வெறும் 1/2 மணி நேரத்தில் ஒரு தக்காளி கூட சேர்க்காமல் இவ்வளவு சுவையாக சிக்கன் கிரேவி செய்ய முடியுமா? ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிரீன் சிக்கன் கிரேவி ரெசிபி இதோ உங்களுக்காக.

green-chicken
- Advertisement -

இந்த சீசனில் தக்காளி சேர்க்காமல் சுவையாக சமைத்துக் கொடுத்தால் மனைவிக்கு நிச்சயம் தங்க வளையல் கிடைக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு தக்காளியின் விலை விற்கின்றது.  ஒரு கிலோ தக்காளி வாங்கும் அளவு கையில் காசு இருந்தால் கூட, சண்டே அன்னைக்கு தக்காளி சேர்க்காமல், தக்காளியை மிச்ச படுத்தி இப்படி ஒரு சிக்கன் கிரேவி செய்து கொடுத்துதான் பாருங்களேன். வீட்டில் நிச்சயம் பாராட்டு மழை தான் கிடைக்கும். அதுவும் மிக மிக எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த கிரேவியை சமைக்கலாம் வாங்க. இந்த ரெசிபிக்குள் என்ன இருக்கிறது என்று பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இந்த கிரேவி செய்ய நமக்கு ஒரு தக்காளி கூட வேண்டாம். 1/2 கிலோவில் இருந்து 3/4 கிலோ அளவு சிக்கன் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஓரளவுக்கு மீடியம் சைஸில் நறுக்கி கழுவி சுத்தம் செய்து ஓரமாக வைத்து விடுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை 2, பிரியாணி இலை 1, ஏலக்காய் 2, கிராம்பு 2, ஜாவித்திரி 1, போட்டு தாளித்துக் கொள்ளவும்.

- Advertisement -

இப்போது இதில் மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதங்கி வந்ததும், எடுத்து வைத்திருக்கும் சிக்கனை இதில் சேர்க்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், சீரகத்தூள் 1/4 ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், மல்லித்தூள் 2 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன், போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். சிக்கன் லிருந்து தண்ணீர் விட்டு சிக்கன் வேகத் தொடங்கட்டும். இப்போது இதை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்.

இந்த கிரேவியில் சேர்க்க இப்போது பச்சை கலரில் ஒரு பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து புதினா 1 கைப்பிடி அளவு, மல்லித்தழை 1 கைப்பிடி அளவு, 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்த 7 முந்திரி பருப்பு, தயிர் 4 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 3, போட்டு தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்குள் கடாயில் சிக்கன் ஓரளவுக்கு தண்ணீர் விட்டு வேகத் தொடங்கி இருக்கும்.

- Advertisement -

கடாயை திறந்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த பச்சை நிற விழுதை சிக்கனில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு தூள் தூவி, மீண்டும் ஒரு மூடி போட்டு சிக்கனை வேக வையுங்கள். சிக்கன் 10 நிமிடத்திற்குள் நன்றாக வெந்து வரும். கிரேவியும் கொதித்து திக்காகும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.

சிக்கன் முக்கால் பாகம் வெந்து வரும்போது மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது, 1/2 ஸ்பூன் அளவு மிளகுத்தூள் தூவி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இந்த கிரேவியை டேஸ்ட் பண்ணி பாருங்க. உங்களுக்கே ருசி தெரியும். உங்களுடைய வீட்டில் கஸ்தூரி மேத்தி இருந்தால் அதை கொஞ்சம் கசக்கி 1/2 ஸ்பூன் அளவு இதில் சேர்த்தால் அப்படியே ரெஸ்டாரன்ட் கிரேவி சுவை கிடைக்கும். இந்த ரெசிபியில் தயிர் சேர்த்து இருக்கின்றோம். லேசாக புளிப்பு சுவை இருக்கும். உங்களுக்கு இன்னும் கொஞ்சம் புளிப்பு சுவை தேவை என்றால் அரை ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறை கூட இதில் ஊற்றி கலந்து பரிமாறலாம்.

இதையும் படிக்கலாமே: இது குலோப் ஜாமுன் இல்லைங்க. சின்ன வயசுல எல்லாம் பேக்கரியில் வாங்கி சாப்பிடுவோம் இல்லையா? பால்பன். அதை மிக மிக சுலபமாக நம் வீட்டிலேயே செய்யலாம் வாங்க.

இட்லி, தோசை, சுட சுட சாதம், சப்பாத்தி, பூரி, பரோட்டாக்கு இது ஒரு சூப்பரான சைடு டிஷ்ங்க. மிஸ் பண்ணாம இந்த சண்டே ட்ரை பண்ணி பாருங்க. தேவை என்பவர்கள் இதை நாட்டுக்கோழியிலும் சமைத்து பரிமாறலாம். சிக்கன் வேகுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் அவ்வளவுதான்.

- Advertisement -