காரசாரமா கார சட்னி அரைக்க போறீங்களா? 1 கைப்பிடி கருவேப்பிலை இப்படி சேர்த்து அரைச்சா டேஸ்டுல மயங்கிடுவீங்க! அவ்வளவு ருசியாக இருக்கும்.

tomato-curry-leaves-chutney
- Advertisement -

பொதுவாக கார சட்னி செய்யும் பொழுது கருவேப்பிலை அவ்வளவாக சேர்ப்பது கிடையாது, ஆனால் எல்லா வகையான உணவுப் பொருட்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக கருவேப்பிலையை சேர்த்து வருவது ரொம்பவே நல்லது. கண்களுக்கும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும், உடல் வலுவிற்கும் நன்மை செய்யக்கூடிய இந்த கறிவேப்பிலையை இனியும் தூக்கி எறிய வேண்டாம். சரி, சூப்பரான காரசாரமான காரச் சட்னியில் கருவேப்பிலை போட்டு எப்படி சூப்பரா தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், தக்காளி – மூன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, மல்லித்தழை – சிறிதளவு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

செய்முறை

கருவேப்பிலை காரச்சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சமையல் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். சிவக்க இவை வறுபட்டதும், பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப காம்பு நீக்கி முழுதாக அப்படியே சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் இவற்றுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கி வந்ததும், ஒரு கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலையும், சிறிதளவு மல்லி தழைகளையும் நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை லேசாக ரெண்டு நிமிடம் வதக்கியதும், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மசிய வதங்க விடுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் மூடி போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கும். பிறகு அடுப்பை அணைத்து நன்கு ஆற விட்டு விடுங்கள். ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம், டேஸ்ட் மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே:
இந்த கொளுத்துற வெயில்ல உடம்பை குளுகுளுன்னு வச்சுக்க அட்டகாசமான இந்த இயற்கையான ரெசிபிகளை ரொம்ப சுலபமா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கங்க. இனி வெய்யிலை நினைச்சு பயப்படவே வேண்டாம்.

பிறகு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டி சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமாறி பாருங்கள், எவ்வளவு இட்லி கொடுத்தாலும் நீங்கள் பாத்தவே இல்லை இன்னும் வேண்டும் என்று கேட்பீர்கள். அவ்வளவு ருசியாக இருக்கக்கூடிய இந்த கார சட்னி ரெசிபி உடலுக்கு ரொம்பவும் ஆரோக்கியமானது. தலைமுடி நன்கு கருகருவென்று நீண்டு வளர செய்யக்கூடிய கருவேப்பிலையை இந்த வகையில் முழுமையாக நமக்கு உடம்பில் சேரும் பொழுது, அதை ஏன் விடுவானேன்! இனி எல்லா சமையலிலும் கருவேப்பிலை போட்டு சமைக்க வேண்டியது தான்.

- Advertisement -