விரிசல் இல்லாத குண்டு குண்டு குலோப் ஜாமுன் செய்முறை

Gulab jamun
- Advertisement -

தீபாவளி என்றால் இனிப்பு பலகாரங்கள் செய்வது தான் விசேஷம். அதிலும் குறிப்பாக எல்லாரும் செய்யும் ஒரு இனிப்பு எனில் அது குலோப் ஜாமுன் மட்டும் தான். இந்த குலோப் ஜாமுன் பலரும் செய்தாலும் எல்லோரும் இதை பர்பெக்ட்டாக செய்ய முடிவதில்லை. ஒன்று குலோப் ஜாமுன் உடைந்து விடும் அல்லது ஜீராவில் போட்டவுடன் கரைந்து போய் விடும். அப்படியெல்லாம் இல்லாமல் கடைகளில் கிடைப்பது போல நல்ல சாட்டான குண்டு குலாப் ஜாமுன் விரிசல் இல்லாமல் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

குலோப் ஜாமுன் ரெடிமேட் மிக்ஸ் மாவு – 1 பாக்கெட்,
சர்க்கரை – 500 கிராம்,
ஏலக்காய் – 4,
எலுமிச்சை பழ சாறு – 1 டேபிள் ஸ்பூன்
திக்காக காய்ச்சி ஆற வைத்த பால் – 1 டம்ளர்
ரோஸ் எசன்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் குலாப் ஜாமுன் பொரிக்க – தேவையான அளவு

- Advertisement -

செய்முறை

இந்த குலோப் ஜாமுன் செய்ய முதலில் மாவை தயார் செய்து கொள்ளுவோம். அதற்கு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ரெடிமேட் மிக்ஸ் மாவை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் எந்த பிராண்ட் மாவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் மாவில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது குலோப் ஜாமுன் மாவில் கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி பிசைய தொடங்குங்கள். எப்போதுமே குலோப் ஜாமுன் மாவில் தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது திக்காக காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி பிசையும் போது குலோப் ஜாமுன் நல்ல சுவையுடன் இருப்பதுடன் சாப்டாகவும் கிடைக்கும்.

- Advertisement -

அதே போல் குலோப் ஜாமுன் மாவை சப்பாத்தி மாவு பிசைவது போல் கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து பிசைய கூடாது. வெறும் விரல்களை வைத்தே லேசாக பிசைந்து விட்டாலே போதும். அப்படி பிசைந்த பிறகு அதை தட்டு போட்டு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். மாவு நன்றாக ஊறட்டும்.

இப்போது சர்க்கரை பாகை தயார் செய்து விடுவோம். அதற்கு ஒரு பாத்திரத்தில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்துப் பிறகு அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள். தண்ணீர் நன்றாக சூடேறி சர்க்கரை எல்லாம் கரைந்து வரும் போது ஏலக்காவை தூள் செய்து அதில் போட்டு விடுங்கள். அதே போல் ரோஸ் எசன்சும் ஊற்றுங்கள். ரோஸ் எசன்ஸ் ஊற்றும் போது கடையில் வாங்கும் குலோப் ஜாமுன் போல நல்ல மணமாக இருக்கும்.

- Advertisement -

கடைசியாக சர்க்கரைப் பாகை இறக்கும் போது எலுமிச்சை பழத்தின் சாறை ஊற்றி அடுப்பை அணைத்து விடுங்கள். எலுமிச்சை சாறு இதில் ஊற்றுவதனால் சுவை மாறுபடாது. இதை ஊற்றுவதால் ஜீரா கட்டிப்பட்டு குலோப் ஜாமுன் மீது சர்க்கரைபடிந்து விடாமல் இருக்கும். இப்போது இந்த சர்க்கரை பாகு நன்றாக ஆறட்டும் அதை ஓரமாக வைத்து விடுங்கள்.

இப்பொழுது கைகளில் லேசாக நெய் தடவி குலோப் ஜாமுன் உருண்டைகளை சின்ன சின்னதாக எடுத்து கைகளில் லேசாக அதிக அழுத்தம் கொடுக்காமல் விரிசல் இல்லாமல் உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு படுத்துங்கள். எண்ணெய் அதிக சூடாக கூடாது மிதமான சூட்டில் இருந்தால் போதும். அதே நேரத்தில் எண்ணெய் குலோப் ஜாமுன் மூழ்கும் அளவிற்கு கொஞ்சம் தாராளமாகவே ஊற்றிக் கொள்ளுங்கள்.

எண்ணெய் மிதமான தீயில் இருக்கும் போது நீங்கள் உருட்டி வைத்த உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். உருண்டைகளை சேர்த்த உடனே உருண்டையை திருப்பிப் போடக் கூடாது. ஐந்து நிமிடம் கழித்து உருண்டைகளையே நன்றாக வெந்து மேலே வரும். அதன் பிறகு இதன் நிறம் சிவந்து வரும் வரை காத்திருந்து பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மட்டன் சுவையில் மஸ்ரூம் பிரியாணி

இப்போது பொரித்தெடுத்த குலோப் ஜாமுன் உருண்டைகள் நன்றாக ஆறிய பிறகு சர்க்கரை பாகில் சேருங்கள். குலோப் ஜாமுன் உருண்டைகள் சூடாக இருக்கும் போது சர்க்கரை பாகில் போடக் கூடாது. இப்படி சேர்த்தாலும் குலாப் ஜாமுன்கள் உடைந்து விடும். மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின் படி குலோப் ஜாமுன் செய்து பாருங்கள். கடைகளில் கிடைப்பது போலவே சாப்டான சுவையான விரிசல் இல்லாத குலோப் ஜாமூன் வீட்டிலே தயார் செய்யலாம்.

- Advertisement -