மொறுமொரு கோவக்காய் ஃப்ரை ருசியாக இப்படித் தான் செய்ய வேண்டுமா? இதை தெரிஞ்சுக்காம போயிட்டோமே!

kovakkai-fry2
- Advertisement -

கோவக்காய் வறுவல் செய்யும் பொழுது பலரும் செய்யும் தவறு ஒன்று உண்டு. இதனால் கோவக்காய் ஃப்ரை ருசி குறைந்து விடுகிறது. ருசி மிகுந்த மொறுமொறு கோவக்காய் ஃப்ரை சுலபமாக எப்படி நம் கையால் வீட்டிலேயே செய்வது? சதா ஒரே காய்கறி வகைகளை பொரியல் செய்து கொடுத்து அழுத்து போனவர்களுக்கு கோவக்காய் போன்ற வித்தியாசமான காய்கறிகளை செய்து கொடுத்து பாருங்கள், தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் சாப்பிட்டு விடுவார்கள். சுவையான கோவக்காய் மொறுமொரு ஃப்ரை எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

கோவக்காய் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கோவைக்காய் – கால் கிலோ, மல்லித் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கோவக்காய் ஃப்ரை செய்முறை விளக்கம்:
முதலில் கால் கிலோ கோவக்காயை நன்கு சுத்தம் செய்து இரண்டு பக்க முனைகளையும் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கோவக்காயை நான்காக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள். நீளநீளமாக வெட்டும் பொழுது சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். கோவக்காய் நறுக்கி வைத்த பிறகு தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நறுக்கி வைத்துள்ள கோவக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். எண்ணெயிலேயே கோவக்காயை வதக்க வேண்டும்.

- Advertisement -

தண்ணீர் தெளித்து வதக்கினால் அதன் சுவை முற்றிலும் மாறிவிடும். கோவக்காய் ஃப்ரை செய்யும் பொழுது பலரும் செய்யும் தவறு இதுதான்! கோவக்காய் நீர் விடும் தன்மை கொண்டது, எனவே அந்தத் தண்ணீரிலேயே கோவக்காய் வெந்துவிடும். நாம் தண்ணீர் தெளிக்க கூடாது. தேவையான அளவிற்கு அரை உப்பு சேர்த்து இப்போது வதக்குங்கள். கடைசியாக உப்பு சரி பார்த்து கொள்ளலாம். தேவைப்பட்டால் எண்ணெய் கொஞ்சம் கூடுதலாக விட்டுக் கொள்ளுங்கள். முக்கால் பதத்திற்கு நன்கு சுருள வதக்க வேண்டும். அதன் பிறகு மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.

மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீரி மிளகாய்த்தூள் பயன்படுத்தினால் பார்ப்பதற்கு செக்கச்செவேலென சூப்பராக இருக்கும். மசாலாவை போட்டவுடன் நன்கு பிரட்டி விட வேண்டும். காயுடன் மசாலா நன்கு ஒட்டிக் கொள்ள பிரட்டி விடுங்கள். பின்னர் மூடி போட்டு மூடி வைத்து வேக வையுங்கள். ஐந்து நிமிடம் மசாலாவுடன் சேர்ந்து கோவக்காய் நன்கு வெந்து வரும். அதன் பிறகு உப்பு, காரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். மூடியைத் திறந்து 2 நிமிடம் பிரட்டி விட்டு எடுத்தால் சுடச்சுட கோவக்காய் ஃப்ரை தயார்! சூடான சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் தொட்டு சாப்பிட்டு பாருங்கள், செம டேஸ்டா இருக்கும்.

- Advertisement -