மணமணக்கும் மல்லி சட்னி இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க தட்டுல வெச்ச இட்லி காணாம போயிடும்! எவ்வளவு கொடுத்தாலும் பத்தவே பத்தாது அவ்வளவு ருசியா இருக்கும்.

malli-chutney
- Advertisement -

கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா எல்லாம் சேர்த்து செய்யும் இந்த மல்லி சட்னி ரொம்பவே சுவையானதாக இருக்கும். சட்டுனு அஞ்சு நிமிஷத்துல செஞ்சிடலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக செய்யக்கூடிய இந்த சட்னி மணமும், சுவையும் அலாதியாக இருக்கும் என்பதால் வீட்டில் இருக்கும் அனைவரும் நிச்சயம் உங்களை பாராட்டுவார்கள். மல்லித்தழை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை செய்யக் கூடியது என்பதால் அடிக்கடி செய்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான இந்த மல்லி சட்னி எப்படி அரைப்பது? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – 1, கொத்தமல்லி தழை – ஒரு கப், புதினா – அரை கப், பூண்டு பல் – 5, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், புளி – சிறு கோலி குண்டு அளவு, உப்பு – தேவையான அளவு, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு, அரை ஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

மல்லி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவை லேசாக வதங்கியவுடன் ரெண்டு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். வெங்காயத்தை லேசாக வதக்கினால் போதும், அதிகம் வதங்க வேண்டிய அவசியம் இல்லை.

onion-rice1

வெங்காயம் வதங்கியதும் ஒரு கொத்து கறிவேப்பிலையை உரிவி சேர்த்து போடுங்கள். பின்னர் ஒரே ஒரு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். தக்காளி லேசாக வதங்கியதும் ஒரு கப் அளவிற்கு நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். இதனுடன் அரை கப் அளவிற்கு புதினா இலைகளை சேர்த்து சுருள வதக்கவும். இலைகள் சுருள வதங்கியதும், ஐந்து பூண்டுப் பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் எந்த பொருட்களும் அதிகம் வதங்க வேண்டிய அவசியமில்லை, லேசாக வதக்கி விட்டால் போதும்.

- Advertisement -

பூண்டு வதங்கியதும் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தேங்காயை துண்டுகளாக வெட்டியும் சேர்க்கலாம். பின்னர் ஒரு சிறு குண்டு கோலிகுண்டு அளவிற்கு புளி சேர்த்து வதக்குங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒருமுறை நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். அடுப்பை அணைத்த பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்த்து வதக்குங்கள். பொட்டுகடலை வாசனை மாறிவிடக்கூடாது எனவே அடுப்பை அணைத்த பிறகு சேருங்கள். லேசாக வதக்கி பின்னர் ஆற வைத்து விடுங்கள்.

malli-chutney1

இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். பின்னர் கடுகு போட்டு பொரிய விடுங்கள். உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் கிள்ளி சேர்த்து சட்னியில் தாளித்துக் கொட்டுங்கள். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமாக இதே மாதிரி ஐந்தே நிமிடத்தில் இந்த மணமணக்கும் மல்லி சட்னி செய்து நீங்களும் அசத்தி விடுங்கள்!

- Advertisement -