கொத்தமல்லி இட்லி பொடி ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. கம கமன்னு வாசத்தோடு இட்லிக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.

idli-podi
- Advertisement -

இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஆரோக்கியமான இட்லிபொடிகளில் இந்த கொத்தமல்லி பொடியும் ஒன்று. வெறும் கொத்தமல்லி விதைகளை மட்டும் வைத்து இட்லி பொடி செய்தால் சிலருக்கு அதில் வரக்கூடிய மல்லி வாசம் பிடிக்காது. ஆனால் கொத்தமல்லியுடன் எள்ளு சேர்த்து இப்படி ஒரு இட்லி பொடி அரைத்துப் பாருங்கள். இதைவிட இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான ஆரோக்கியமான வேறு இட்லி பொடி இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி தான் இது. வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

என்னென்ன பொருட்கள் வேண்டும் என்று முதலில் பார்த்துவிடலாம். வர மல்லி – 1 கப், எள்ளு – 1/2 கப், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், வரமிளகாய் – 10, கருவேப்பிலை – 4 கொத்து, பூண்டு பல் – 10, உப்பு தேவையான அளவு.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அந்த கடாய் நன்றாக சூடானதும் 1 கப் அளவு வரமல்லி போட்டு சிவக்க சிவக்க வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். எண்ணெய் ஊற்றி வறுக்கக் கூடாது. கிராம் கணக்கில் பார்த்தால் 200 கிராம் அளவு கொத்தமல்லி விதைகள் சரியானதாக இருக்கும். மணக்க மணக்க வாசம் வரும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறிய பின்பு இந்த வர மல்லியை மிக்சி ஜாரில் போட்டு முதலில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மல்லிப்பொடி மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும்.

அடுத்து அதே கடாயில் 1/2 கப் அளவு எள்ளு சேர்த்து படபடவென பொரிந்து வரும் அளவிற்கு வறுக்க வேண்டும். படபடவென்று பொரிந்து வாசம் வந்தவுடன் இந்த எள்ளு தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக அதே கடாயில் வரமிளகாய் – 10, கறிவேப்பிலையை – 4 கொத்து, போட்டு மொறுமொறுவென வறுத்து இந்த பொருட்களையும் எள்ளுடன் கொட்டி விடுங்கள்.

- Advertisement -

இப்போது வறுத்த எள்ளு வரமிளகாய், கருவேப்பிலை, இந்த எல்லா பொருட்களையும் மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் வர மல்லி பொடியுடன் சேர்த்து விட்டு, இந்த பொருட்களோடு பூண்டு பல் – 10, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு இட்லி பொடி போல கொரகொரப்பாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். சூப்பரான கமகம வாசத்தோடு வர மல்லி பொடி தயார். இதில் வரமல்லி எள்ளு பூண்டு சேர்த்து இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொடியாக இருக்கும். 8 லிருந்து 10 நாட்கள் இந்த பொடியை வெளியில் வைத்து சாப்பிடலாம். பச்சையாக பூண்டு சேர்த்து இருப்பதால் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஃப்ரிட்ஜில் செய்து வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதை வைத்துக் கொள்ளலாம். கொஞ்சமாக இட்லி பொடியை வைத்து நல்லெண்ணை ஊற்றி குழைத்து சுடச்சுட இட்லியில் தொட்டு சாப்பிட்டுப்பாருங்கள். அடடா வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில் உங்களுக்கு. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -