எளிதாக காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் 10 நிமிடத்தில் வெள்ளை தக்காளி குருமா ரொம்ப டேஸ்டியா எப்படி தயாரிப்பது?

white-thakkali-kurma
- Advertisement -

காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளி மற்றும் வெங்காயத்தை வைத்து சுவையான தக்காளி குருமா ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் குக்கரில் வைத்து விடலாம். இட்லி, பூரி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த வெள்ளை தக்காளி குருமா எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

வைட் தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் – அரை கப், பச்சை மிளகாய் – 3, சோம்பு – ஒன்றரை டீஸ்பூன், மிளகு – ஒன்றரை டீஸ்பூன், பூண்டு பல் – 5, இஞ்சி – ஒரு இன்ச், முந்திரி பருப்பு – 10, வர மிளகாய் – 2, கல்பாசி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா 3, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, புதினா, மல்லி – தலா ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் முக்கால் கப்.

- Advertisement -

வைட் தக்காளி குருமா செய்முறை விளக்கம்:
தக்காளி குருமா செய்ய முதலில் ஒரு மசாலாவை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி வைத்தாலும் சரி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டாலும் சரி. தக்காளி, வெங்காயத்தை பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். முந்திரி பருப்புகளை உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சுலபமாக மற்ற பொருட்களை வதக்கி 2 விசில் குக்கரில் விட்டு எடுத்தால் பத்து நிமிடத்தில் மணக்க மணக்க சுவையான வெள்ளை தக்காளி குருமா தயார் ஆகி இருக்கும்.

இதற்கு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் 2, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் மிளகு, தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள், அதே அளவிற்கு தோல் உரித்து வைத்துள்ள இஞ்சி துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி பருப்பை சேர்த்தால் ரொம்ப சுவையாக இருக்கும். முந்திரிப்பருப்பு இல்லாதவர்கள் 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பிறகு தேவையான அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைஸாக பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் 2 வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கல்பாசி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகியவற்றைத் தாளித்துக் கொள்ளுங்கள். லேசாக வாசம் வந்ததும் மீதம் இருக்கும் மிளகு மற்றும் சோம்பு தலா அரை டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து தாளிக்க வேண்டும். இவற்றுடன் ஒரு சிறிய பச்சை மிளகாயை உடைத்து சேருங்கள். இவற்றின் பச்சை வாசம் போக லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரை நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

இலைகள் சுருள வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி துண்டுகள் மசிய வதங்கியதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீருடன் சேர்த்து முக்கால் கப் அல்லது ஒரு கப் அளவிற்கு தண்ணீர் இருந்தால் போதும். அதற்கு மேல் தண்ணீர் ஊற்ற வேண்டாம். குருமா கொதிக்கும் பொழுது குக்கரை மூடி 2 விசில் விட்டு எடுங்கள். மணக்க மணக்க தக்காளி குருமா வெள்ளையாக சூப்பராக தயாராகிவிடும். பிறகு நறுக்கிய மல்லி இலைகளை சேர்த்து பரிமாற வேண்டியது தான். இதே முறையில் நீங்களும் செய்து பாருங்கள்.

- Advertisement -