நல்ல காரசாரமான டார்க் நிறமுள்ள வெங்காய கார சட்னி எளிதாக இப்படி செஞ்சு பாருங்க எல்லா பிரேக்ஃபாஸ்ட் வகைகளுக்கும் அட்டகாசமாக இருக்கும்!

big-onion-chutney
- Advertisement -

இட்லி, தோசை, ஊத்தாப்பம், அடை என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் செம காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த டார்க் கலர் வெங்காய சட்னி செய்ய அதிக நேரம் கூட எடுக்காது. நம் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே 10 நிமிடத்தில் சட்டுனு செய்யக்கூடிய இந்த சுவையான கார சட்னி இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க, உங்க வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் ரொம்பப் பிடித்தமான சட்னியாக இது நிச்சயம் இருக்கப் போகிறது. சுவையான நல்ல நிறமுள்ள காரசாரமான கார சட்னி எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

வெங்காய காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு பல் – 3, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, வர மிளகாய் – 3, காஷ்மீரி மிளகாய் – 3, தேங்காய் துண்டுகள் – கால் கப், வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன். சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

வெங்காய கார சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் வெங்காய கார சட்னி செய்வதற்கு ஒரு பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் உங்கள் விருப்பம் போல வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கார சட்னி நல்ல நிறம் கொடுக்க காஷ்மீரி மிளகாய் கண்டிப்பாக தேவை. காஷ்மீரி மிளகாய் காரம் கொடுக்கா விட்டாலும் நல்ல நிறம் கொடுக்கும். பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் அருமையாக இருக்கும் எனவே அதை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய எல்லா பொருட்களையும் நாம் அப்படியே பச்சையாக தான் அரைக்க போகிறோம். பிறகு தான் தாளிக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் நீங்கள் துண்டுகளாக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கொள்ளுங்கள். காரத்திற்கு வரமிளகாய் மற்றும் நிறத்திற்கு காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை மேற்கூறிய அளவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி எதுவும் சேர்க்காததால் புளி உங்களுடைய சுவைக்கு ஏற்ப நீங்கள் சேர்த்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

பிறகு மூன்று பற்கள் பூண்டு உரித்து சேருங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், மற்றும் கால் கப் அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் சில்லுகள் மற்றும் அதனுடன் சுவைக்கு ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பின்பு இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு இணுக்கு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த வெங்காய சட்னி நல்ல நிறம் மற்றும் மணமுடன் சுவையானதாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -