அடை மாவு அரைக்காமல் இப்படி சுவையான அடை தோசை சாப்பிட இந்த முறையில் மாவு தயார் செய்து அடை சுட்டு பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்

adai
- Advertisement -

எப்பொழுதும் சாப்பிடும் இட்லி தோசையை தவிர்த்து விட்டு, சற்று வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்றால் அதுவும் ஆரோக்கிய உணவாக இருக்க வேண்டும் என்றால், பலரும் வாரத்தில் ஒரு முறையாவது அடை மாவு ஊற வைத்து, அரைத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அடை செய்து கொடுப்பார்கள். இதன் சுவை சாப்பிடுவதற்கு வித்தியாசமாகவும், அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதனை செய்வதற்கு அரிசி, பருப்பு, உளுந்து அனைத்தையும் ஊற வைத்து, அவற்றை அரைக்க வேண்டும். இதற்கு வேலை கொஞ்சம் அதிகமாகும். ஆனால் இன்ஸ்டன்ட்டாக ரவை மற்றும் சேமியாவை வைத்து இந்த சுவையான அடை செய்து சாப்பிட்டு பாருங்கள். இனிமேல் எப்பொழுதும் மாவு அரைக்காமல் இப்படித்தான் அடை செய்து சாப்பிடுவீர்கள். அந்த அளவிற்கு சூப்பரான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சேமியா – ஒரு கப், ரவை – ஒரு கப், தயிர் – அரை கப், உப்பு – ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, கேரட் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – ஐந்து பல், சீரகம் – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்றவைத்து, கடாயை அடுப்பின் மீது வைக்க வேண்டும். பிறகு ஒரு கப் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் ஒரு கப் சேமியாவையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் இவை நன்றாக ஆறிய பின்னர், ஒரு கிண்ணத்தில் சேர்த்து, இவற்றுடன் அரை கப் தயிர் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் கேரட்டை பொடியாக நறுக்கிக் கொண்டு அதனையும் இவற்றுடன் சேர்த்து கலந்துவிட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 2 பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி மற்றும் 5 பல் பூண்டு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அதனையும் அந்த கலவையில் சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். பின்னர் இவற்றை பத்திலிருந்து பதினைந்து நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும்.

பின்னர் இந்த மாவிலிருந்து ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, ஒரு பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி, அதன் மீது வைத்து அடை போல் தட்டி கொள்ள வேண்டும். பின்னர் இதனை தோசை கல் மீது வைத்து சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து, திருப்பி போட்டு, இரண்டு புறம் சிவந்ததும் வேறு தட்டுக்கு மாற்றி, பரிமாறி கொடுத்தால் போதும். சுவையான இன்ஸ்டன்ட் அடை தயாராகிவிடும்.

- Advertisement -