு சத்திய நாராயண பூஜை செய்வது, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது, குலதெய்வ வழிபாடு செய்வது, அம்பாள் கோவில்களில் விசேஷம், என்று ஊரே திருவிழா கோலமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி நாம் செய்ய வேண்டிய வழிபாடு சித்திரகுப்தர் வழிபாடு. இந்த சித்ரா பௌர்ணமி வழிபாட்டை நம்முடைய வீட்டில் எளிமையான முறையில் எப்படி செய்யலாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

சித்திரகுப்தர் வழிபாடு:
வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து நாளைய தினம் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி விரதத்தை தொடங்க வேண்டும். விரதம் இருப்பது என்பது அவரவர் உடல் சூழ்நிலையை பொறுத்தது. பௌர்ணமி என்றாலே அந்த வழிபாட்டை நாம் மாலை நேரத்தில் தான் செய்வோம் அல்லவா. ஆகவே மாலை 6.00 மணிக்கு முன்பாக வழிபாட்டிற்கு என்ன தேவையோ அதை எல்லாம் தயார் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக சித்ரா பௌர்ணமி என்றாலே சித்ரா அன்னம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. சித்ரா அன்னம் என்றால் கலவை சாதம். சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்ச பழ சாதம், நெல்லிக்காய் சாதம், என்று உங்களால் எத்தனை விதமான கலவை சாதம் செய்ய முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள்.

மாலை 6:00 மணி ஆனதுமே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு செய்த பிரசாதங்களை பூஜை அறையில் இறைவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு, மாலை 6.30 மணிக்கு மேல் உங்களால் முடிந்தால் மொட்டை மாடிக்கு சென்று சித்ரா அண்ணங்களை சந்திர பகவானுக்கு படைத்து குடும்பத்தோடு வேண்டுதல் வைத்து மொட்டை மாடியிலேயே அமர்ந்து நிலா வெளிச்சத்தில் உற்றார் உறவினர்களுடன் சந்தோஷமாக அந்த பிரசாதத்தை பகிர்ந்து உண்ண வேண்டும். இதுதாங்க நிலாச்சோறு. இந்த நிலாச்சோறு குடும்பத்தோடு சாப்பிடுவதை யாரும் தவற விடாதிங்க. இதில் கிடைக்கும் சந்தோஷம் உலகத்தில் வேறு எதிலும் கிடைக்காது. அந்த அளவிற்கு சந்தோஷமும் மன நிறைவும் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

சித்ரா பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்:
சித்ரா பவுர்ணமிக்கு சொந்தமானவர் அந்த சந்திரன். அந்த சந்திரனை தலையில் சூடிக்கொண்டு இருப்பவர் சிவபெருமான். ஆகவே இவர்கள் இருவரும் சேர்ந்த சந்திரமவுலீஸ்வரரை இன்றைய தினம் நாம் நினைவு கூற வேண்டும். பூஜை அறையில் பூஜை செய்து முடித்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்து ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய போற்றி!’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது ரொம்ப ரொம்ப நல்லது.

சில பேர் சித்ரா பௌர்ணமி அன்று புதியதாக ஒரு நோட்டு ஒரு பேனாவை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வார்கள். இப்படி செய்தால் சித்திரகுப்தன் நம்முடைய பாவ கணக்குகளை எல்லாம் அழித்துவிட்டு, புண்ணிய கணக்குகளை எழுதி விடுவான் என்று சொல்லுவார்கள். ஆனால், அது அர்த்தம் கிடையாது. நம்முடைய எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக மாற வேண்டும். நம்மைப் பற்றிய பாவ கணக்குகளை அந்த சித்திரகுப்தன் எழுதவே கூடாது. அந்த அளவுக்கு நாம் பாவ செயலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழிபாடு செய்யப்படுகின்றது. ஆகவே, பாவங்களை எல்லாம் செய்துவிட்டு சித்திரகுப்தனை வழிபாடு செய்தால் சரியாகும் என்று மட்டும் யாரும் நினைக்காதீங்க. செய்த பாவத்திற்கான தண்டனை நிச்சயம் உண்டு.

இதையும் படிக்கலாமே: வியாபார ஸ்தலங்களில் கல்லாப்பெட்டி நிரம்பி வழிய நெல்லை இதில் போட்டு வைத்து விடுங்கள். நெல் முளைத்து பெருகுவது போல உங்கள் கல்லாப் பெட்டியிலும் பணம் பெருகி கொண்டே இருக்கும்.

சித்ரா பௌர்ணமி வழிபாடு செய்வதில் கிடைக்கக்கூடிய பலன்:
சரி, இந்த நாளில் சந்திர பகவானை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும். மனக்குழப்பத்தோடு இருப்பவர்கள் கட்டாயம் இந்த சித்ரா பௌர்ணமி வழிபாட்டை செய்ய வேண்டும். நிலவு ஒளியில் சிறிது நேரம் ஆவது அமர்ந்து 5 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். மனோகாரகன் என்று சொல்லப்படும் இந்த சந்திர பகவானுக்கு உரிய இந்த நாளில் சந்திர பகவானை வழிபாடு செய்தால் மன நோய் கூட சரியாகும் என்று சொல்லுவார்கள். இத்தனை அம்சங்களையும் கொண்ட இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் அனைவருக்கும் அந்த ஈசனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -