கறிவேப்பிலை நல்ல செழிப்பாக பெரிய பெரிய இலைகளுடன் வர, செலவே இல்லாத அதே சமயம் சத்தான இந்த உரத்தை கொடுத்து பாருங்க. உங்க கறிவேப்பிலை செடி காடு போல வளர்ந்து நிற்கும்.

- Advertisement -

தாவர வகைகளில் மிகவும் முக்கியமானது கறிவேப்பிலை என்றே சொல்லலாம். கறிவேப்பிலை தினமும் நம் அன்றாட தேவைக்கு உதவும் அத்தியாவசியமான ஒன்று. இந்த கறிவேப்பிலை செடி அனைவர் வீட்டிலும் வைத்து வளர்ப்பது மிகவும் நல்லது மட்டுமின்றி அவசியமும் கூட. கறிவேப்பிலை செடி வளர சற்று தாமதம் ஆகும் அல்லது சில சமயம் பட்டுப் போய் விடும். அப்படி ஆகாமல் அதை எப்படி பராமரித்து வளர்ப்பது என்பதை எல்லாம் இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கறிவேப்பிலையை பொறுத்த வரையில் நல்ல வெயில் படும் இடத்தில் வைத்து தான் வளர்க்க வேண்டும். இந்தச் செடிக்கு நைட்ரஜன் சத்து அதிகமான அளவில் தேவைப்படும். அப்படியான உரங்களை கொடுத்தால் மட்டுமே கறிவேப்பிலை செடியானது நன்றாக செழித்து வளரும். இப்போது இந்த செடிகளுக்கு கொடுக்க வேண்டிய அந்த சத்தான உரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

எந்த செடியாக இருந்தாலும் அதற்கு நாம் தேர்வு செய்யும் உரம் மிகவும் முக்கியமானது. செடி வைக்க உங்களிடம் இருக்கும் எந்த மண்ணை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதில் கொஞ்சம் கம்போஸ்ட்டுடன், வேப்பம் புண்ணாக்கு இரண்டையும் கலந்தே வைக்கும் போது செடியில் பூச்சித் தொல்லை, இலை அழுகல், வேர் தாக்குதல் போன்றவற்றை ஆரம்பத்திலே நாம் தடுத்து விட முடியும்.

இந்த கறிவேப்பிலை செடிக்கு தேவையான நைட்ரஜன் நம் வீட்டில் கிச்சனில் பயன்படுத்தி மீதமாகும் கழிவுகளில் அதிகம் உள்ளது. அது மட்டும் இன்றி அரிசி கழுவும் தண்ணீர், பருப்பு கழுவும் தண்ணீர் இவற்றையெல்லாம் வீணாக்காமல் செடிகளுக்கு கொடுத்து வந்தாலே போதும். அதே போல் பூச்சி தாக்குதல் இந்த கறிவேப்பிலை செடியில் அதிகமாக வரும்.

- Advertisement -

சில நேரங்களில் இலைகள் மஞ்சளாக கரும்புள்ளிகள் போன்று வந்து விடும். இப்படி வந்தால் உடனே அந்த கிளைகளை எல்லாம் அப்புறப்படுத்தி விட வேண்டும். இல்லையென்றால் மொத்த செடியும் வீணாகி விடும். அதன் பிறகு வேப்பெண்ணை கரைசலை தெரிந்தாலே போதும். இந்த பூச்சி தாக்குதலில் இருந்து செடியை காப்பாற்றி விடலாம்.

இதற்கு இரண்டு உரங்களை தொடர்ந்து கொடுத்து வரலாம். ஒரு டம்ளர் புளித்த மோர்க்கு பத்து டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை வாரம் ஒரு முறை செடிக்கு தொடர்ந்து கொடுத்து வரும் போது செடிகள் நன்றாக செழித்து பெரிய பெரிய இலைகளுடன் வளர்ந்து நிற்கும்.

- Advertisement -

அடுத்து இன்னொரு முக்கியமான உரம் என்று எடுத்துக் கொண்டால் நம் வீட்டில் பயன் படுத்தி மீதமாகும் இட்லி மாவில் ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் கலந்து அத்துடன் ஒரு கப் அளவு தண்ணீரையும் சேர்த்து மூன்று நாள் வரை அப்படியே நொதிக்க வைத்து விடுங்கள். மூன்று நாள் கழித்து அதில் 5 பங்கு தண்ணீர் கலந்து செடிகளின் வேர்களுக்கு இதை கொடுத்து வந்தால் செடி பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதுடன், இலைகளும் பெரிய பெரியதாக வந்து செடி சீக்கிரமாக மரமாகும்.

இதையும் படிக்கலாமே: மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள் இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் எவ்வளவு பெரிய தோட்டத்தையும் வைத்து செலவே இல்லாமல் வளர்க்கலாம்.

நீங்களும் உங்க வீட்டு தோட்டத்தில் கறிவேப்பிலை செடியை நட்டு இந்த முறையில் பராமரித்து வந்தால் சுலபமான முறையில் கறிவேப்பிலை செடியை வளர்த்துவிடலாம். இப்போது எல்லாம் கடைகளில் கிடக்கும் கறிவேப்பிலையில் அதிக அளவு கெமிக்கல் கலந்து இருக்கிறது. அதை நாம் பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக அதற்கான விளைவுகளும் இருக்கும். நீங்கள் கடையில் வாங்கி பயன்படுத்தும் கறிவேப்பிலையை கூட கொஞ்சம் மஞ்சள், உப்பு கலந்து தண்ணீரில் அலசி அதன் பிறகு பயன்படுத்துவது நல்லது. இந்த கறிவேப்பிலையை செடி நாமே வீட்டில் வளர்த்து பயன்படுத்தி வரும் போது இது போன்ற பாதிப்பில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -