வீணா போன காய்கறி கழிவுகளை உரமாக்கும் எளிய வழி என்ன? இப்படி செய்யுங்கள், நாற்றம் அடிக்காமல் எல்லா வகையான செடிகளுக்கும் 10 பைசா செலவில்லாமல் இயற்கை உரம் தயாரித்து விடலாம்!

uram-pot-veg-waste
- Advertisement -

செடிகளுக்கு காய்கறி மற்றும் பழ கழிவுகளை உரமாக கொடுத்தால் அது செழித்து வளரும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். இத்தகைய கழிவுகளை உரமாக்குவது எப்படி? என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் வெங்காய தோல், தக்காளி தோல்களை எல்லாம் அப்படியே கொண்டு போய் செடிகளுக்கு போட்டால் அது மக்கி மண்ணோடு மண்ணாக போவதற்கு நிறைய நேரம் எடுக்கும். அதற்குள் பூச்சிகளும், புழுக்களும் வரத் துவங்கி விடும். பிறகு எப்படி தான் இயற்கை உரத்தை எளிதாக தயாரிப்பது? என்கிற பயனுள்ள சுவாரசிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

plant-uram

நீங்கள் அனுதினமும் பயன்படுத்தும் காய்கறிகளை பயன்படுத்திய பிறகு அதனுடைய தோல் கழிவுகள் அத்தனையும் சத்துக்கள் மிகுந்தது என்பதால் அவற்றை நீங்கள் உங்கள் வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். அதே போல தான் பழங்களையும் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியாமல் அதன் கழிவுகளையும் தோல், கொட்டை போன்ற அத்தனை பகுதிகளையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற முட்டை ஓடு, தேங்காய் நார், அட்டைகள், காகிதங்கள் கூட சேகரித்து வைத்து இயற்கை உரத்தை சுலபமாக தயாரித்து விடலாம்.

- Advertisement -

நாம் வேண்டாம் என்று வீணாக தூக்கி எறியும் இந்த குப்பையில் தான் சத்து மிகுந்த உரம் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதனை பதப்படுத்தி உரமாக்குவது பெரிய வேலையெல்லாம் ஒன்றும் கிடையாது. மிகமிக எளிமையான ஒரு விஷயம் தான். நீங்கள் மண்பானை விற்கும் கடைகளுக்கு சென்று உடைந்த அல்லது ஓட்டை விழுந்த பானைகளை விலைக்கு கேளுங்கள். புதிய பானையின் விலையை விட இந்த ஓட்டை பானை மிகவும் மலிவு தான். 20 ரூபாய் 30 ரூபாய்க்குக் கூட மிகப் பெரிய பானைகள் கிடைக்கும். பெரிய அளவிலான பானைகளை ஒன்று அல்லது இரண்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அதனை சுற்றிலும் தேவையற்ற காட்டன் துணியால் நன்கு இறுக கட்டிக் கொள்ளுங்கள். கால்பாகம் அளவிற்கு மண்ணை போட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். பானையின் வாயை மூடி சிறு பூச்சிகள் கூட உள்ளே நுழையாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பானைக்கு அடியில் ஓட்டைகள் இருக்கிறதா? என்று பாருங்கள். இல்லை என்றால் நீங்கள் ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். தேங்காய் பத்தைகளை எடுக்கும் கருவியை கொண்டு லேசாக கொத்தி விட்டால் போதும், பானையில் ஓட்டை விழுந்து விடும். அப்பொழுது தான் நீங்கள் கழிவுகளை சேகரிக்க சேகரிக்க அதிலிருந்து வரக்கூடிய நீரானது வெளியில் செல்ல உதவும். இதனால் நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

மேலும் நீங்கள் காய்கறி கழிவுகளை சேகரித்து வரும் பொழுது இடை இடையே அட்டைப் பெட்டிகள், காகித துண்டுகளை கூட போட்டு விடலாம். இதனால் நீரை உரிந்து கொண்டு நமக்கு உதிரி உதிரியான உரத்தை கொடுக்கும். மண் பானையில் இருக்கும் துவாரங்கள் வழியாக நீர் ஆவியாகி உள்ளே இருக்கும் கழிவுகள் மக்கி நமக்கு உரம் கிடைக்கும். சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் நிறைந்துள்ள பழத்தினுடைய தோல்களை தனியாக இது போல் சேகரித்து உரமாக்கி பின்னர் உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு கொடுத்து பாருங்கள். மளமளவென பூக்கள் பெரிது பெரிதாக கொத்துக் கொத்தாக பூத்து தள்ளும்.

veggitable-waste

நீங்கள் தினமும் பயன்படுத்தும் எல்லா காய்கறி மற்றும் பழ கழிவுகளையும் இதனுள் போட்டு வரலாம். சமைத்த உணவுகளை கூட போடலாம் ஆனால் அதில் உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். கெட்டுப்போன சாதத்தை கூட போடலாம். குறைந்தது ஒரு மாதம் வரை இப்படி சேகரித்து வர மண்பானை நிறைந்துவிடும். பின்னர் அப்படியே கொஞ்சகாலம் விட்டுவிட்டால் அதன் உள்ளே இருக்கும் கழிவுகள் அத்தனையும் மண்ணோடு மண்ணாக மக்கி சுத்தமான உரமாக உதிரி உதிரியாக நமக்கு கிடைக்கும்.

natural-uram

உங்கள் கைகளில் எடுத்து பார்த்தால் கைகளில் ஒட்டாமல் உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அந்த பதத்திற்கு வந்ததும் அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி பொடித்து பின்னர் உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் எல்லா வகையான செடிகளுக்கும் ஒரு கைப்பிடி அளவிற்கு உரமாக தினமும் கொடுத்து வரலாம். இதற்காக உரத்தை கடையில் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. இயற்கையாகவே நாமே அதிசக்தி வாய்ந்த இந்த உரத்தை தயாரித்து பயன் பெறலாமே!

- Advertisement -