நார்த்தங்காய் பச்சடி செய்முறை

narthangai pachadi
- Advertisement -

அறுசுவையும் உணவில் சேர்த்துக் கொண்டால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான் அன்றைய காலத்தில் மதிய நேரத்தில் அறுசுவைகளும் கலந்தாற்போல் சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் இன்றைய காலத்திலோ பலருக்கும் பல சுவைகள் அறியாமலேயே போய்விட்டது. அப்படிப்பட்ட சுவைகள் சேர்ந்த பொருளாக தான் நார்த்தங்காய் திகழ்கிறது. இந்த நார்த்தங்காய் எலுமிச்சம் பழத்தின் வகையை சார்ந்ததாக திகழ்கிறது. நார்த்தங்காயை பொருத்தவரை பலரும் ஊறுகாய் செய்து சாப்பிடுவார்கள். இதனுடைய சுவை சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதால் யாரும் அந்த அளவிற்கு இதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட நார்த்தங்காயை இனிப்பாக எப்படி பச்சடி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நார்த்தங்காயில் அதிக அளவு விட்டமின்கள், சிட்ரிக் ஆசிட், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதனால் மலச்சிக்கல் மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. மேலும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு நார்த்தங்காய் உதவுகிறது. ரத்தம் சுத்தம் அடையும். வாதம், வயிற்றுப்புண், வயிற்றுப்புழு போன்றவற்றை நீக்கும். பசியை தூண்டும். உடல் சூட்டை தணிக்கும். பித்தத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் நீங்கும். உடல் வலுப்பெறும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • நார்த்தங்காய் – 4
  • மிளகாய்த்தூள் – 4 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – 4 டேபிள் ஸ்பூன்
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பழுத்த நார்த்தங்காயாக பார்த்து தண்ணீர் ஊற்றி கழுவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய இந்த நார்த்தங்காயை குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.

குலைய வெந்த பிறகு அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் இவற்றை சேர்க்க வேண்டும். கடுகு பொறிந்ததும் வேக வைத்திருக்கும் நார்த்தங்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் கரைத்து வைத்திருக்கும் புளி, மிளகாய் தூள், வெல்லம், பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும். அவ்வப்பொழுது மூடியை திறந்து கிண்டி விட வேண்டும். இல்லையெனில் அடி பிடித்து விடும்.

தண்ணீர் அனைத்தும் வற்றி எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த நார்த்தங்காய் பச்சடி நாகர்கோவில் பகுதியில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய ஒரு உணவு பொருளாகும். மதிய வேளையில் இந்த நார்த்தங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் வெயிலினால் ஏற்படக்கூடிய வெப்பத்தின் தாக்குதல் குறையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வாழைத்தண்டு சட்னி செய்முறை

மிகவும் எளிமையான முறையில் ஆரோக்கியமான நார்த்தங்காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த முறையில் செய்து தந்து முழுமையான பலனை பெறுவோம்.

- Advertisement -