இந்த காராசேவு, வர தீபாவளிக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாமே! 1 மணி நேரத்தில, 1 கிலோ காராசேவு நம்ம கையால சுட்டு எடுத்திடலாம்.

karasevu

காராசேவு! இதை பேக்கரியில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். நம்முடைய வீட்டில் பெரும்பாலும், நம்முடைய கைகளால் முயற்சி செய்து பார்க்கவே மாட்டோம். முயற்சி செய்து பார்க்க முடியாத அளவிற்கு இது ஒன்றும் கஷ்டப்பட்டு செய்யக்கூடிய பலகாரம் அல்ல. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக மிக சுலபமான முறையில் காரா சேவு தயாரித்து விடலாம். நம் வீட்டில் இருக்கும் முறுக்குக் குழாய் போதும், காராசேவு பிழிவதற்கு. சரி, லேசான காரசார தோடு காராசேவு சூப்பராக சுலபமாக, எப்படி செய்வது பார்த்து விடலாமா?

rarasev

காராசேவு செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு  – 2 கப் (500 கிராம்), அரிசி மாவு – 1/4 கப், பொட்டுக்கடலை மாவு – 1/2 கப், பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன், மிளகு தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த் தூள் 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், சமையல் சோடா உப்பு – 2 சிட்டிகை, ஒரு குழி கரண்டி அளவு காய்ச்சிய எண்ணெய், தேவையான அளவு உப்பு, காராசேவை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய்.

இந்த பொருட்களில் உங்களுக்கு வெறும் மிளகு தூள் காரம் வேண்டுமென்றால், மிளகுத்தூள் காரத்தை தூக்கலாக சேர்த்துக் கொள்ளலாம். மிளகு தூள் வாசனை பிடிக்காதவர்கள், வெறும் மிளகாய் தூள் சேர்த்தும் இந்த காரா சேவை புழிந்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். வாசனைக்காக பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை யையும், இந்த மாவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

karasev1

Step 1:
முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சரியாக அளந்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். மசாலா பொருட்கள், உப்பு சேர்த்த கலவையை முதலில் உங்களது கைகளால் நன்றாக கலந்து விட்டு விடுங்கள். (பூண்டை மிக்ஸி ஜாரில் தோலுரித்து போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளலாம் அதை இந்த மாவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.)அதன் பின்பு முதலில் சூடான எண்ணெயை மாவில் குழிதோண்டி ஊற்றி விட்டு, கரண்டியால் மாவை ஒரு முறை கிளறி விட்ட பின்பு தான், கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு போல, இந்த மாவை பிசைய வேண்டும். சூடான எண்ணையை ஊற்றி விட்டு கையை விட்டு விட வேண்டாம்.

- Advertisement -

Step 2:
ரொம்பவும் தண்ணீராக மாவை பிசைந்து விட்டால், சேவு எண்ணெய்  குடிக்கும். ரொம்ப கட்டி பதத்திற்கு பிசைந்து விட்டீர்கள் என்றால், முறுக்கு அச்சில் போட்டு பிழிய முடியாது. சரியான முறுக்கு மாவு பக்குவத்தில் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதை சிறு சிறு உருண்டைகளாக, உங்கள் வீட்டு முறுக்கு அச்சின் அளவிற்கேற்ப மாவு உருண்டைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

karasev

Step 3:
சாதாரணமாக முறுக்கு சுடும், முறுக்கு அச்சு இருக்குமல்லவா? மூன்று ஓட்டைகள் உடையது. அந்த முறுக்கு அச்சே போதுமானது. எப்போதும் போல முறுக்கு குழாயில், உள்பக்கம் எண்ணெய் தடவி, மாவை போட்டு நேரடியாக எண்ணெயிலேயே பிழிய வேண்டும். காராசேவு உங்களுக்கு எந்த நீளத்திற்கு வேண்டுமோ, அந்த அளவிற்கு முறுக்கு அச்சில் இருந்து காரசேவு மாவை பிழிந்து விட்டு, அதன் பின்பு உங்களது விரல்களால், மாவை துண்டித்து விடுங்கள். அவ்வளவுதான். நீளவாக்கில் எண்ணெயில் சேவு விழத் தொடங்கும்.

karasev2

Step 4:
எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, காராசேவு எண்ணெயில் புழிய வேண்டும். அதன்பின்பு அடுப்பை, மிதமான தீயில் வையுங்கள். அப்போதுதான் காராசேவு உள்ளே இருக்கக்கூடிய மாவு, வெந்து வரும், மொரு மொரு பதத்திற்கு வரும். இறுதியாக அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, காராசேவு பொன்னிறம் வந்தவுடன் எண்ணெயை வடித்து எடுத்து விட வேண்டியது தான்.

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சரியான அளவில் போட்டு பிழிந்தால் சுவையான, கடைகளில் கிடைக்கும் காராசேவு பக்குவத்தில் வரும். இந்த தீபாவளிக்கு, இந்த காராசேவு செய்து உங்களுடைய உறவினர்களுக்கு கொடுத்து பாருங்கள்! மனநிறைவோடு அனைவரும் பலகாரங்கள் சேர்ந்த தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
என்ன செய்தாலும் ரசமே வைக்க வரவில்லை என்பவர்கள் ‘சூப் போல் சூப்பரான ரசம்’ வைக்க இப்படி செய்து பாருங்கள்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.