ஆவணி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியில் இருந்து புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை வரை இருக்கக்கூடிய 15 நாட்களும் மகாளய பட்ச காலம் என்று கூறப்படுகிறது. இந்த 15 நாட்களில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த 15 நாட்களும் முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் ஆகவும் முன்னோர்கள் மனமகிழ்ந்தே நமக்கு ஆசி வழங்கக்கூடிய நாட்களாகவும் திகழ்கிறது. இந்த 15 நாட்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரத்தை நம் மகாபாரணி என்று கூறுகிறோம். இந்த பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் முன்னோர்களின் அருளையும் எமதர்ம ராஜனின் அருளையும் பெற முடியும் என்றுதான். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகா பரணி தீபம் ஏற்றும் முறை
பரணி தீபம் என்றதும் நம் நினைவிற்கு வருவது கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்றக்கூடிய பரணி தீபம் தான். ஆனால் இதையும் தவிர்த்து மஹாளய பட்சத்தில் வரக்கூடிய பரணியையும் மகாபாரணி என்று கூறுகிறோம். இந்த பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நாம் ஏற்றக்கூடிய ஒரே ஒரு தீபம் நம்முடைய முன்னோர்களின் அருளையும் ஆசியையும் பெற உதவும். மேலும் நம் வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உடல்நலம் சீராவதற்கு இந்த தீபம் உதவி செய்யும். எமதர்ம ராஜனின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு உதவி செய்யும். அப்படிப்பட்ட ஒரு தீபத்தை எந்த முறையில் ஏற்றி எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
மஹாளய பட்சத்தில் வரக்கூடிய மகாபாரணி என்பது செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்று மாலை 5:30 மணிபோல் இந்த மகா பரணி தீபத்தை நாம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வீட்டிற்குள் ஏற்றக்கூடாது. வீட்டிற்கு வெளியே அல்லது மொட்டை மாடியில் தான் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஒருமுறை ஏற்றிவிட்டால் போதும். திரும்பவும் அந்த தீபத்திற்கு எண்ணெய் ஊற்றுவது, திரியை தூண்டிவிடுவது, அணைந்த தீபத்தை திரும்ப ஏற்றுவது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது.
இந்த தீபத்தை வெளியில் ஏற்றும் பொழுது சற்று உயரமான இடமாக பார்த்து ஏற்ற வேண்டும். தரைத்தளத்திற்கு இணையாக தீபத்தை வைத்து ஏற்றக்கூடாது. மேலும் இந்த தீபத்தை ஏற்றுவதற்காக நாம் பயன்படுத்தக்கூடிய எந்த பொருட்களையும் வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஏற்ற வேண்டும். இந்த தீபம் தெற்கு பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். ஏனென்றால் தெற்கு என்பது எமதர்ம ராஜனுக்கு உரிய திசையாக கருதப்படுகிறது. மேலும் இந்த தீபத்தை நாம் எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபத்தை போல் விளக்கிற்கும் முன்பாக நின்று ஏற்றக்கூடாது. விளக்கிற்கு பின்புறம் நின்று தான் ஏற்ற வேண்டும்.
அதேபோல் இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு தீபத்திற்கு முன்பாக யாரும் செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணி பெண்கள் இருக்கக்கூடிய வீட்டில் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. அதைப்போல் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகாமல் இருக்கும் பட்சத்திலும், திருமணமாகி ஒரு வருடம் கூட முடியவில்லை என்பவர்கள் வீட்டிலும் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. மாலை 5:30 மணி அளவில் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்து விட வேண்டும். இந்த தீபம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அவ்வளவு நேரம் எரிந்து அதுவாகவே குளிரட்டும்.
மறுநாள் காலையில் அதாவது சனிக்கிழமை அன்று காலையில் இந்த தீபத்தை ஏற்றுவதற்காக நாம் பயன்படுத்திய விளக்கு திரி எண்ணெய் மற்றும் உயரமாக வைப்பதற்கு ஏதேனும் பொருட்களை பயன்படுத்தி இருந்தால் அவை அனைத்தையும் எடுத்து வீட்டிற்கு வெளியே கால் படாத இடத்தில் போட்டுவிட்டு வந்து தான் குளிக்க வேண்டும். இந்த தீபத்தை நாம் மஹாளய பட்ச காலத்தில் ஏற்றுவதன் மூலம் எமதர்மராஜனின் அருளை பெற முடியும். அதனால் வீட்டில் துர்மரணம் ஏற்படாது, யாருக்கேனும் உடல்நலம் பாதிப்பு இருந்தால் அவர்களின் உடல் நலம் சீராகும். மேலும் நம்முடைய முன்னோர்களின் பரிபூரண ஆசீர்வாதத்தையும் நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையை தீர்க்கும் தேய்பிறை பஞ்சமி பரிகாரம்
மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மகாபாரணி தீபத்தை முழுமனதோடு முன்னோர்களையும் எமதர்ம ராஜனையும் நினைத்து ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு எமதர்ம ராஜனின் அருளும் முன்னோர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.