நீங்கள் பிறந்த லக்கினத்தின் படி உங்களுக்கான முழு பலன் இதோ

0
6123
astrology
- விளம்பரம் -

ருவருடைய ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியம். லக்னத்தைக் கொண்டுதான் ஒவ்வொரு பாவம் பற்றியும், அந்தந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களின் பலம் மற்றும் பலவீனம், அதனால் ஜாதகருக்கு ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றியும் கணிக்கமுடியும்.

மேஷம்
mesham

மேஷ லக்னக்காரர்கள் புத்திசாலிகள். அடக்கி ஆளும் குணம் உள்ளவர்கள். இவர் களுக்கான லக்னாதிபதி செவ்வாய். இவர் மேஷ லக்னத்துக்கு 1 மற்றும் 8-ம் வீடு இரண்டுக்கும் அதிபதியாகிறார். ஆக இந்த இரண்டு இடங்களில் செவ்வாய் இருந்தாலும் பலம் மிகுந்தவராகி விடுவார்.

பரிகாரம் 

Advertisement

லக்னாதிபதி செவ்வாய் வலுவின்றி இருந்தால், முருகனை வழிபடுவதும், சஷ்டிதோறும் விரதம் இருப்பதும் நன்மை தரும். சூரியன் வலுக்குன்றி இருந்தால் சூரிய வழிபாடும், குரு வலுக் குன்றி இருந்தால் தட்சிணாமூர்த்தி வழிபாடும் நன்மை தரும்.

ரிஷபம்
rishabam
ரிஷப லக்னத்துக்கு அதிபதி சுக்கிரன். ரிஷபத்தில், அழகைப் பிரதிபலிக்கும் சந்திரன் உச்சம் பெறுவதால், ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றம், மற்றவர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் தன்மை, இரக்க மனம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.

பரிகாரம்
சுக்கிரன் வலு இல்லாமல் இருந்தால் அம்பிகை வழிபாடும், புதன் வலுக் குன்றி இருந்தால் மகாவிஷ்ணுவை வழிபடுவதும், சனி வலுக் குன்றி இருந்தால் தினமும் காகத்துக்கு அன்னம் வைப்பதும் உங்களுக்குக் காப்பாக அமையும்.

மிதுனம்
midhunam

மிதுன ராசியை லக்னமாகக் கொண்டவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்பவர்கள். இயல்பிலேயே அறிவுத் திறன் மிக்கவராக இருப்பார்கள். அனைவரிடமும் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.

பரிகாரம் 

புதன் வலுவின்றி இருந்தால் ஹயக்ரீவர் வழிபாடும், சுக்கிரன் வலுவின்றி இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதும், சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை பயக்கும்.

கடகம்
kadagam

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் நுட்பமான அறிவு கொண்டவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

கடக லக்னத்துக்கு அதிபதி சந்திரன். எனவே, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் வலுப்பெற்று இருப்பது அவசியம்.

பரிகாரம் 

சந்திரன் வலுவின்றி இருந்தால், திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதும், செவ்வாய் வலுவில்லாமல் இருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதும் நன்மை தரும்.

சிம்மம்
simmam
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எவருக்கும் கட்டுப்படமாட்டார்கள். மற்றவர்களிடம் பெருந் தன்மையுடன் நடந்துகொள்வார்கள். எதிலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பார்கள். தர்ம நியாயப்படி நடந்துகொள்வார்கள். சற்று முன்கோபம் உள்ளவர்கள். எவரையும் சாராமல் தன்னுடைய சுயமுயற்சியினால் முன்னேற்றம் அடைவார்கள்.

சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிபதி சூரியன். எனவே இவர் சுப பலம் பெற்று அமைந்திருப்பது அவசியம்.

பரிகாரம் 

சூரியன் வலுவின்றி இருந்தால், சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், செவ்வாய் வலுவின்றி இருந்தால், சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதும் சிரமங்களைக் குறைக்கும்.

கன்னி
kanni

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்கள். தங்கள் தோற்றத்தால் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் அறிவு சார்ந்த பணிகளிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இந்த லக்னத்துக்கு அதிபதியான புதனுக்கு இந்த ராசியே ஆட்சி மற்றும் உச்ச வீடாக அமைந்திருப்பது சிறப்பு.

பரிகாரம் 

புதன் வலுக் குன்றி இருந்தால், புதன்கிழமை அன்று அல்லது ஜன்ம நட்சத்திர தினத்தில் திருவெண்காடு சென்று புத பகவானை வழிபடுவதும், சனி வலுக் குன்றி இருந்தால் திருநள்ளாறு தரிசனமும் நன்மை தரும்.

துலாம்
thulam

துலாம் ராசியை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்கள் நீதி தவறாதவர்கள். எத்தனை பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், அவற்றை எல்லாம் கடந்து முன்னேறுவார்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்பவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் பெற்றிருப்பார்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள்.

துலாம் லக்னத்தின் அதிபதி சுக்கிரன். எனவே துலாம் லக்ன அன்பர்களுக்கு சுக்கிரன் வலுப்பெற்றிருப்பது அவசியம்.

பரிகாரம் 

அம்பிகையை வழிபடுவதும், சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்வதும்; புதன் வலுவின்றி இருந்தால், திருவெண்காடு சென்று புத பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வதும் அசுப பலன்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

விருச்சிகம்
virichigam

விருச்சிகத்தை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்கள், பார்ப்பதற்கு அப்பாவியாக இருந்தாலும் காரியங்களை சாதித்துக்கொள்ளுவதில் சமர்த்தராக இருப்பார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள்.  எந்த வேலையைத் தொடங்கினாலும் அது முடியும்வரை தொடர்ந்து பாடுபடுவார்கள். இவர்களிடம் சற்று பிடிவாத குணமும் காணப்படும்.

விருச்சிக லக்னத்துக்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடமான மேஷத்துக்கும் அதிபதி ஆகிறார். செவ்வாய் லக்னத்திலோ அல்லது மேஷத்திலோ ஆட்சிபெற்று இருந்தால் செவ்வாய் வலுப் பெற்று, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், பூமி சேர்க்கை, சகோதரர்களால் அனுகூலம், வழக்குகளில் வெற்றி போன்ற யோக பலன்களை வழங்குகிறார். செவ்வாய், 3-ம் வீடான மகரத்தில் உச்சம் பெற்று காணப்பட்டாலும் மேற்கூறிய யோக பலன்களை வழங்குவார்.

பரிகாரம் 

செவ்வாய் வலுக்குன்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், குரு வலுக்குன்றி இருந்தால் ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

தனுசு
dhanusu

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். தெய்வ பக்தி மிக்கவர்கள். பார்ப்பதற்கு அதிகாரத் தோரணையுடன் நடந்துகொள்பவர்கள் போல் தோன்றினாலும் அனைவரிடமும் கனிவுடன் நடந்துகொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும்.

குரு பகவான் லக்னம் மற்றும் மீனம் ஆகிய இடங்களில் ஆட்சி பெற்று இருந்தாலும், கடகத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் உயர் கல்வி, உயர்ந்த பதவி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, சொந்த வீடு, நிலம், வாகன வசதி போன்ற யோக பலன்களை வழங்குவார். மேலும் ஜாதகருக்கு பரிபூரண தெய்வகடாட்சம் உண்டாகும். மற்றும் மேஷம், சிம்மம், கன்னி ஆகிய இடங்களில் இருந்தாலும் நல்ல யோக பலன்களை வழங்குவார்.

பரிகாரம் 

குரு வலுவின்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடும், குருபகவான் வழிபாடும் நலம் தரும். செவ்வாய் வலுவின்றி இருந்தால் முருகப்பெருமானை வழிபடுவதும், அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் சிரமங்களைக் குறைக்கும்.

மகரம்
magaram

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் உழைப்புக்கு பின்வாங்கமாட்டார்கள். விடாமுயற்சியுடன் எடுத்த காரியத்தை முடிப்பார்கள். லட்சியத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அனைவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

மகர லக்னத்துக்கு 1, 2-ம் வீடுகளுக்கு உரியவர் சனி பகவான். சனி லக்னத்திலேயே இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் யோகம் ஏற்படும். சொந்தத் தொழில், உத்தியோகம், காரியங்களில் வெற்றி, பொருளாதாரத்தில் ஏற்றம் போன்ற நன்மைகள் உண்டாகும். இங்கிருக்கும் சனியை குரு பார்வை செய்தால் நற்பலன்கள் அதிகமாகும்.

பரிகாரம் 

சனி வலு குறைந்து இருந்தால் சனிபகவானையும், சுக்கிரன் வலுக்குன்றி இருப்பவர்கள் அம்பிகையையும், புதன் வலுக்குன்றி இருப்பவர்கள் ஹயக்ரீவரையும் வழிபட, சிரமங்கள் குறையும்.

கும்பம்
kumbam

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் மன உறுதி கொண்டவர்கள். எப்போதும் மலர்ச்சியாக காணப்படுவார்கள். மற்றவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். உயர்ந்த பதவி, அந்தஸ்து ஆகியவை இவர்களைத் தேடி வரும். முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள்.

கும்ப லக்னத்துகு லக்னாதிபதி சனிபகவான் 12-ம் வீட்டின் அதிபதியும் ஆகிறார். ஆகவே அதிக வருமானம், அதிக செலவு என்று  இரண்டையுமே ஏற்படுத்துவார். சனிபகவான் லக்னம், 12 இவற்றில் ஆட்சி பெற்றாலும், 9-ல் உச்சம் பெற்றாலும் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் யோகம் உண்டு. தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற எதுவாக இருந்தாலும் மேன்மை, முன்னேற்றம், அபிவிருத்தி, ஆதாயம் ஏற்படும். சொந்த வீடு, வாகன வசதி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து, நல்ல குடும்பம், வசதியான வாழ்க்கை போன்ற அனுகூலங்கள் ஏற்படும்.

பரிகாரம் 

சனி வலுவின்றி இருந்தால் சனி தசையின்போது ஒருமுறை திருநள்ளாறு சென்று அர்ச்சனை செய்து வருவதும், சுக்கிரன் வலுக் குன்றி இருப்பவர்கள் கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

மீனம்
meenam

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமாக இருப்பார்கள். மென்மையாகப் பேசுவார்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். இவர்களுக்கு இரக்க குணமும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். சற்று முன்கோபம் உண்டு.

குருபகவான் லக்னத்தில் இருந்தால் நீன்ட ஆயுள், உயர்கல்வி, செல்வம், உத்தியோக மேன்மை, தொழில், வியாபார வகையில் முன்னேற்றம், நல்ல குடும்பம், சொத்துச் சேர்க்கை போன்ற யோக பலன்களை வழங்குவார்.

பரிகாரம் 

குரு வலுக் குன்றி இருப்பவர்கள் திட்டை குருபகவானை தரிசித்து அர்ச்சனை செய்து வருவதும், செவ்வாய் வலுக் குன்றி இருப்பவர்கள் சஷ்டி தினங்களில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதும் சிரமங்களைக் குறைக்கும்.

குறிப்பு: லக்னாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்து அந்த இடம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இருந்தாலும்கூட யோக பலன்களுடன் அசுப பலன்களும் கலந்தே ஏற்படும்.

Advertisement