ஹோட்டல் ஸ்டைல் கெட்டி சைவ சால்னா செய்முறை

empty salna
- Advertisement -

இன்றைய காலத்தில் வீட்டில் சாப்பிடுவதை விட ஹோட்டலில் சாப்பிடுவது தான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. வீட்டில் சமையல் செய்யும் வேலை மிச்சம் என்றாலும் கடையின் சுவைக்கு அடிமையாகி போய் பலரும் கடைகளிலேயே வாங்கி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். அந்த மாதிரி அடிமையான ஒரு சுவை தான் சால்னா சுவை. புரோட்டாவிற்கு கொடுக்கக்கூடிய இந்த சால்னாவை எப்படி தான் வீட்டில் செய்தாலும் அதன் சுவை வரவில்லை என்று புலம்புபவர்கள் இனிமேல் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

இந்த முறைப்படி ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு ஹோட்டலுக்கு போய் சால்னா வாங்க வேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வராது. எந்த காய்கறியும் சேர்க்காமல் மிகவும் எளிதில் 15 நிமிடத்தில் அருமையான ஹோட்டல் ஸ்டைலில் கெட்டி சைவ சால்னா எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • கடல்பாசி – 2
  • பட்டை – 2
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • பிரியாணி இலை – 2
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • உப்பு – தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 4
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 5
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்
  • புதினா மற்றும் கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • தண்ணீர் – 100 எம்எல்

செய்முறை

முதலில் கசகசாவையும் முந்திரியையும் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடல்பாசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி லேசாக வதங்கியதும் இதில் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாடை அனைத்தும் போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து அதில் கசகசா, முந்திரி, தேங்காய் சோம்பு, சின்ன வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து கசகசா ஊறவைத்த தண்ணீரையும் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாடை நீங்கி வெங்காயம் தக்காளியும் நன்றாக வதங்கிய பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் விழுதையும் அதனுடன் சேர்த்து 100 எம்எல் தண்ணீரையும் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி இவற்றையும் சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு குக்கரை மூடி விட வேண்டும்.

மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். பிறகு அணைத்து விட வேண்டும். விசில் சென்ற பிறகு குக்கரை திறந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான அதே நேரத்தில் எளிதில் செய்யக்கூடிய ஹோட்டல் சுவையில் இருக்கக்கூடிய சைவ கெட்டிச் சால்னா தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த சால்னாவை சப்பாத்தி, பூரி, தோசை, ஊத்தாப்பம், இடியாப்பம் ஏன் சாதத்திற்கு கூட தொட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பூண்டு கார சட்னி செய்முறை

ஹோட்டலில் செய்து தருவதை விட அதிக சுவையுடன் அதே சமயம் ஆரோக்கியத்துடன் நாமும் வீட்டில் செய்து கொடுத்தால் ஹோட்டலுக்கு செல்லும் எண்ணமே வராது.

- Advertisement -