ஒரே ரோஜா பூச்செடியில் பலவித வண்ணங்களில் பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ரொம்ப ஈஸி மெத்தட் தான் நீங்களே வீட்டில் செய்துவிடலாம்.

rose-plant-graft
- Advertisement -

நம் வீட்டுத் தோட்டத்தில் எந்தச் செடிகள் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ரோஜா செடி இருக்கும். ரோஜாவை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அனைவரின் கண்களையும், மனதையும் கொள்ளை அடிக்கும் ரோஜா செடியில் ஒரு வண்ணத்தில் மட்டும் பூக்கள் பூக்கும். வேறு வண்ணம் வேண்டுமென்றால் வேறு செடியை தான் நாம் தேட வேண்டும். அப்படி செய்யாமல் ஒரே ஒரு ரோஜா செடியில் பலவித வண்ணங்களில் பூக்கள் பூக்க ஒட்டு கட்ட வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

white-rose

வீட்டிலிருக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வண்ணத்தில் ரோஜா பூவை விரும்புவர். ஒருவருக்கு வெள்ளை ரோஜா பிடிக்கும் என்றால், மற்றொருவருக்கு சிகப்பு ரோஜா பிடிக்கும். இன்னும் சிலருக்கு இன்னும் சில வண்ண பூக்கள் பிடிக்கும். அவர்களை திருப்தி படுத்தவே முடியாது. எல்லா வண்ணங்களிலும் செடியை வாங்கி வைக்க நம்மிடம் போதிய இட வசதி மற்றும் பண வசதி இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒட்டு கட்டி பல வண்ண பூக்களை உற்பத்தி செய்யும் செடியை பல 100க்கு விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள். அதிக விலை கொடுத்து இந்த செடிகளை நீங்கள் வாங்க தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே எப்படி ஒட்டு கட்டி நிறைய வண்ணப் பூக்களை உங்கள் செடியில் பூக்க வைக்க முடியும் என்பதை இனி பார்ப்போம்.

Roja chedi

முதலில் நீங்கள் எந்த வண்ண ரோஜாப்பூ செடியை வைத்திருக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் சிகப்பு வண்ண ரோஜா செடியை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு இப்போது வெள்ளை ரோஜா, மஞ்சள் ரோஜா போன்றவையும் உங்கள் செடியில் பூக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது, அந்த வண்ணத்தில் இருக்கும் ரோஜா செடியை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கலாம் அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் இருக்கலாம்.

- Advertisement -

அந்த செடியில் மொட்டுக்கள் விடும் சிறு பகுதி நமக்கு தேவைப்படும். அதை சொல்லி கேட்டு வாங்கி வாருங்கள். அதை எப்படி எடுக்க வேண்டும் தெரியுமா? பொதுவாகவே ரோஜா செடி அதிகம் பூக்கள் பூக்க நீங்கள் செடியை கொடி போல் வளர விடக்கூடாது. இது பெரும்பாலானோர் செய்யும் தவறு. ரோஜா செடி செடியாக தான் இருக்க வேண்டும். அதை அடிக்கடி வெட்டி வர வேண்டும். வாடிய இலைகள் இருக்கும் பகுதிகளை கத்தரித்து கொண்டே வர வேண்டும். அப்போது தான் செடியில் செழுமையாக பூப்பூக்கும்.

rose-graft

அதுபோல் வெட்டிய பிறகு அந்த செடியில் இருப்பதிலேயே தடிமனான கிளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிளையில் ஒரு மொட்டாவது இருக்க வேண்டும். அந்த மொட்டு இருக்கும் பகுதியை சுற்றி மட்டும் லேசாக பிளேடால் கீறி தண்டை சேதப்படுத்தாமல் எடுத்து தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். இதுபோல் உங்களுக்கு தேவையான வண்ணங்களில் தண்டுடன் ஒட்டியிருக்கும், முளைவிடத் தயாராக இருக்கும் மொட்டு பகுதியை மேலே இருக்கும் படத்தில் இருப்பதை போல் கீறி எடுத்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொண்டு வாருங்கள்.

- Advertisement -

rose-graft1

இப்போது நம் வீட்டு ரோஜா செடியிலும் தடிமனான தண்டு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதில் நடுப்பகுதியில் மேலே உள்ள படத்தில் காட்டியது போல் T போன்ற வடிவத்தில் தண்டின் தோல் பகுதியை தோலை கிழித்து கொள்ளுங்கள். இதை செய்யும் பொழுது ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அவசரப்படக்கூடாது. பொறுமையாக செய்ய வேண்டும் அப்போது தான் கையோடு வந்து விடாமல் கிளையின் தோல் அழகாக T போன்று கிழிந்து வரும். இப்போது T யில் இருக்கும் கீழ் பகுதி இரண்டாக விரிவடையும். அந்த இடத்தில் நீங்கள் வெட்டிக் கொண்டு வந்த மொட்டு பகுதியை நேராக வைத்து அழுத்திப் பிடித்து மொட்டை மட்டும் விடுத்து, மேலேயும் கீழேயும் நன்கு இறுக்கமாக பாலிதீன் கவர் கொண்டு கட்டி விட வேண்டும்.

rose-graft2

இது போல் கட்டி முடித்த பிறகு நாற்பது நாட்களுக்குள் மொட்டு துளிர்த்து நீங்கள் கேட்ட வண்ணத்தில் பூ பூக்க ஆரம்பித்து விடும். இதே போல் தான் மற்ற வண்ணங்களையும் செய்ய வேண்டும். இப்படி ஒட்டு கட்டினால் ஒரே செடியில் நிறைய பூக்களை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். மொட்டு நேராக இருப்பது தான் இதில் முக்கியமாக பார்க்க வேண்டும். தலைகீழாக கட்டிவிட்டால் தோல்வி அடைந்து விடும். இப்படி செய்வதால் நம் ரோஜா செடி பார்ப்பதற்கு பல வண்ணங்களில் மிகவும் அழகாகவும், ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த வண்ணத்திலும் ரோஜா பூவை சூடி மகிழலாம். நீங்களும் முயற்சி செய்து பலனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
நீங்க வேணாம்னு தூக்கி போட்ற இந்த 4 பொருள் போதும்! உங்கள் வீட்டில் மொட்டுக்கள் விடாத ரோஜா செடியில் கொத்து கொத்தா ரோஜாப்பூ ஆரோக்கியமா வளர வைக்கலாம்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -