அட இஞ்சி பூண்டு அரைப்பது ஒரு விஷயமா அப்படின்னு யோசிக்கிறவங்க, இஞ்சி பூண்டு விழுதை இப்படி அரைச்சு பாருங்க, ஆறு மாசம் ஆனா பிறகும் கூட இப்ப அரைச்ச மாதிரியே பிரஸ்ஷா இருக்கும். நீங்களும் மத்தவங்களுக்கு சொல்லுவீங்க.

- Advertisement -

நாம் சமைக்கும் உணவுகளில் பெரும்பாலும் இஞ்சி, பூண்டு கண்டிப்பாக சேர்ப்போம். அந்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை கடைகளில் வாங்கும் போது அது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதில் சில கெமிக்கல் சேர்க்க தான் செய்வார்கள். அது நம் உடலுக்கு அத்தனை ஆரோக்கியமானது கிடையாது. எனவே இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நாம் எப்போதும் வீட்டில் அரைத்து பயன்படுத்துவதே நல்லது. அதே நேரத்தில் அதை அரைத்து வைக்கும் போது அதிக பட்சம் ஒரு வாரம் இருக்கும். அதன் பிறகு அதன் சுவையும் மாறி தண்ணீர் விட்டு சில நேரங்களில் அது கருப்பாக கூட மாறி விடும். அப்படியெல்லாம் இல்லாமல் ஆறு மாதம் ஆனால் கூட கெட்டுப் போகாமல் அதே நேரத்தில் முதல் நாள் அரைத்த போது இருந்த அதே சுவையில் இருக்க நல்ல ஆரோக்கியமான முறையில் இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை எப்படி தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்க முதலில் இஞ்சி, பூண்டு அளவை நாம் பார்த்துக் கொள்ளுவோம். இதில் மூன்று விதமாக அளவுகளில் நாம் அரைக்கலாம். அதை முதலில் தெரிந்து கொள்ளுவோம்.

- Advertisement -

இஞ்சியும், பூண்டையும் சமமாகவே எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். இப்படி அரைப்பது அசைவ குழம்புகளுக்கு குறிப்பாக மட்டன் செய்ய இதன் சுவை பிரமாதமாக இருக்கும். ஆனால் இஞ்சியின் சுவை கொஞ்சம் கூடுதலாக தெரியும். இது பிடிக்கும் என்பவர்கள் எந்த முறையில் அரைத்துக் கொள்ளலாம்.

அடுத்து பூண்டு அளவிற்கு பாதி அளவு மட்டும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம் இது வயிறு சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பாக அல்சர், காரம் அதிகம் எடுக்கக் கூடாது என்பவர்கள் இந்த முறையில் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இஞ்சி, பூண்டு நன்மையும் கிடைக்கும் அதே நேரத்தில் எந்த கெடுதலும் செய்யாது. பூண்டை விட இஞ்சின் காட்டம் தான் கொஞ்சம் வயிறு புண்களுக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும் எனவே காரம் அதிகம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த முறையில் அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பொதுவாக இஞ்சி பூண்டு அரைக்கும் சரியான அளவு என்பது பூண்டு 500 கிராம் என்றால் இஞ்சி 350 கிராம் தான் இது தான் இஞ்சி பூண்டு பேஸ்டின் ஒரு சராசரியான அளவு. இப்போது எந்த அளவில் அரைக்க வேண்டும் என்பதை நீங்கள் உங்கள் உடல் நிலைக்கு ஏற்றார் போல் முடிவு செய்து கொள்ளுங்கள் அரைக்கும் விதத்தினை நாம் இப்போது பார்ப்போம்.

முதலில் பூண்டு தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இஞ்சியும் நன்றாக சுத்தம் செய்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இஞ்சியும், பூண்டும் நாம் ஒரே நேரத்தில் அரைக்கக்கூடாது இது மிகவும் முக்கியம். ஏனென்றால் இஞ்சி நன்றாக அரைப்பட வேண்டும் பூண்டு ஒரு 90% வரை அரைப்பட்டாலே போதும். பூண்டு அதிகமாக அரை பட்டு விட்டால் அதனுடைய சுவை மாறி விடும். எனவே இஞ்சியும் பூண்டையும் முடிந்த அளவிற்கு தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டால் நல்லது. இல்லை என்றால் பாதி அளவிற்கு இஞ்சி அரைபட்ட பிறகு பூண்டை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதில் அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்க அதன் சுவையும் மணமும் அப்படியே இருக்க நாம் சேர்க்க வேண்டிய முக்கியமான இரண்டு பொருள் எண்ணெய், உப்பும் தான். நீங்கள் 500 கிராம் அளவு பூண்டு 350 கிராம் இஞ்சி என்று எடுத்துக் கொள்ளும் போது அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் அதிக வாடை வராத எண்ணெய் அதாவது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை இதற்கு பயன்படுத்த வேண்டாம். சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையே சேர்த்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் இந்த பேஸ்டில் எண்ணையின் வாடை அதிகமாக தெரியும் அப்படி தெரியக்கூடாது. இந்த அளவு விழுதுக்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும். இஞ்சி பூண்டு அரைக்கும் போதே இந்த எண்ணெயும் உப்பையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அடிக்கடி இந்த குறிப்புகளை சமையலறையில் நிச்சயம் பயன்படுத்துவிங்க. பெண்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய 10 குறிப்புகள் இதோ.

அதன் பிறகு இதை எடுத்து வைக்கும் பாத்திரமும் பிளாஸ்டிக், சில்வர் போன்றவை பயன்படுத்தாமல் முடிந்த வரையில் கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும். பிளாஸ்டிக் சேரும் போது சில்வர் சேரும் போதும் அத்தனை சுவை அத்தனை நாட்கள் நீடிக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம். எனவே முடிந்த அளவுக்கு அரைத்த பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலை நன்றாக சுத்தம் செய்து காய வைத்த பிறகு அதில் அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து உங்கள் பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இந்த முறையில் அரைத்தால் ஆறு மாதத்திற்கு கண்டிப்பாக கெட்டே போகாது. இது மிகவும் பயனுள்ள குறிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

- Advertisement -