நாளை தமிழ் வருடப் பிறப்பிற்கு அறுசுவையும் சேர்ந்த மாங்காய் பச்சடியை மிக மிக சுலபமான முறையில் எப்படி செய்வது? மிஸ் பண்ணாம இத நாளைக்கு உங்க வீட்லயும் செஞ்சு பாருங்க!

maangai-pachadi

நம்மில் நிறைய பேர் வீடுகளில் நாளை அறுசுவை உணவு சமைக்கப்படும். அதில் அறுசுவை களையும் சேர்த்து சுலபமான முறையில் ஒரு மாங்காய் பச்சடியை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, இந்த ஆறு சுவைகளும் அறுசுவைகளில் அடங்கி விடுகின்றது. ஒவ்வொருவர் வீட்டிலும், ஒவ்வொரு முறைகளில் இந்த மாங்காய் பச்சடி சமைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதில் ஒரு சுலபமான முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

maangai-pachadi1

முதலில் ஒரு பெரிய அளவு மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். தோல் சீவாமலும்  வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம் அது அவரவருடைய இஷ்டம்தான். 150 கிராம் அளவு வெல்லத்தை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சமைக்கும்போது மாங்காய் கொட்டையை சேர்த்து சமைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கொட்டையில் துவர்ப்பு தன்மை சேர்ந்திருக்கும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் 1/2 ஸ்பூன் கடுகு தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக வெட்டி வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளை கடாயில் சேர்த்து, ஒரு நிமிடம் எண்ணெயில் நன்றாக வதக்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, உப்பு – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து கலந்து ஒரு மூடி போட்டு 3 நிமிடங்கள் வேக வைத்தாலே மாங்காய் நன்றாக வெந்து விடும்.

maangai-pachadi2

மாங்காய் வெந்தவுடன் தூள் செய்து வைத்திருக்கும் வெல்லத்தை மாங்காயுடன், கடாயில் சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும். சூட்டில் வெல்லம் நன்றாக உருகி பிசுபிசுப்பு தன்மை வரும் போது, அடுப்பை அணைத்து விடுங்கள். வெல்லம் நன்றாக கரைந்து கெட்டி பதம் வர 8 லிருந்து 10 நிமிடங்கள் வரை எடுக்கும். (வெள்ளத்தின் பச்சை வாடை முழுமையாக நீக்கி, பார்க்கும்போதே கண்ணாடி பதத்திற்கு வர வேண்டும்.)

உங்களுடைய வெல்லம் பாகு வெல்லம் ஆக இருந்தால் இதனுடைய சுவை மேலும் அதிகரிக்கும். கடையிலிருந்து வாங்கும்போது பாகு வெல்லம் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மாங்காய் பச்சடியை புளிப்பு மாங்காயிலும் செய்யலாம். ஒட்டு மாங்காயை வைத்தும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நீங்கள் வாங்கியிருக்கும் வெல்லத்தில் தூசு அதிகமாக இருந்தால் வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டியும் மாங்காயோடு சேர்த்துக்கொள்ளலாம்.

maangai-pachadi3

இறுதியாக 2 வேப்பம் பூவை எண்ணெயில் வதக்கி, பச்சடியின் மேல் சேர்த்துக் கொண்டால், அறுசுவையும் சேர்ந்த மாங்காய் பச்சடி தயார். நிறைய பேர் வீடுகளில் இதை, தமிழ் புத்தாண்டு அன்று செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். நீங்களும் இந்த தமிழ் புத்தாண்டுக்கு, இந்த முறையில் மாங்காய் பச்சடி செய்து சுவைத்து மகிழ வேண்டும் என்பதற்காக இந்தக் குறிப்பு உங்களுக்காக. ட்ரை பண்ணி பாருங்க நிச்சயம் நல்ல வரும்.