ஆரோக்கியம் மிக்க பச்சை பயறு பணியாரம் 10 நிமிடத்தில் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! அடிக்கடி செஞ்சு தர கேப்பாங்க.

pachai-payaru-paniyaram2
- Advertisement -

பச்சைப்பயிறு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு தானிய வகையாகும். முழு பச்சை பயறை ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதில் உளுந்து சேர்த்து செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வெகுவாக குறையும். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பச்சை பயறு பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

pachai_payaru

பச்சை பயறு பணியாரம் தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு – ஒரு கப், உளுந்தம் பருப்பு – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் மற்றும் உப்பு தேவையான அளவிற்கு.

- Advertisement -

பச்சைப்பயிறு பணியாரம் செய்முறை விளக்கம்:
முழு பச்சை பயரை முந்தைய நாள் இரவே ஊற வைப்பது மிகவும் நல்லது. அல்லது பச்சை பயறை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீர் ஊற்றி சுமார் 8 மணி நேரம் அளவிற்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதே போல உளுந்தம் பருப்பை சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் ஊறியதும் அவற்றை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

pachai-payaru-paniyaram

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை பயறை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேவையென்றால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின்னர் அதே ஜாரில் ஊற வைத்த உளுந்தை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை அரைக்க தேவையான அளவிற்கு தண்ணீரை மிகவும் கொஞ்சமாக எடுப்பது நல்லது. ஏனென்றால் மாவு நீர்த்து போய் இருக்க கூடாது, கெட்டியாக இருக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் தாளித்த பொருட்களை மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து கொள்ளுங்கள்.

pachai-payaru-paniyaram1

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் பணியார சட்டியை வையுங்கள். சட்டி சூடானதும் அதில் ஒவ்வொரு குழியிலும் கொஞ்சமாக எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். அப்போது தான் பணியாரம் ஒட்டாமல் அழகாக எடுக்க வரும். இப்போது குழிகளில் மாவை ஊற்றி வேக வைக்க வேண்டியது தான். ஒருபுறம் வெந்ததும் கம்பியால் திருப்பி போட்டு வேக விடவும். எல்லா புறமும் பணியாரம் வெந்ததும் சூடாக பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பச்சை பயிறு பணியாரம் ஆரோக்கியம் மிகுந்த ஒரு ஸ்னாக்ஸ் வகையாகும். நீங்களும் ஒருமுறை வீட்டில் முயற்சி செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -