மனக்குழப்பம் நீங்க சிவன் வழிபாடு

mana kulappam
- Advertisement -

நம்முடைய மனதை குரங்கிற்கு இணையாக ஒப்பிடும் வழக்கம் இருக்கிறது. குரங்கு நிலையாக ஒரு இடத்தில் இருக்காது. மரத்திற்கு மரம் தாவிக்கொண்டே செல்லும். அதே போல் மனிதனின் மனமும் ஒரு நிலையில் திருப்தி அடையாமல் ஒன்றிலிருந்து மற்றொன்று என்று தாவிக்கொண்டே இருக்கும். இது இல்லை என்றால் அது, அது இல்லை என்றால் இது என்று மாறிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட மனதிற்கு காரணமாக விளங்க கூடியவர் சந்திர பகவான். சந்திர பகவானால் தோஷங்கள் ஏற்பட்டால் மனரீதியான பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சந்திர பகவானின் தோஷத்தை நீக்குவதற்கு சிவபெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மனோகாரகன் என்று கூறக்கூடியவர் சந்திர பகவான். நம்முடைய மனநிலையை மாற்றும் வல்லமை படைத்தவராக இவர் திகழ்கிறார். சந்திர பகவானால் பாதிக்கப்பட்ட ஜாதகக்காரர்கள் மனரீதியான குழப்பத்தில் ஆளாகி திளைக்க கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களால் மனதை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.

- Advertisement -

அதனால் தான் பொதுவாக அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மனம் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாகி இருப்பவர்களும், ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பவர்களும் எப்படி அவர்களுடைய நிலையை சரி செய்து கொள்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

சந்திர பகவானின் பரிபூரணமாக அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானை வழிபட வேண்டும். சந்திர பகவானுக்குரிய நாளான திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபட சந்திர பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. திங்கள் கிழமை அன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது சந்திர பகவானுக்குரிய நிறமான வெள்ளை நிற பூக்களை வாங்கிக் கொண்டு சென்று சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு சிவபெருமானுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 21 வாரங்கள் திங்கட்கிழமைதோறும் நாம் சிவபெருமானிற்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். 21 வது வாரம் வழிபாடு செய்ய செல்லும் பொழுது அரிசியால் செய்யப்பட்ட வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பிரசாதத்தை வீட்டிலேயே செய்து எடுத்துக் கொண்டு போய் சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த நெய்வேத்தியத்தை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளால் சந்திரனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். மனக்குழப்பங்கள் அகழும். இந்த வழிபாட்டை நாம் ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. முதல் வாரமும் கடைசி வாரமும் மட்டும் ஆலயத்திற்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொண்டு விட்டு நடுவில் இருக்கக்கூடிய மற்ற வாரங்களில் வீட்டிலேயே சிவபெருமானின் படத்திற்கபடத்திற்கு அல்லது சிலைக்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி வைத்து வெள்ளை நிற மலர்களால் அவருக்கு அலங்காரம் செய்து நாம் வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே: பொருளாதார நிலை உயர செல்ல வேண்டிய ஆலயங்கள்

மிகவும் எளிமையான இந்த வழிப்பாட்டு முறையை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களின் வாழ்க்கையில் மனக்குழப்பம் என்பதற்கு இடமே இருக்காது. மன தைரியத்தோடு அனைத்து காரியங்களையும் செய்து வெற்றி பெறலாம்.

- Advertisement -