இப்படி கூட இட்லிக்கு மாவு அரைப்பாங்களா? இது மாதிரி உங்க வாழ்நாளில் இதுவரைக்கும் யாருமே இட்லி மாவு அரைச்சு இருக்க மாட்டீங்க.

idli-mavu
- Advertisement -

ஒவ்வொருவர் வீட்டில் ஒவ்வொரு மாதிரி இட்லிக்கு மாவு அரைப்பாங்க. இன்றைக்கு நாம் பார்க்க போவது ஒரு புது ஐடியா தான். இந்த குறிப்பை படிச்சு பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒருமுறை இந்த முறையில் மாவை ஆட்டியும் பாருங்க. இட்லி சுட்டு சாப்பிட்டு பாருங்க. உங்களுக்கு புடிச்சிருந்தா இதே ஐடியாவை யூஸ் பண்ணி வாரம் தோறும் இட்லிக்கு மாவு அரைத்துக் கொள்ளலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் இன்னிக்கு புதுசா ஒரு குறிப்பு தெரிந்து கொள்வோம்.

இந்த முறையில் மாவு அரைப்பதற்கு நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்து விடுவோம். இட்லி அரிசி – 3 1/2 கப், சாப்பாட்டு புழுங்கல் அரிசி –  1 1/2 கப், உளுந்து – 3/4 கப், வெந்தயம் – 1 ஸ்பூன், கொட்டை முத்து 5. (கொட்டை முத்து என்பது ஆமணக்கு கொட்டை. 1 கிலோ அளவு இட்லி அரிசிக்கு நான்கிலிருந்து ஐந்து கொட்டை முத்து வரை பயன்படுத்தலாம்.) எந்த கப்பில் அரிசி அளக்குறீங்களோ அதே கப்பில் உளுந்தையும் அளந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் இட்லி அரிசியையும் சாப்பாட்டு அரிசியையும் போட்டு நன்றாக நான்கிலிருந்து ஐந்து முறை கழுவி விட்டு, தண்ணீரை வடித்து விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த இந்த அரிசியை கிரைண்டரில் போட்டு ஆட்டணும். அரிசியோடு சேர்த்து கொட்டை முத்துவையும் சேர்க்க வேண்டும். கொட்டை முத்துக்கு மேலே இருக்கும் தோல்களை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் வெள்ளை பருப்பை மட்டும் அரிசியோடு போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

அரிசியை கொரகொரப்பாக எல்லாம் ஆட்ட வேண்டாம். நைசாக மொழு மொழுவென அரிசியை அரைத்து எடுத்து வழித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அரிசிக்கு மட்டும் தேவையான அளவு உப்பை போட்டு உங்கள் கையைக் கொண்டு லேசாக கலந்து விட்டு அரிசி மாவை மூடி போட்ட தனியாக புளிக்க வைக்க வேண்டும். (அரிசி மாவை மட்டும் தான் ஒரு முழு இரவு புளிக்க வைக்க போகின்றோம். அதாவது எட்டு மணி நேரம்.)

- Advertisement -

உளுந்து அரைக்கலையேன்னு யோசிக்கிறீங்களா. ராத்திரி அரிசி மாவை ஆட்டி வைத்து விட்டீர்கள். மறுநாள் காலை எழுந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக போட்டு மூன்று முறை கழுவி விடுங்கள். பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி உளுந்தை 1 மணி நேரம் ஊற வையுங்கள். இந்த உளுந்தை இப்போது கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பொங்க ஆட்டி எடுத்து, ஆட்டி வைத்திருக்கும் புளித்த அரிசி மாவில் உளுந்தை போட்டு, உளுந்துக்கு தேவையான அளவு உப்பை போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக கரைக்க வேண்டும். புளித்த அரிசி மாவில், புளிக்காத உளுந்து மாவை போட்டு உப்பு போட்டு கரைக்கிறீங்க.

ஒரு மூடி போட்டு இதை 1 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து பெரியதாக உளுந்து பொங்கி இருக்காது. அரைத்த மாவு அப்படியே தான் இருக்கும். (ஆனாலும் இட்லிக்கு மாவு தயார்.) இப்போது இந்த மாவில் இட்லி வார்த்து வேகவைத்து சாப்பிட்டு பாருங்கள். ருசி எப்படி இருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள். இப்படி மாவு அரைத்து இட்லி சுட்டால் இவ்வளவு சூப்பராக வருமா அப்படின்னு நீங்களே யோசிக்கும் அளவிற்கு இட்லியின் சுவை இருக்கும். இட்லிக்கு மாவு அரைக்கக்கூடிய விதங்களில் இதுவும் ஒரு மெத்தெட். அவ்வளவுதான். இது உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணலாம். பிடிக்கலைன்னா தாராளமா ஸ்கிப் பண்ணிடலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

பின்குறிப்பு: சில பேருக்கு கொட்டை முத்துவை இட்லி மாவோடு சேர்த்து அரைக்கும் போது வயிறு உபாதைகள் ஏற்படும். உங்களுக்கு அப்படியே ஏதாவது அலர்ஜி இருந்தால் கொட்டை முத்து சேர்க்க வேண்டாம்.

- Advertisement -