அருமையான ஆரோக்கியத்தை தரும் கருவேப்பிலை எள்ளு பொடி, இப்படி செஞ்சு பாருங்க. தட்டு சோறு ஒரு நிமிடத்தில் காலி ஆகிடும்.

podi
- Advertisement -

ஆந்திரா சமையல் என்றால் காபியிலும் காரம் இருக்கும். கேரளா சமையல் என்றால் தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும். கர்நாடக சமையல் என்றால் இட்லியிலும் இனிப்பு இருக்கும். தமிழ்நாட்டு சமையலில் தான் சுடுதண்ணீரிலும் சுவை இருக்கும். அப்படிப்பட்ட சமையல்தாங்க நம்ம ஊரு சமையல். கருவேப்பிலை எள்ளு இந்த இரண்டு பொருளை வைத்து நாவிற்கு சுவை தரும், ஒரு பொடி எப்படி அரைப்பது என்றுதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 1 ஸ்பூன் இந்த பொடியை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் உடலுக்கு அத்தனை ஆரோக்கியம். சரி நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை பார்த்து விடுவோமா.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள் அதில் 2 கப் – அளவு கருவேப்பிலையை போட்டு மொறு மொறுவென வறுக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு கருவேப்பிலையை வறுத்து அடுப்பை அணைத்து கடாய் சூட்டிலேயே அப்படியே கருவேப்பிலைகளை விட்டுவிடுங்கள். நன்றாக ஆறியதும் கருவேப்பிலை மொறுமொறுப்பாக வந்துவிடும். இந்த கருவாப்பிலை அப்படியே எடுத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு அதே கடாயில் வர மல்லி – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு ஒரு நிமிடம் போல வறுத்தால் படபடவென பொறிந்து வரும். அதன் பின்பு கருப்பு எள் – 1/4 கப், வரமிளகாய் – 12 சேர்த்து, எள்ளு நன்றாக படபடவென பொரியும் அளவிற்கு வறுத்து இதை அப்படியே கருவேப்பிலை இருக்கும் தட்டில் கொட்டி ஆர வையுங்கள். (அடுப்பை மிதமான தீயில் வையுங்கள். வறுக்கும்போது எள்ளு கருகி விட்டால் பொடியின் சுவை நன்றாக இருக்காது.)

அடுத்தபடியாக அதே கடாயில் தோல் உரித்த பூண்டு பல் – 10  போட்டு லேசாக சூடு செய்து இதை தனியாக ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வறுத்து வைத்திருக்கும் எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் மாற்றி தேவையான அளவு – உப்பு போட்டு அரைக்க வேண்டும்.

- Advertisement -

பூண்டை மட்டும் முதலிலேயே சேர்க்கக்கூடாது. வருத்தப்பூண்டை தனியாக எடுத்து ஆற வைத்து இருக்கிறீர்கள் அல்லவா. அதை இறுதியாக அரைத்த பொடியோடு சேர்த்து ஒரே ஒரு ஓட்டு ஓட்டி, அதன் பின்பு இந்த பொடியை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இரண்டு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். அதற்கு மேலே ஸ்டோர் செய்ய வேண்டும் என்றால் பிரிட்ஜில் தான் வைக்க வேண்டும்.

இந்த பொடியை சுடச்சுட சாதத்தோடு போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இப்படி சாதம் பிசைந்து லஞ்ச் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம். இந்த பொடியை நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி தோசைக்கு தொட்டும் சாப்பிடலாம். நல்ல சுவை இருக்கும். உங்களுக்கு இந்த ஹெல்தியான ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாதீங்க கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க. உடலுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம்.

பின்குறிப்பு: நிழலிலேயே உலர வைத்த காய்ந்த கருவேப்பிலை என்றாலும் இதை இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பூண்டை பச்சையாக போட்டு அரைத்தால் இதனுடைய சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். ஆனால் பொடி ஒரு வாரத்திற்குள் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். இன்ஸ்டன்டாக இந்த பொடியை உடனடியாக அரைத்து காலி செய்வதாக இருந்தால் பூண்டை பச்சையாக போட்டு அரைத்து சாப்பிட்டு பாருங்கள். அதன் ருசி இன்னும் தனி.

- Advertisement -