ஒரு வாரமானாலும் கெட்டுப்போகாத பூண்டு சட்னியை ஒரு முறை இப்படி அரைச்சு பாருங்க. அரைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும்.

poondu-chutney
- Advertisement -

பூண்டு உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இந்தப் பூண்டினை குழம்பில் போட்டாலும் சரி, அல்லது வேறு ஏதாவது பொரியலில் போட்டாலும் சரி, பூண்டை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகள் சாப்பிடுவார்கள். பெரியவர்களும் பூண்டை ஒதுக்கி வைக்கிறார்கள். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்தப் பூண்டின் சத்து முழுமையாக நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் இப்படி சட்னி அரைத்துக் கொடுங்கள். காரசாரமான இந்த சட்னியை யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க. 10 இட்லி, 10 தோசை, நாலு சப்பாத்தி சேர்த்து உள்ளே இறங்கும் என்றால் பார்த்துக்கோங்க. அந்த அளவுக்கு ருசியும் மனமும் இதில் அதிகம். இந்த சட்னியை அரைத்து வைத்தால் பிரிட்ஜில் வைக்காமலேயே ஒரு வாரம் ஆனாலும் இது கெட்டுப் போகாது.

இந்த சட்னி அரைப்பதற்கு நமக்கு 5 பொருட்கள் தான் தேவை. நல்லெண்ணெய் 1 குழி கரண்டி, தோலுரித்த பூண்டு பல் – 100 கிராம், வரமிளகாய் – 10, கல் உப்பு – தேவையான அளவு, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி அவ்வளவுதான்.

- Advertisement -

உங்களுக்கு காரம் அதிகம் தேவை என்றால் இன்னும் கொஞ்சம் கூடுதலான வரமிளகாயை வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. காரம் குறைவாக வேண்டும் என்றால் அதற்கேற்ப காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால் பூண்டு சட்னிக்கு காரம் சுருக்குன்னு இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெயை ஊற்றி, வர மிளகாய் – 10 போட்டு, மிளகாயை பொன்னிறம் வரும் வரை வறுத்து எண்ணெயை வடித்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் 100 கிராம் பூண்டு பல்லை போட்டு மூன்று நிமிடம் போல நன்றாக வதக்க வேண்டும். பூண்டு தோல் சுருங்கி லேசாக நிறம் மாறி வந்தவுடன் பூண்டையும் தனியாக எடுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த இரண்டு பொருட்களையும் அதாவது வறுபட்ட பூண்டு, மிளகாய், இந்த இரண்டு பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, வறுப்பதற்காக பயன்படுத்தினோம் அல்லவா அந்த எண்ணெயை இதில் ஊற்றி அரைக்க வேண்டும். தண்ணீர் ஊற்றி அரைக்கக்கூடாது.

விழுது போல அரைத்த இந்த சட்னியை கைப்படாமல் ஒரு ஸ்பூனில் வழித்து சின்ன கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். மீண்டும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு கருவாப்பிலை பெருங்காயம் தாளித்து இந்த சட்னி மேல் ஊற்றி கலந்து அப்படியே சுட சுட இட்லிக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்களேன். அமிர்தம் எல்லாம் என்ன சுவை.

இதன் சுவைக்கு நாக்கு அப்படியே அடிமையாகிவிடும். வீட்டில் இருப்பவர்களிடம் பாராட்டை பெற இதை விட சுலபமான சூப்பரான சட்னி வேறு இருக்கவே முடியாதுங்க. அந்த அளவுக்கு அருமையான ரெசிபி இது. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. மறக்காம இந்த சட்னிக்கு நல்லெண்ணையை மட்டும் பயன்படுத்துங்கள். வேறு எந்த எண்ணையும் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -