பூண்டு தொக்கு செய்முறை

poondu thokku
- Advertisement -

வெயில் காலத்தில் பலரும் ஊறுகாய்களை தயார் செய்து வைத்துக் கொள்வார்கள். ஊறுகாயோட மட்டுமல்லாமல் வடகம், வத்தல் போன்றவற்றையும் தயார் செய்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இது எல்லாம் மலையேறிப் போய்விட்டது. எது வேண்டுமோ அதை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளும் அளவிற்கு பல பொருட்கள் கடைகளிலேயே கிடைக்கின்றன. ஆனால் நாம் வீட்டில் தயார் செய்வதற்கு இணையாக கடையில் கிடைக்காது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் மிகவும் அற்புதமான சுவை கொண்ட பூண்டு தொக்கை வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி தயார் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பூண்டில் விட்டமின் பி6, விட்டமின் சி, துத்தநாகம், நார்சத்துகள், கால்சியம், மெக்னீசியம், மாங்கனிஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை இழப்பு ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கெட்ட கொழுப்பை நீக்குகிறது. ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் – 1 1/2 குழிக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 10
  • பூண்டு – 2 முழு பூண்டு
  • இஞ்சி – 1 இன்ச்
  • சீரகம் – 1/2 டேபிள்ஸ்பூன்
  • புளி – எலுமிச்சை பழ அளவு
  • வெல்லம் – சிறிய துண்டு
  • கடுகு – 1/2 ஸ்பூன்
  • வெந்தயம் – 10
  • கருவேப்பிலை – 2 இனுக்கு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய் நன்றாக சிவந்து மொறு மொறு வென்று வறுபட்ட பிறகு அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு மீதம் இருக்கும் எண்ணெயில் உரித்து சுத்தம் செய்து வைத்திருக்கும் பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.

பூண்டை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் சீரகம், புளி, இஞ்சி இவற்றை சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பூண்டு நன்றாக பொன்னிறமாக சுருங்கி வரும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக சுருங்கி வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து நம் முதலில் வறுத்து வைத்திருந்த காய்ந்த மிளகாயை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயுடன் சேர்த்து வெல்லத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பூண்டு தொக்கு தயாராகி விட்டது. இதை தாளிப்பதற்கு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து இவை அனைத்தும் நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு தொக்கில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இந்த பூண்டு தொக்கு இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என்று அனைத்திற்கும் நாம் தொட்டுக் கொள்ளலாம். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது இந்த தொக்கை எடுத்துச் செல்ல முடியும். இதில் தண்ணீர் சேர்க்காததால் இது நீண்ட நாட்களாக வெளியில் இருந்தாலும் கெட்டுப் போவதற்கு வாய்ப்பே இல்லை.

இதையும் படிக்கலாமே:பேச்சுலர்ஸ் பருப்பு சாம்பார் செய்முறை

பூண்டை முழுதாக போடும் பொழுது பலரும் சாப்பிட விரும்ப மாட்டார்கள். இந்த முறையில் நாம் செய்யும் பொழுது பூண்டு என்று தெரியாமலேயே விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -