உங்கள் வீட்டு சமையறையில் இருக்கும் விதைகளே போதும் தோட்டம் போடுவதற்கு! வெளியில் சென்று காசு கொடுத்து விதை வாங்கும் அவசியம் கூட இல்லை.

kitchen-garden

நம்மில் பலரும் செடிகள் வளர்ப்பதற்கும், தோட்டம் அமைப்பதற்கும் விரும்புகிறோம். ஆனால் எதற்கும் ஆரம்பம் என்று ஒன்று வேண்டுமே? சிலருக்கு சோம்பேறித்தனம், பலருக்கு தோட்டம் அமைப்பது எப்படி என்ற அடிப்படை தகவல்கள் தெரியாமல் இருக்கும். இன்னும் சிலருக்கு இடப்பற்றாக்குறை இருக்கும். இப்போது கூறப்பட்ட எந்த பிரச்சனைகளும் இனி உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் விரும்பியபடி மிக மிக சுலபமாக உங்கள் வீட்டிலேயே சிறியதாக, அழகிய தோட்டம் அமைக்க முடியும். அதற்கு உங்களிடம் தேவைப்படுவது இரண்டு விஷயங்கள் தான். நேரமும், ஆர்வமும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் நேரம் இருக்கிறது. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். உங்கள் வீட்டு தோட்டத்தில் விளைந்த பொருட்களை கொண்டு நீங்களும் சமைத்து அசத்தலாம்.

gardening

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த வயது வித்தியாசமும் இன்றி யார் வேண்டுமானாலும் ஆர்வத்துடன் தோட்டம் அமைப்பதற்கு தயாரானால் சில நாட்களிலேயே அதற்கான பலன்களை நீங்கள் காண முடியும். விதைகள் வாங்குவதற்கு எந்த கடைக்கும் போகத் தேவையில்லை. பத்து பைசா செலவு செய்ய தேவையில்லை. வீட்டில் சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிதாக தோட்டம் அமைக்க முடியும். அது எப்படி என்று இப்பதிவில் நாம் காணலாம்.

முதலில் நீங்கள் உங்கள் சமையல் அறைக்கு செல்லுங்கள். உங்கள் சமையலறையில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் விதைகள் தான். இது நமக்கே தெரியாமல் இருக்கலாம். அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் கடுகு, வெந்தயம் முதல் காய்கறிகள், தனியா, கொண்டைக்கடலை வரை அனைத்துமே விதைகள் தான். எதை மண்ணில் போட்டு புதைத்தாலும் சட்டென முளைத்துவிடும். அதை சரியாக, முறையாக செய்வதில் தான் சூட்சுமம் உள்ளது.

gardening1

தோட்டம் அமைக்க வேண்டும் என்றால் சிறிய இடம் தேவைப்படும். அந்த இடத்தில் இருக்கும் மண்ணை ஒரு அடி ஆழத்திற்கு நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த இலை சருகுகளை முடிந்த அளவிற்கு சேகரித்து போட்டு ஒரு நாள் வரை ஊற வைக்கவும். சுற்றி தினமும் நீர் ஊற்றுவதற்கு வசதியாக செங்கற்களை அடுக்கி வைக்கவும். இப்போது விளைச்சல் மண் தயாராகிவிட்டது. விதைகள் எப்படி போட வேண்டும் என்று பார்த்து விடலாம். இடம் இல்லையென்றாலும் பரவாயில்லை. உங்களிடம் இருக்கும் பிளாஸ்டிக் வாளிகள், டப்பாக்கள் போதும். மாடியில், பால்கனியில் வைக்கலாம். போதிய சூரிய வெளிச்சம் மட்டும் கட்டாயம் தேவை.

- Advertisement -

வெந்தயம், தனியா, வரமிளகாய், தக்காளி, புதினா, கத்திரிக்காய் இந்த செடிகளை சுலபமாக வளர்த்துவிடலாம். மிகவும் பயனுள்ள பொருட்களாகவும் இவை நமக்கு இருக்கும். அதில் புதினா கீரையை பாதியளவு கத்தரித்துக் கொள்ளுங்கள். வேர் பகுதியை எடுத்து மண்ணில் பாதியாக வேரூன்றி வையுங்கள். வைத்ததும் மண்ணை அழுத்தி விடவும் அவ்வளவுதான். சில நாட்களில் துளிர்விட ஆரம்பித்துவிடும். தனியாவை ஒரு துணியில் போட்டு ஒன்றிரண்டாக நசுக்கி உடைத்துக் கொள்ளுங்கள். அதை காலையில் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி எடுத்து கொள்ளலாம். அப்போது தான் விரைவாக மல்லி செடி முளைக்கும். அடுத்து தக்காளி. தக்காளி நன்றாக கனிந்த நாட்டுத்தக்காளி ஆக இருக்க வேண்டும். இந்த தக்காளியை தண்ணீரில் பிழிந்தால் விதைகள் கிடைத்துவிடும். இதேபோல நன்கு பழுத்துப் போய், முற்றிய கத்தரிக்காயையும் செய்து கொள்ளுங்கள். வரமிளகாயை பிரித்து விதைகள் எடுத்துக் கொள்ளுங்கள். வெந்தயத்தை ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவையான மற்ற விதைகளும் கிடைத்தாயிற்று.

gardening2

இப்போது மண்ணில் தனி தனியாக நீளவாக்கில் அரை அடிக்கு தோண்டி கொள்ளுங்கள். அதில் தனித்தனியே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதைகளை தூவி விடுங்கள். இப்போது மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். இரண்டு வாரத்திற்குள் இவைகள் அனைத்தும் முளைவிட துவங்கிவிடும். இதற்கு தினமும் நீரைத் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டால் போதும். நிறைய தண்ணீரும் ஊற்றி விடக்கூடாது உங்களின் தோட்டத்திற்கு இயற்கை உரமாக நீங்கள் தினமும் சமைக்கும் காய்கறி மற்றும் பழக் கழிவுகளை போடலாம்.

gardening3

தேயிலை தூள், முட்டை ஓடு, தேங்காய் நார், காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் என்று அன்றாடம் சமைக்கும் பொருட்களை வீணாக்காமல் உரமாக போட்டு வந்தால் போதும். செடிகள் செழித்து வளரும். இதற்கென எந்த செலவும் நாம் செய்ய தேவையில்லை. சிறியதாக ஆரம்பிக்கும் இந்த தோட்டம் நாளை மெல்ல மெல்ல விரிவடைந்து உங்களுக்கு ஆர்வத்தை கூட்டும். இயற்கையை நோக்கிய பயணத்திற்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு ரோஜா செடியில் உள்ள மொட்டுகள், பூக்காமலே காய்ந்து விடுகிறதா? மொட்டுக்களில் பூச்சி வைக்கிறதா? இத மட்டும் செஞ்சா பெரிய பெரிய அளவில் அழகான பூ பூக்கும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Gardening at home in Tamil. Vegetable garden Tamil. Plant kitchen ingredients. Planting ideas for Home. Garden planting ideas.