குறைகளை நீக்கும் முப்பெரும் தேவியர் வழிபாடு

mupperum deviyar
- Advertisement -

ஒரு குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து அந்த குழந்தை கேட்பதற்கு முன்பாகவே செய்யக்கூடிய ஆற்றல் மிக்கவள் தான் தாய். அப்படி இந்த உலகத்தின் தாயாக கருதப்படுபவர்கள் தான் முப்பெரும் தேவியர். இந்த முப்பெரும் தேவியரை எந்த முறையில் வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி இந்த மூன்று தெய்வங்களையும் தான் நாம் முப்பெரும் தேவியர் என்று கூறுகிறோம். இவர்களை வழிபடும் நாட்களை தான் நவராத்திரி என்று கூறுகிறோம். நவராத்திரி சமயத்தில் மட்டும் இவர்களை வழிபட்டால் பத்தாது. நம்மால் இயன்ற அளவு அடிக்கடி இவர்களை நாம் வழிபட வேண்டும். அதுவும் ஒருசேர வழிபட வேண்டும், அதுதான் மிகவும் குறிப்பிடத்தக்கது. வீரத்தை தரக்கூடிய துர்க்கையையும், செல்வத்தை தரக்கூடிய லட்சுமியையும், ஞானத்தை தரக்கூடிய சரஸ்வதியையும் ஒருசேர வழிபட்டால் அவர்கள் நம் வாழ்வில் என்ன குறை இருக்கிறதோ அதை நிவர்த்தி செய்வார்கள்.

- Advertisement -

முப்பெரும் தேவியர் வழிபாடு
இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய சுப முகூர்த்த நாளாக பார்த்து தேர்வு செய்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பூக்களை சுற்றி வையுங்கள். நடுவில் இருக்கக்கூடிய இடத்தில் மூன்று வெற்றிலைகளை வைக்க வேண்டும். வெற்றிலையின் நுனியானது கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். கடைகளில் அம்மனின் முகம் விற்கப்படும். அந்த முகத்தை வாங்கி வந்து ஒரு வெற்றிலையில் வைக்க வேண்டும். மற்றொரு வெற்றிலையில் விரலி மஞ்சளும், மற்றொரு வெற்றிலையில் கற்கண்டையும் வைக்க வேண்டும்.

இப்பொழுது மூன்று வெற்றிலைகளை வைத்து விட்டோம் அதை சுற்றி மஞ்சள் நிற பூக்களையும் வைத்து விட்டோம். அகலில் நெய் விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் தாழம்பூ குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். “ஓம் தும் துர்கையே போற்றி, ஓம் மகாலட்சுமியே போற்றி, ஓம் சரஸ்வதி தேவியே போற்றி” என்று 108 முறை கூறி அம்மனின் முகத்திற்கு முன்பாக குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தூப ஆராதனை காட்டவும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். தினமும் வெற்றிலை, மஞ்சள், கற்கண்டு, பூ இவற்றை மாற்ற வேண்டும். குங்குமத்தை தனியாக எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்த பிறகு கற்கண்டை பிரசாதமாக சாப்பிட வேண்டும். விரலி மஞ்சளை ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அந்த வெற்றிலையுடன் சேர்த்து மடித்து தங்கள் பர்ஸ்ஸில் வைத்துக் கொள்ளலாம். பெண்கள் உபயோகப்படுத்துவதாக இருந்தால் மஞ்சள் கயிறு கட்டி திருமாங்கல்யத்துடன் சேர்த்து கட்டிக் கொள்ளலாம்.

குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். ஒன்பது நாட்கள் முடிந்த பிறகு அம்மனின் முகத்தை அம்மன் படத்துடன் சேர்த்து வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர தீப வழிபாடு

நம்பிக்கையுடன் யார் ஒருவர் முப்பெரும் தேவியர் வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய குறைகள் அனைத்தையும் நீக்கி நிறைவான வளத்தை அருள்வார்கள்.

- Advertisement -