அருள்மிகு ஓதிமலை முருகன் கோவில் தல வரலாறு

- Advertisement -

ஓதிமலையாண்டவர்:
ஒருமுறை பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டார். படைக்கும் தொழிலை செய்து வந்த முருகப்பெருமானுக்கு அந்த சமயம் ஐந்து முகங்களும், எட்டு கரங்களும் இருந்தது. முருகன், சிவபெருமானின் அம்சம் அல்லவா? அதனால்தான் எம்பெருமானை போலவே, முருகனும் இத்தலத்தில் ஐந்து முகத்துடன் காட்சி தருகின்றார். முருகப்பெருமான், படைக்கும் தொழிலில் ஈடுபட்டபோது இருந்த இந்த உருவத்தில் தான் ஓதிமலையாண்டவராக இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இந்த உருவத்தில் முருகனை வேறு எந்த கோவிலிலும் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முருகனுக்கு ‘கவுஞ்சவேதமூர்த்தி’ என்ற மற்றொரு பெயரும் உள்ளது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, இக்கோவிலின் மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு ரூபமாக காட்சி தரும் விநாயகரை வழிபட்ட பின்பே, முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். முருகன், ‘பிரம்மாவிடம் இருந்து பெற்ற படைக்கும் தொழிலை, திரும்பவும் பிரம்மா இடமே கொடுக்க வேண்டும்’ என்பதை கூறுவதற்காக கைலாயத்திலிருந்து சிவபெருமான் மட்டும்தான் இந்த இடத்திற்கு வந்தார். இதனால் இத்தலத்தில் அம்பிகைக்கு என்ற எந்த தனி சந்நிதியும் இல்லை. சிவபெருமானுக்கு மட்டும் மலை அடிவாரத்தில் ஒரு தனிக் கோவில் இருக்கின்றது. பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டு பிரம்மாவை இரும்பு சிறையில் அடைத்து விட்டார். இதனாலேயே இந்த ஊருக்கு ‘இரும்பறை’ என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.

odhimalai-murugan

போகர் சித்தர் ஒரு முறை பழனி முருகரை தரிசிப்பதற்காக இந்த வழியில் வந்தார். அப்போது அவருக்கு பழனிக்கு செல்ல சரியான பாதை தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் முருகப் பெருமானை நினைத்து தவமிருந்தார். அப்போது இத்தலத்தில் உள்ள ஐந்து தலை முருகப்பெருமான்,  ஒரு தலை முருகனாக மாறி போகர் சித்தருக்கு பழனி மலைக்கு வழியை காட்டினார். ஒருமுகமாக அவதாரமெடுத்த முருகப்பெருமான் இத்தலத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறுமுக அவதாரத்தில் இருக்கும் முருகப்பெருமான், தன் உருவத்தை ஒரு முகத்துடன் மாற்றி போகருக்கு வழிகாட்ட சென்றதால், ஓதி மலையில் ஐந்து முகத்துடன் இருக்கின்றார் என்றும், மீதமுள்ள ஒரு முகத்தோடு குமாரபாளையத்தில் இருக்கின்றார் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றது.

- Advertisement -

தல வரலாறு:
பிரம்மதேவன் ஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக கைலாயத்திற்கு சென்றார். வழியில் இருக்கும் விநாயகரை மட்டும் தரிசனம் செய்துவிட்டு, முருகப்பெருமானை வணங்கிகாமலே சென்றுவிட்டார். பிரம்மதேவனை விட்டுவிடுவாரா முருகர்! பிரம்மாவை அழைத்து பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். வகையாக மாட்டிக் கொண்டார் பிரம்மதேவர். பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியவில்லை. ‘பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியாத நீ படைக்கும் தொழிலை செய்யக்கூடாது’ என்று கூறிய முருகப்பெருமான், பிரம்மாவை சிறையில் அடைத்துவிட்டு, படைக்கும் தொழிலை முருகப்பெருமானே ஏற்றுக்கொண்டார். முருகப் பெருமானின் இந்த படைப்பு ‘ஆதிபிரம்மசொரூபம்’ என்று அழைக்கப்பட்டது. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தது. இதனால் அவர்களுக்கு இறப்பு இல்லாமல் பூமியில் பாரம்தாங்க முடியவில்லை. பூமாதேவி தவித்து போய்விட்டாள். இதனால் படைப்புத் தொழிலை முருகப்பெருமானிடம் திரும்பவும் பெற்று, பிரம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பூமா தேவி சிவபெருமானிடம் வைத்தார்கள். பூமாதேவியின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் முருகப் பெருமானிடம் சென்று, பிரம்மாவை விடுவித்து அவருக்கே படைக்கும் தொழிலை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததால் இத்தலம் ‘ஓதிமலை’ என்ற பெயரை பெற்றதாக கூறுகிறது வரலாறு. இந்த சம்பவத்திற்குப் பின்பு பிரம்மாவிற்கும் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கூறி, சிறையில் இருந்து விடுவித்து படைக்கும் தொழிலை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் முருகப்பெருமான்.

odhimalai-murugan3

பலன்கள்:
எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே தொடங்குவார்கள். இது தொழிலுக்கு மட்டுமல்ல. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்தாலும் இந்த முருகப்பெருமானிடம் வரத்தைக் கேட்டு விட்டுத்தான், தங்களது வீட்டில் நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் இந்த ஊர் மக்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும் இந்த முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

செல்லும் வழி:
கோயம்புத்தூரில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் புளியம்பட்டி உள்ளது. அங்கிருந்து 10 கிலோ மீட்டர் சென்றால் இரும்பறையை அடையலாம்.

odhimalai-murugan

தரிசன நேரம்:
திங்கள், வெள்ளி, சஷ்டி, கார்த்திகை, அமாவாசை, தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். மார்கழி மாதத்திலும் இந்த நேரத்தில் கோவில் திறந்திருக்கும். பிற நாட்களில் கோவிலுக்கு செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே தொலைபேசியில் முன்பதிவு வாங்கிவிட்டு செல்வது நல்லது.

- Advertisement -

முகவரி:
அருள்மிகு ஓதிமலை ஆண்டவர் திருக்கோவில்,
புஞ்சைபுளியம்பட்டி வழி,
இரும்பரை-638 459,
மேட்டுப்பாளையம் தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம்.

தொலைபேசி:
+91-4254-287 428, 98659 70586.

இதையும் படிக்கலாமே
பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தின் பின்னணி என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Othimalai murugan temple history in tamil. Odhimalai murugan temple details in tamil. Othimalai murugan temple timings. Othimalai murugan kovil.

- Advertisement -