மோல்டிங் தேவையில்லை, வீட்டில் இருக்கும் டம்ளர் போதும் ரிச்சான, சுவையான ஜில் ஜில் குல்ஃபி எளிதாக செய்யலாமே!

- Advertisement -

குல்ஃபி செய்வதற்கு மோல்டிங் தேவை என்று பலரும் நினைத்துக் கொள்வது உண்டு. மோல்டிங் இல்லை என்றாலும் வீட்டில் இருக்கும் டம்ளரை வைத்தே சூப்பரான முறையில் ரிச் லெவல் டேஸ்டில் குல்ஃபி நாமே வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்! குல்ஃபி ஆரோக்கியம் மிகுந்ததும் கூட எனவே குழந்தைகளுக்கு இந்த கோடை காலத்தில் அடிக்கடி செய்து கொடுக்கலாம். ருசியான ரிச் லெவல் குல்ஃபி எப்படி வீட்டிலேயே செய்வது? என்பதை இனி பார்ப்போம்.

குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:
ஃபுல் கிரீம் மில்க் – அரை லிட்டர், சர்க்கரை – கால் டம்ளர், ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன், பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன், பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பு – தலா 5.

- Advertisement -

குல்ஃபி செய்முறை விளக்கம்:
குல்ஃபி செய்வதற்கு முதலில் ஃபுல் க்ரீம் மில்க் நமக்கு கண்டிப்பாக தேவை. எந்த பால் பாக்கெட் வாங்கினாலும் ஃபுல் க்ரீம் மில்க் என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள். அப்போது தான் குல்ஃபி ரொம்ப கிரீமியாக, சூப்பராக வரும். அரை லிட்டர் பாலை ஒரு அடி பிடிக்காத பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். 2 டம்ளர் பால் எடுத்தால் அது ஒரு டம்ளராக சுண்டி வர வேண்டும். அந்த அளவிற்கு நீங்கள் பாலை இடைவிடாமல் கிண்டிக் கொண்டே காய்ச்ச வேண்டும். பால் காய்ச்சும் பொழுது ஓரங்களில் படியும் ஏடுகளை உடனுக்குடன் நீங்கள் எடுத்து விட்டு கொண்டே இருக்க வேண்டும். பால் ஏடு ஓரங்களில் கண்டிப்பாக படிய விடக்கூடாது எனவே படிய படிய நீங்கள் எடுத்து பாலில் சேர்த்துக் கொண்டே வாருங்கள்.

கால்வாசி பால் நன்கு சுண்டியதும் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். 2 டம்ளர் பாலுக்கு அரை டம்ளர் சர்க்கரை சேர்த்தால் சரியாக இருக்கும். சர்க்கரையை ஜாரில் போட்டு ஓரிரு ஏலக்காய்களை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் தூளாக உங்களிடம் இருந்தால் ரொம்பவும் நல்லது. சாப்பிடும் பொழுது இடை இடையே அதன் தோல் பகுதி வரக்கூடாது எனவே ஏலக்காயை நைஸ் பவுடராக அரைத்து சேர்க்க வேண்டும். பாலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு பால் பவுடர் சேர்க்க வேண்டும். பத்து ரூபாய் பாக்கெட்டுகளில் கூட பால் ஸ்டோர்களில் கிடைக்கக் கூடிய இந்த பால் பவுடரை வாங்கி 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் குல்ஃபிக்கு நல்ல டெக்ஸ்சர் கிடைக்கும்.

- Advertisement -

இப்போது பால் பாதியாக சுண்டியதும் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு என்று உங்களிடம் எது இருக்கிறதோ அவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப ரொம்பவும் பொடிதாக நொறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே தூவி 2 நிமிடம் பாலை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். நன்கு பால் ஆறி இருக்க வேண்டும். கொஞ்சம் கூட சூடு இல்லாமல் ஆறிய பின்பு சிறுசிறு டம்ளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பகுதி அளவிற்கு ஊற்றி அலுமினியம் ஃபாயில் பேப்பர் கொண்டு இறுக்கமாக காற்று புகாதபடி மூடி விட வேண்டும்.

அலுமினியம் ஃபாயில் பேப்பர் இல்லை என்றால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் இருக்கும் பிளாஸ்டிக் கவர் ஒன்றை கட்டமாக வெட்டி டம்ளரின் மீது வைத்து இறுக்கமாக ரப்பர் பேண்ட் போட்டு கட்டி விடுங்கள். பிறகு ஒரு சிறு துளையிட்டு ஐஸ்க்ரீம் குச்சியை சொருகி கொள்ளுங்கள். இதை அப்படியே கொண்டு போய் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். எட்டு மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் குல்ஃபி சுவையாக, சூப்பராக தயாராகியிருக்கும். குல்ஃபியை எடுத்தவுடன் அரை நிமிடம் தண்ணீரில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வெளியில் எடுப்பதற்கு சுலபமாக வரும். குச்சியை டம்ளருக்குள் ரொட்டேட் செய்தால் அப்படியே எளிதாக வந்துவிடும். அவ்வளவுதாங்க ரொம்பவே சுலபமான முறையில் ரிச்சான குல்ஃபி நீங்களும் இப்படி செய்து பாருங்கள்.

- Advertisement -