தக்காளி இல்லாமல் 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா போதும் தோசை, சப்பாத்திக்கு டேஸ்டியான சைட் டிஷ் ரெடி!

kadalai-maavu-chutney1
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பரான சைட் டிஷ் இது என்று கூறலாம். தென்னிந்தியாவை விட வட இந்திய மாநில மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த கடலை மாவு சட்னியை பாம்பே சட்னி என்றும் அழைப்பதுண்டு. ருசியான இந்த கடலை மாவு சட்னி எப்படி நாமும் எளிமையாக செய்யலாம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 2 டீஸ்பூன், மீடியம் சைஸ் வெங்காயம் – ஒன்று, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – இரண்டு, பூண்டு – 4 பல், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை விளக்கம்

இந்த கடலை மாவு சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய பவுலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவை முழுமையாக எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலி ஒன்றை வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு போட்டு பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகம், சோம்பு தாளித்து, நாலு பல் பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

பின்னர் தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர லேசாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை ஊற்ற வேண்டியது தான். கடலை மாவு ஊற்றியதும் ஒரு முறை நன்கு கலந்து விட்டு மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். கடலை மாவு சேர்த்திருப்பதால் திக்கான சட்னி போல நுரைத்து பொங்கி வரும். ஓரளவுக்கு கெட்டியாக ஆனதும் நறுக்கிய மல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விட வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே:
இப்படி ஒரு சிறு கீரை தொக்கு செய்து கொடுத்தால் கீரை பிடிக்காது என்ற வார்த்தை உங்கள் வீட்டில் யார் வாயிலிருந்தும் வராது.

இட்லி, தோசை என்றால் இப்படியே சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி என்றால் இன்னும் கெட்டியாக செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமாக இருக்கும். ரொம்ப ரொம்ப சுலபமாக செய்து அசத்தக்கூடிய இந்த சட்னி சாப்பிடும் பொழுதே இன்னும் நாலு இட்லி கேட்டு சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு டேஸ்டியாக இருக்கக்கூடிய இந்த ரெசிபியை நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க, உங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் உங்களை பாராட்டுவாங்க.

- Advertisement -