தேங்காய் சேர்த்து இப்படி ஒருமுறை தக்காளி சட்னி அரைத்து கொடுத்தா கூடுதலா 2 இட்லி சாப்பிடுவாங்க! சுவையான தக்காளி சட்னி இப்படித்தான் அரைக்கனுமா?

onion-tomato-chutney
- Advertisement -

தினமும் காலையில் இட்லி, தோசைக்கு சட்னி அரைப்பவர்கள் விதவிதமான வகைகளில் சட்னியை அரைத்துக் கொடுத்தால் கூடுதலாக இரண்டு இட்லியை சேர்த்து சாப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த வகையில் இப்படி தேங்காய், புதினா, கறிவேப்பிலை இலைகளை எல்லாம் சேர்த்து ஒரு முறை தக்காளி, வெங்காயம் சட்னி அரைச்சு பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடித்துப் போய்விடும். சுவையான தக்காளி சட்னி அரைப்பது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – 3 இணுக்கு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, புதினா – அரை கைப்பிடி, தேங்காய் – ஒரு பத்தை, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மல்லி, புதினா, கறிவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.

வெங்காயம் வதங்குவதற்குள் உங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை கண்ணாடி பதம் வர நன்கு வதங்கி வரும் பொழுது பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். தக்காளி, வெங்காயம் ஓரளவுக்கு மசிய வதங்கி வரும் பொழுது இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.

- Advertisement -

பின்னர் நறுக்கிய மல்லித்தழை, சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகள், கொஞ்சம் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்து நன்கு வதங்கிய பிறகு துருவிய தேங்காய் அல்லது நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு அடுப்பில் தாளிப்பு கரண்டியை ஒன்றை வைத்து காய விடுங்கள். அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விடுங்கள். பின் அரைத்த சட்னியுடன் கொட்டி சுட சுட இட்லியுடன் பரிமாறவும், அருமையாக இருக்கும். ருசியான தக்காளி சட்னி இதே போல நீங்களும் செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -