கருவேப்பிலை பூண்டு குழம்பு செய்முறை

karveppilai poondu kulambu
- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்புகளை செய்து மதிய நேரத்தில் உணவருந்தும் பழக்கம் நம்முடைய தமிழர்களின் பண்பாட்டில் அதிக அளவில் இருக்கிறது. இன்றைக்கு இந்த குழம்பு வைக்கலாமா? அந்த குழம்பு வைக்கலாமா என்று யோசிக்கும் இல்லத்தரசிகளும் அதிகமாகவே தான் இருக்கிறார்கள். சிலர் ஒரு நாள் வைத்த குழம்பை 10 நாள் வரை வைத்திருந்து சூடு பண்ணி சூடு பண்ணி சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. இப்படி நாம் சூடு பண்ண சூடு பண்ண அதன் சுவை அதிகமாகவே இருக்கும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கருவேப்பிலை பூண்டு குழம்பை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக பூண்டு குழம்பு என்று நாம் வைத்தோம் என்றால் அதில் இருக்கக்கூடிய பூண்டு வெங்காயத்தை குழந்தைகள் எடுத்து தனியாக ஒதுக்கி வைத்து விடுவார்கள். அதே போல் குழம்பில் போட்டு தாளிக்க கூடிய கருவேப்பிலையையும் தனியாக எடுத்து வைப்பார்கள். கருவேப்பிலையும் பூண்டிலும் அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது. அந்த சத்துக்கள் நம் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று என்னும் பட்சத்தில் இப்படி ஒதுக்காமல் அதையும் சேர்த்து சாப்பிடுவதற்காக மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான குழம்பாக தான் இந்த குழம்பு திகழும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 5
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
  • கருவேப்பிலை – 1 1/2 கப்
  • பூண்டு – 200 கிராம்
  • தக்காளி – 4
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • புளி – சிறிய ஆரஞ்சு பழ அளவு
  • வெள்ளம் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கருவேப்பிலையை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் எண்ணையில் உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.

வறுத்த இந்த பூண்டிலிருந்து பத்து பூண்டை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதம் இருக்கும் பூண்டை மிக்சி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்து அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் வறுத்து வைத்திருக்கும் கருவேப்பிலையையும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், கடுகு இவை இரண்டையும் சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். பிறகு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து இதன் வாடை போகும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை இதனுடன் சேர்த்து தக்காளி குழையும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குலைந்த பிறகு இதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் மூன்றையும் சேர்த்து வதக்கி இதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் புளியையும் கரைத்து ஊற்ற வேண்டும். புளியின் வாடை போகும் அளவிற்கு அதாவது குறைந்தது ஐந்து நிமிடத்தில் இருந்து ஏழு நிமிடம் வரை இதை கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் வெள்ளம், அரைத்து வைத்திருக்கும் பூண்டு விழுது, அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை விழுது இவை இரண்டையும் சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஒரு ஸ்பூன் பெருங்காயத் தூளையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இரண்டு நிமிடம் அடுப்பில் குறைந்த தீயில் வைத்திருக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு குழம்பிற்கு மேல் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணையை ஊற்றி, வறுத்து வைத்திருக்கும் பூண்டு பற்களையும், பச்சைையாக ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையையும் இந்த குழம்பில் போட்டு ஒரு கலக்கு கலக்கி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான் மிகவும் சுவையான கருவேப்பிலை பூண்டு குழம்பு தயாராகிவிட்டது.

இதை செய்தவுடன் சாப்பிடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து சாப்பிடும் பொழுது இதன் சுவை அதிகமாக இருக்கும். ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டால் பத்து நாட்கள் வரை இது கெட்டுப் போகாது. மேலும் இந்த குழம்பை இட்லி, தோசை, சப்பாத்தி சாதம் என்று அனைத்திற்கும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கற்றாழை சட்னி செய்முறை

ஆரோக்கியமான அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய இந்த குழம்பை ஒரு முறை செய்வதன் மூலம் பத்து நாட்கள் வரை நம்முடைய சமையல் வேலை குறையும் என்பதால் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -