இன்ஸ்டன்ட் தேங்காய் சட்னி செய்முறை

instant chutney
- Advertisement -

வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி காலையில் அவசரம் அவசரமாக அனைவருக்கும் மதிய உணவு, காலை உணவு என்று பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் காலை உணவிற்காக சட்னி செய்ய வேண்டும் என்ற ஒரு நிலையும் ஏற்படும். இந்த நிலைக்காக நேரத்தை செலவழிக்காமல் மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு இன்ஸ்டன்ட் சட்னியை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த சட்னியை வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் ஆண் பிள்ளைகளுக்கு அவர்களின் தாய் செய்து தருவதன் மூலம் வீட்டு சுவையில் நினைக்கும்போதெல்லாம் சட்னி செய்து சாப்பிட்டு கொள்ளலாம். மிகவும் எளிமையான அதே சமயம் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் தேங்காய் சட்னியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பச்சை வேர்க்கடலை – 1 கப்
  • பொட்டுக்கடலை – 1 கப்
  • உளுந்து – 1/2 கப்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • காய்ந்த மிளகாய் – 10
  • பூண்டு – 8 பல்
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். இந்த கடாயில் பச்சை வேர்க்கடலையை போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் போட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அதே கடாயில் பொட்டுக்கடலையை போட்டு அதையும் கருகாமல் சிவக்க வறுத்து தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக உளுந்தை போட்டு அதையும் சிவக்க வறுத்து தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக தேங்காய் துருவலை கடாயில் போட்டு வறுக்க வேண்டும். இந்த தேங்காய் முற்றிய தேங்காயாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். விரைவிலேயே வதங்கிவிடும். கருகாத அளவிற்கு வதக்க வேண்டும். தேங்காய் சிறிது நிறம் மாறியதும் இதனுடன் கருவேப்பிலை, உரித்த பூண்டு பற்களையும் சேர்த்து வதக்க வேண்டும். இந்த மூன்றும் ஈரத்தன்மை இல்லாமல் நன்றாக சிவக்க வறுத்த பிறகு இதையும் எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து இதையும் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலையின் தோல்களை நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வருத்த அனைத்து பொருட்களும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பான பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த இந்த பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆற வைத்து பதப்படுத்துவதன் மூலம் சட்னி வெகு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். சட்னி பொடி தயாராகிவிட்டது.

நமக்கு எப்பொழுதெல்லாம் சட்னி தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் எவ்வளவு சட்னி தேவையோ அதற்கு ஏற்றார் போல் சட்னி பொடியை எடுத்து வைத்து அதனுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து இந்த சட்னியுடன் ஊற்றி விட வேண்டும். அப்பொழுது தான் அரைத்தது போல் மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் ஸ்டைல் கெட்டி சைவ சால்னா செய்முறை

மிகவும் எளிமையான அதே சமயம் ருசியான தேங்காய் சட்னி பொடியை ஒரு முறை தயார் செய்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் ஆனாலும் நினைக்கும் போதெல்லாம் சட்னி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -