முருங்கைக் கீரையில் கேரட்டா? இந்த காம்பினேஷன் சும்மா அட்டகாசமா இருக்கும். ஒருமுறை இந்த பொரியலை ட்ரை பண்ணி பாருங்க.

keerai_tamil
- Advertisement -

ஒரே மாதிரி சுவையில் சமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் முருங்கைக் கீரையையும் சாப்பிட மாட்டார்கள். கேரட்டையும் சாப்பிட மாட்டார்கள். பெரியவர்களுக்கும் போர் அடித்து விடும். கொஞ்சம் வித்தியாசமாக முருங்கைக்கீரை உடன் கேரட்டை போட்டு இந்த முறையில் ஒரு பொரியல் செய்து பாருங்கள். சுவை சும்மா அட்டகாசமா இருக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இதேபோல முருங்கைக் கீரையை வைத்து கூட்டு ரெசிபியையும் இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க புதுமையான இந்த 2 ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

குறிப்பு 1:
முருங்கைக் கீரையை முதலில் சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு அலசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய கேரட்டை தோல் சீவி துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது அளவு என்று பார்த்தால் 3 கைப்பிடி அளவு முருங்கை கீரைக்கு, 1 கேரட் சரியாக இருக்கும். பெரிய அளவு அழுத்தம் கொடுத்து எடுத்த மூன்று கைப்பிடி முருங்கைக்கீரை. ஏனென்றால் முருங்கைக்கீரை வதங்கியவுடன் ரொம்பவும் சுருங்கிவிடும். முருங்கைக்கீரை மூன்று பங்கு என்றால், துருவிய கேரட் ஒரு பங்கு.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதங்கி வந்ததும், துருவிய கேரட்டை போட்டு 2 நிமிடம் போல வதக்கி விட்டு, அதன் பின்பு எடுத்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையையும் அந்த கேரட்டில் போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். எண்ணெயில் திறந்தபடி மூன்று நிமிடங்கள் வதங்கும் போதே முருங்கைக்கீரை வெந்து சுருங்கி கிடைத்து விடும். இது அப்படியே ஒரு பக்கம் வேகட்டும். (மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.)

இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொஞ்சம் பெரிய பூண்டு பல் – 2, தேங்காய் துருவல் – 1/4 கப் போட்டு, கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டி வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் வெந்து கொண்டிருக்கும் கேரட் துருவல் முருங்கைக் கீரை நன்றாக வெந்து தயாராகி வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். தண்ணீர் எல்லாம் சுண்டி வந்ததும் இறுதியாக தேவையான அளவு உப்பையும் இதன் மேலே தூவி நன்றாக ஒரு முறை கலந்து விட்டு சுடச்சுட இந்த பொரியரை பரிமாறினால் சூப்பரான சுவையில் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
வெறும் முருங்கைக் கீரையை வைத்து சுலபமாக கசப்பு தெரியாமல் குழந்தைகள் சாப்பிடும் படி ஒரு கூட்டு. இதில் பருப்பு சேர்க்கப் போவதில்லை. தேங்காய் தான் அரைத்து ஊத்த போகின்றோம். இருந்தாலும் இதை கூட்டு பொரியல் எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 4 பூண்டு பல்லை நன்றாக நசுக்கி போட்டு, 2 வர மிளகாய் கிள்ளி போட்டு, 3 கைப்பிடி முருங்கைக் கீரையை போட்டு, லேசாக வதக்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கீரைக்கு தேவையான அளவு உப்பு போட்டு, இதை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

கீரை வேகட்டும் அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் 2 கைப்பிடி அளவு, சீரகம் 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 2, கொஞ்சமாக கொத்தமல்லி தழை, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இதை விழுது போல அரைத்து வெந்து கொண்டிருக்கும் முருங்கைக்கீரையில் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு மீண்டும் ஒரு மூடி போட்டு கீரையை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் நன்றாக சுண்டி வந்ததும்,  தேங்காய் பச்சை மிளகாய் சீரகத்தின் பச்சை வாடை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு, சுட சுட இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் மிக மிக சுவையாக இருக்கும். இதை குழந்தைகளுக்கும் சாதத்தில் போட்டு பிசைந்து கொடுத்தால், விருப்பமாக சாப்பிடுவார்கள். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -