கேது ஆதிக்கம் உள்ள ஜாதக பலன்கள்

Astrology ketu

மிக சிறந்த ஆன்மீக புருஷர்களின் சரித்திரத்தை கேட்கும் போதோ அல்லது படிக்கும் போதோ அவர்களின் ஆற்றல்களை எண்ணி வியக்கிறோம். அவர்களில் சிலரை நமது மானசீக குருவாக போற்றி வணங்குகிறோம். நம்மில் சிலர், அவர்களை போல நாமும் ஞான மற்றும் மோட்ச நிலையை அடைய முடியுமா என்று மனதிற்குள் எண்ணுகிறோம். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கேதுவின் நிலையைகொண்டு இதற்கான விடையை நாம் அறியலாம்.

Rahu Kethu

மோட்ச நிலை பெரும் ஜாதகம்:

கேது கிரகம் “ஞானகாரகன்” “மோட்ச காரகன்” என பொதுவாக அழைக்கப்படுகிறார். ஒரு மனிதனுக்கு ஆன்மீக நாட்டம் ஏற்படுவதற்கு அவனது ஜாதகத்தில் கேது பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். நமது மதத்தின் பல நூல்களிலும் “மோட்சம்” எனப்படும் மீண்டும் பிறவா நிலை உயர்வானதாக போற்றப்படுகிறது. இந்த மோட்சத்தை ஒருவருக்கு வழங்க கூடியவர் கேது பகவான். ஜோதிட சாத்திரத்தின் படி ஒரு ஜாதகருக்கு அவரது ஜாதகத்தில் 12 ஆம் வீட்டில் கேது கிரகம் மட்டும் தனித்து இருக்கும் பட்சத்தில் அந்த நபர் இந்த பிறவியுடன் முக்தியடைந்து விடுவார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஞானிகளின் ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் கேது கிரகம் தனித்து இருந்ததாக அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதுவே கேது கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நீச்ச அமைப்பில் இருந்தால் அவர் ஆன்மீகத்திற்கு எதிர்பதமான அத்தனை காரியங்களையும் செய்ய கூடும்.

அஸ்வினி, மகம், மூலம் போன்ற கேது பகவானின் ஆதிக்கம் மிகுந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் 7, 16, 25 போன்ற கேது கிரகத்தின் ஆதிக்கம் மிக்க தேதிகளில் பிறந்தவர்களுக்கும், இயற்கையாகவே மற்ற எந்த கிரகம் மற்றும் நட்சத்திரக்காரர்களை விட ஆன்மீக தேடல் மற்றும் ஈடுபாடு அதிகம் இருக்கும். இவர்களில் ஒரு சிலர் இளம் வயதில் நாத்திக கொள்கைகளை கொண்டவர்களாக இருந்தாலும், நடுத்தர மற்றும் முதுமை காலங்களில் ஆத்திகர்களாகி விடுவார்கள். இவர்களில் பலர் திருமணம் செய்து கொண்டாலும் தாமரை இலை நீர் போல இல்லற வாழ்வை மேற்கொண்டு மற்றொரு பக்கம் ஞானம் அடைவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பர்.

astrology

நடப்பதை முன்கூட்டியே அறியும் ஞான அமைப்பு

இந்த கேது பகவானின் ஆதிக்கம் மிகுந்தவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு அதிகமிருக்கும். இவர்களில் பலருக்கு பின்னர் நடக்க இருக்கும் சில விடயங்கள் முன்கூட்டியே இவர்களின் உறக்கத்தில் கனவுகளின் மூலம் தெரிந்து விடும். இவர்கள் யோகம் மற்றும் தியானக்கலையில் இறையனுபவத்தை பெற ஈடுபடும்போது இவர்களுக்கு சுலபத்தில் பல சித்துக்கள் கைவர பெறும். ஆனால் அதில் மனம் நிலை கொள்ளாமல் தீவிர யோக சாதனைகளில் இவர்கள் ஈடுபடுவார்களேயானால் உலகை உய்விக்கும் சிறந்த ஞானிகள் மற்றும் சித்தர்களாக மிளிர்வார்கள்.

கேது பகவானின் ஆதிக்கம் இருந்தும் ஒரு சிலருக்கு ஜாதகத்தில் உள்ள சில தோஷங்களால் மேற்கூறிய பலன்கள் சற்றும் குறைவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரர் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் அதிஷ்டம் பெருகும்

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் மற்றும் ஆன்மீக குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.