கருப்பு உளுந்து கஞ்சி

karuppu ulunthu
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்கள் தான். அந்த உணவு முறைகளை நாம் உண்ணாமல் இருப்பதால்தான் அதிகப்படியாக நோய்வாய்படுகிறோம். இந்த சமையல் குறிப்பு குறித்த பதிவில் நம்முடைய முன்னோர்கள் உண்ட உணவான உளுந்தங்கஞ்சியை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

கருப்பு உளுந்தில் அதிகப்படியான புரதம் இருக்கிறது. மேலும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பி காம்ப்ளெக்ஸ் சென்று சொல்லக்கூடிய சத்து அதிகப்படியாக இருப்பதால் உடலில் இருக்கக்கூடிய நரம்புகளும் எலும்புகளும் வலுப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, சிங்க், கால்சியம், பொட்டாசியம் போன்ற பலதரப்பட்ட சத்துக்கள் இருப்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கருப்பு உளுந்து – 2 கப்
  • பச்சை அரிசி – 1/2 கப்
  • தண்ணீர் – 4 கப்
  • உப்பு – 1/4 டீஸ்பூன்
  • வெல்லக் கரைசல் – ஒரு கப்
  • ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
  • சுக்குத்தூள் – 1/4 டீஸ்பூன்
  • தேங்காய் பால் – 1/2 கப்

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் கருப்பு உளுந்தை போட்டு வாசம் வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும். பிறகு அதை எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அதே பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு லேசாக வறுத்து அதையும் ஆரவைத்து கொள்ள வேண்டும். இரண்டும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவை ஜல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு மட்டும் உபயோகப்படுத்தி விட்டு மீதம் இருக்கும் மாவை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்து அதில் நான்கு ஸ்பூன் அளவிற்கு உளுந்து அரிசி மாவை சேர்க்க வேண்டும். பிறகு அதில் தண்ணீரை ஊற்றி கட்டி விழாத அளவிற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் வரை கை விடாமல் கிளற வேண்டும். மாவு நன்றாக வெந்து வாசனை வந்ததும் அதில் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு இவற்றில் ஏதாவது ஒன்றில் தண்ணீர் ஊற்றி அவை கரைந்ததும் அதை வடிகட்டி வெந்து கொண்டிருக்கும் காஞ்சியில் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக கொதித்ததும் அதில் ஏலக்காய் தூள் சுக்குத்தூள் இவற்றை சேர்த்து தேங்காய் பாலை ஊற்றி இறக்க வேண்டும். தேங்காய் பால் ஊற்ற விருப்பம் இல்லாதவர்கள் துருவிய தேங்காயை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம். மேலும் இதில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முந்திரி பருப்பு , பாதாம் பருப்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான கருப்பு உளுந்து கஞ்சி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: பூண்டு மிளகு சாதம்

மிகவும் ஆரோக்கியமான சத்து நிறைந்த கருப்பு உளுந்து கஞ்சியை உண்டு நாமும் நம் முன்னோர்களைப் போல் ஆரோக்கியமாக வாழலாம்.

- Advertisement -