ஒட்டுமொத்த பலன்களையும் ஒன்றாய் பெற உதவும் வழிபாடுகள் பற்றி தெரியுமா ?

Goddess Gowri

ஈசனின் இடப்பக்கம் உறையும் அன்னை பராசக்தியின் வடிவங்களில் ‘கௌரி ரூபம்’ தனித்துவமான சிறப்புகொண்டது. தவ வடிவம் கொண்ட சக்தியே, ‘கௌரி’ எனப்படுகிறாள். 108 கௌரி வடிவங்களில் 16 வடிவங்கள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. சோடஷ கௌரிகள் என்று வணங்கப்படும் இந்த ஸ்ரீகௌரியின் வடிவங்களை வழிபடுவதன் மூலமாக நாம் அத்தனை பலன்களையும் ஒரு சேர பெற முடியும். அந்த வகையில் எந்த கௌரியை வழிபட்டால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

Goddess Gowri

ஞானகௌரி :
அறிவே சகல லோகங்களையும் இயக்குகிறது என்று சிவனிடம் கற்றுக்கொண்ட தேவி, வன்னி மரத்தடியில் நீண்ட காலம் தவமிருந்து, ஞானசக்தியாக வடிவம் கொண்டாள். புரட்டாசி மாதம், சுக்கிலபட்ச தசமியில் வணங்கப்படும் இந்த தேவி, ஞானத்தின் அம்சம். எனவே, இவளை வழிபட்டால் உயர்ந்த ஞானம் கிட்டும். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை ஞானகௌரியாக வழிபடப்படுகிறாள்.

அமிர்தகௌரி
ஆயுள் விருத்திக்கு அமிர்தகௌரியே அதிகாரி. ஈசனிடம் பெற்ற அமிர்த கலசத்தை, தனது பக்தர்களுக்கு வழங்கும் இவர், இடைவிடாது ஈசனைத் தியானிப்பவர். ஆடிமாத பௌர்ணமியில் இவளை வழிபட, ஆயுள் அதிகரிக்கும். திருக்கடையூர் அபிராமி அமிர்த கௌரியின் அம்சமானவர்.

சுமித்ர கௌரி
உயிர்களுக்கெல்லாம் சினேகமாக இருப்பதால், இந்த கௌரி வடிவம் ‘சுமித்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இனியாள், ஸ்நேகவல்லி என்று கொண்டாடப்படும் இந்த கௌரி, மன நிம்மதிக்காக வணங்கப்பட வேண்டியவள். திருவாடானை அன்பாயிரவல்லி தேவி, சுமித்ரகௌரி அம்சமாகக் கொள்ளப்படுகிறாள்.

Goddess Gowri

- Advertisement -

சம்பத் கௌரி
இவள் ‘செல்வம்’ என்று சொல்லப்படும் கால்நடைகளின் தேவி. வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளின் நலம் காக்க இவளை வழிபடலாம். உழவர்களின் தெய்வம் இந்த தேவி. பசுவின் வடிவெடுத்து, ஈசனை வணங்கியவள். ஆவுடைநாயகி, கோமதி என்று போற்றப்படும் இவளை, காசி அன்னப்பூரணியின் அம்சம் என்றும் கூறுகிறார்கள். சகல சம்பத்துகளையும் அருளும் இந்த தேவிக்கு பங்குனி சுக்லபட்ச திருதியை நாள் உகந்தது.

யோக கௌரி
யோகக்கலையின் அம்சம் இவள் என்பதால், முனிவர்களும் சித்தபுருஷர்களும் கொண்டாடிய தேவி இவள். சிவன், சித்தர் வடிவம் கொண்டபோது, யோக கௌரியாக உடன் வீற்றிருந்தவள் இவளே. திருவாரூர் கமலாம்பிகை, யோகாம்பிகை என்றே அழைக்கப்படுகிறார். யோகம் ஆழ்ந்த நம்பிக்கையை அளிக்கும். எனவே, இவளை வணங்கினால் அமைதி கிடைக்கும்.

yoga gowri

வஜ்ரச்ருங்கல கௌரி
உறுதியான உடலைத் தரக்கூடிய தேவி இவள். வஜ்ரதேகத்தை வரமாகத் தருபவள். கருட வாகனத்தில் வலம் வருபவள். ஸ்ரீதுர்க்கை, இவளின் அம்சமாக போற்றப்படுகிறாள். நோய்கள் அண்டாமல் இருக்க வணங்க வேண்டிய அன்னை இவள்.

திரிலோக்ய மோஹன கௌரி
உற்சாகம் வேண்டுவோருக்கு இந்த கௌரி வரங்களை வாரி வழங்குவாள். உறுதியாக செயலாற்றும் எவருக்கும் இவள் ஆசிகளை வழங்கிக் காக்கிறாள். புதிய செயல், புதிய தொழில் தொடங்குவோர், இவளை வணங்கி ஆரம்பிக்க சுபம் உண்டாகும். வரலட்சுமியின் அம்சம் இவள்.

சுயம்வர கௌரி
‘பதிவிரதைகளின் நாயகி’ என்றே இவள் கொண்டாடப்படுகிறாள். நல்ல கணவரை அடைய வழிகாட்டும் அன்னை இவள். சதிசாவித்ரி, ருக்மிணி, சீதாதேவி ஆகியோர் வழிபட்ட கௌரி இவள். சுயம்வர கௌரியும் கடும் தவமிருந்தே ஈசனை மணந்தார் என்பதால், காமாட்சி இந்த கௌரியின் அம்சமானவள்.

கஜகௌரி
கணபதியை மடியில் வைத்துக்கொண்டு அருளும் இந்த கௌரி, பிள்ளை வரம் அருளும் மஹாசக்தி. ஆடி மாத பௌர்ணமியில் விரதமிருந்து இவளை வணங்க, சந்தான பாக்கியம் கிட்டும். சீர்காழியில் உறையும் திருநிலை நாயகி, கஜகௌரியின் அம்சமாக வணங்கப்படுகிறார்.

kaja gowri

கீர்த்திகௌரி
நீடித்த நற்புகழைத் தரும் தேவி இவள். ‘தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்றார் வள்ளுவர். நல்ல பெயரைப் பெற இந்த தேவியை வணங்கிப் பலன் பெறலாம். விஜயகௌரி என்றும் சொல்லப்படும் இவள், நல்ல உறவுகளையும், நட்பையும் தருபவள். தீய மனிதர்கள் நம்மை விட்டு விலகி, நன்மை பெறுகச் செய்பவள் கீர்த்திகௌரி.

சத்யவீர கௌரி
துணிச்சலுக்குரிய தேவி இவள். மனதில் பயம், எதிரிகளின் தொல்லை என எது வந்தாலும், இவளிடம் சரண் அடைந்து வணங்கி வழிபட்டால், நிச்சயம் காப்பாள். ஆடி மாத சுக்லபட்ச திரயோதசியில் இவளை வணங்க பலன் கிட்டும்.

வரதான கௌரி
வரங்களை அளிப்பது மட்டுமல்லாமல், தன்னை வணங்குபவர்களையும் கொடை வள்ளல்களாக மாற்றுபவள் இந்த தேவி. திருவையாறில் வீற்றிருக்கும், அறம் வளர்த்த நாயகி இவளுடைய அம்சம்தான். புரட்டாசி மாத சுக்லபட்ச திருதியை நாளில் இந்த அன்னைக்கு விரதம் இருந்து வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

Goddess Varalaxmi

சுவர்ணகௌரி
‘பொற்கொடி’ என்று வணங்கப்படும் இந்த தேவி செல்வ வளங்களை அளிக்கக் கூடியவள். பிரளய காலத்தில் கடலில் தோன்றிய இந்த கௌரி மாசி மாதத்திலும், ஆவணி சுக்கிலபட்ச திருதியை நாளிலும் வணங்கப்பட வேண்டியவள். குலதெய்வ கடாட்சம் பெறவும், வறுமை நீங்கி செழிக்கவும் இவளை வணங்கலாம். திலதைப்பதி ஸ்வர்ணவல்லி இவளது அம்சம்.

சாம்ராஜ்யகௌரி
எந்தப் பதவியை வேண்டினாலும், தகுதி உள்ளவருக்கு அதை வழங்கும் தேவி இவள். தலைமைப் பண்பை வளர்க்க வேண்டியவர்கள் இவளை வணங்கலாம். ஸ்ரீராஜராஜேஸ்வரியின் அம்சமாக இந்த கௌரி விளங்குகிறாள். ராஜயோகம், பதவி உயர்வு வேண்டுவோர் பௌர்ணமி நாளில் இவளை வணங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

அசோககௌரி
கஷ்டமில்லாத வாழ்வையே எல்லோரும் வேண்டுகிறோம். அதற்குத் துணைபுரிபவள் இந்த கௌரி. சோகம் இல்லாத இடம்தான் ஸ்ரீகௌரியின் இருப்பிடம். தன்னை வணங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்கும் இந்த தேவி, மீனாட்சியின் அம்சம் எனப்படுகிறாள். சித்திரை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் இவளை வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மனோரதபூர்த்தி கௌரி
விரும்பிய எல்லாவற்றையும் தகுதியானவர்களுக்கு வழங்கும் தேவி இவள். தூய மனதோடு தன்னை நாடி வருபவருக்கு வேண்டியதை அள்ளித் தரும் இந்த அன்னை விஸ்வ புஜா மகாகௌரி என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத சுக்லபட்ச திருதியை நாளில் வணங்கலாம். மாயவரம் அபயாம்பிகை இவளது அம்சம் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
மஞ்சளில் உள்ள மகத்துவம் பற்றி தெரியுமா ?

‘சோடஷம்’ என்பது பதினாறைக் குறிக்கும் சொல், அதுபோல் பதினாறு வகை செல்வங்களையும் அளிக்கும் ரூபமாகவே இருப்பவர்கள் இந்த கௌரிமார்கள். சகலமும் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இத்தனை வடிவங்கள் எடுத்து அன்பர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள் ஆதிசக்தி. வேண்டியதை வேண்டியவாறு தரும் இந்த தேவியரை வணங்கி எல்லா வளமும் நலமும் பெறுவோம்.